புனித வனத்து அந்தோணியார் திருத்தலம்
இடம்: முத்துப்பட்டணம், R. S. மங்கலம் வழி, செங்குடி அஞ்சல், 623525
Facebook id: Muthupattanam Stantony Shrine
மாவட்டம்: இராமநாதபுரம்
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: ஆர்.எஸ் மங்கலம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அடைக்கல அன்னை ஆலயம், அளவிடங்கான்
2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், சேத்திடல்
பங்குத்தந்தை அருட்பணி. S. அமல்ராஜ்
Contact no: +91 74491 27603
குடும்பங்கள்: 46 (கிளைப்பங்குகள் சேர்த்து 122)
அன்பியங்கள்: 2
புனித வனத்து அந்தோணியார் அன்பியம்
புனித செபஸ்தியார் அன்பியம்
திருப்பலி நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
செவ்வாய் & வியாழன் மாலை 07:00 மணி திருப்பலி
வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி திருப்பயணிகளுக்கான திருப்பலி. மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி,
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி புனிதரின் சப்பர பவனி, திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, திருஎண்ணெய் பூசுதல், நற்கருணை ஆசீர்.
கிளைப்பங்குகளில் திருப்பலி:
ஞாயிறு காலை 06:30 மணி திருப்பலி (அளவிடங்கான்)
மாதத்தில் ஒரு ஞாயிறு மாலை 07:00 மணி திருப்பலி (சேத்திடல்)
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமை மாலையில் திருப்பலி (சேத்திடல்)
திருவிழா: மே மாதத்தில் முதல் சனி, ஞாயிறு
Church Map location: St. Anthony The Hermit's Church, Muthupattinam
https://maps.app.goo.gl/oCBjxvH19iHVXY7V7
வழித்தடம்: இராமநாதபுரம் -ஆர்.எஸ் மங்கலம் -முத்துப்பட்டணம்.
பேருந்து: தேவகோட்டை -உப்பூர்
வரலாறு:
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலத்திற்கு வடமேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில், சேத்திடல் ஊராட்சிக்கு உட்பட்ட சிறிய கிராமமே முத்துப்பட்டணம். இந்து, கிறித்தவர்கள் மேலும் பல சமூக இனத்தவர்கள் உட்பட மொத்தம் 120 குடும்பங்கள் நல்லிணக்கத்துடன் வாழும் சமூகமே முத்துப் பட்டணம் கிராமம். வடகிழக்கு பருவக் காற்றால் பெய்யும் மழையை நம்பியே விவசாயம் செய்யும் குறு விவசாயிகளே இக்கிராமத்தில் வாழ்கின்றனர். பலருக்கும் அறிமுகம் இல்லாத இக்கிராமம், இன்று எல்லோரையும் ஈர்க்கும் அருளின் கிராமமாக மாறியுள்ளதற்கு, இங்கு அமைந்துள்ள புனித வனத்து அந்தோணியார் திருத்தலமே காரணமாகும்.
புனித அருளானந்தருக்கு முதலில் விழா எடுத்த ஊர்:
முத்துப்பட்டணத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ முன்னோர், களிமண்ணால் புனித வனத்து அந்தோணியாருக்குச் சிற்றாலயம் எழுப்பி, கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட மக்களாய் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் 1854ஆம் ஆண்டில் கல்லடிதிடலில் பணிப் பொறுப்பேற்றுக் கொண்ட அருள்தந்தை பேவரெக்ஸ், 1853ஆம் ஆண்டில் அருளாளர் பட்டம் பெற்ற வணக்கத்துக்குரிய அருளானந்தருக்கு விழா எடுக்க முத்துப் பட்டணத்தைத் தேர்வு செய்து, மக்களோடு கலந்து உரையாடி, இராமநாதபுரம் அருள்தந்தை மாசாவிடமிருந்து அருளானந்தர் சுரூபத்தை முத்துப் பட்டணம் கொண்டு வந்தார். வணக்கத்துக்குரிய அருளானந்தர் மணிமுடிபெற்ற வீர நினைவு நாளைத் தேர்வு செய்து, 04.02.1856 ஆம் ஆண்டில் புனித அருளானந்தரின் சுரூபத்தை அச்சிற்றாலயப் பீடத்தில் வைத்துப் புனிதப்படுத்தி, கடனாகத் தேர் ஒன்று பெற்று முத்துப்பட்டணம் கிராம வீதிகளில் பவனியாக எடுத்துவந்து, மக்களின் ஒத்துழைப்போடு இவ்விழாவைச் சிறப்புற நடத்தியுள்ளார். இவ்விழாவே இப்பகுதியில் வணக்கத்துக்குரிய அருளானந்தருக்கு எடுக்கப் பட்ட முதல் விழாவாகும். இதனால் வணக்கத்துக்குரிய அருளானந்தருக்கு விழா நடத்திய முதல் ஊர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த முத்துப்பட்டணம் கிராமம். அன்று முதல் ஆண்டுதோறும் வணக்கத்துக்குரிய அருளானந்தருக்கு விழா எடுப்பது வழக்கமாய் இருந்துள்ளது.
தற்போதைய ஆலய வரலாறு:
வணக்கத்துக்குரிய அருளானந்தருக்கு வணக்கம் செலுத்தி விழா எடுத்து வந்த கிராம மக்கள், மண்சுவர் சிற்றாலயத்தை மாற்றிப் புதிய ஆலயம் அமைக்கத் திட்டமிட்டு 23.11.1903 ஆம் நாள் அடிக்கல் நாட்டியுள்ளனர். இந்த அடிக்கல்லானது இன்றும் ஆலய முகப்பில் அமைந்துள்ளது. பின்னாளில் முழுமை அடைந்த இப்புதிய வனத்து அந்தோணியார் ஆலயத்தை (தற்போதைய புதுமை ஆலயம்) 1910ஆம் ஆண்டில் கல்லடிதிடலில் பங்குத் தந்தையாக இருந்த அருள்திரு மாசில்லாமணி காலத்தில், திருச்சி ஆயர் மேதகு பெசாந்தியர் அவர்கள் தனது முதல் பங்கு விசாரணையின் போது அர்ச்சித்துள்ளார் என்பதை வரலாற்று ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறோம். அது முதல் ஆண்டுதோறும் ஆலயப் புனிதரும், ஊரின் பாதுகாவலருமான புனித வனத்து அந்தோணியாருக்குத் தொன்றுதொட்டு விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கம் இருந்துள்ளது.
புதுமை விளங்கும் ஆலயம்:
முத்துப்பட்டணம் மக்கள் மட்டுமல்ல அருகிலுள்ள கிராமத்தாரும், குறிப்பாக பிற சமயத்தாரும் புனித வனத்து அந்தோணியாரிடம் வேண்டுதல் வைத்து, இறையாசீரைப் பெற்றது புனிதரின் மீதுள்ள பக்தியை ஆண்டுக்கு ஆண்டு மேலும் அதிகரித்தது.
முதன் முதலாக சூராணத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ் அவர்களின் மனைவி செபஸ்தியம்மாள், தீய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு இக்கோவிலில் தங்கி இருந்து செபித்தார். அப்போது புனித வனத்து அந்தோணியாரின் வல்லமையான பரிந்துரையினால், தீயஆவி பெரும் கூச்சலிட்டு வெளியேறியது. அவர் நலமோடு வீடு சென்றதைக் கண்டு பலரும் நம்பிக்கையோடு இவ்வாலயம் வர ஆரம்பித்தனர்.
அதுபோன்று தொண்டி அருகிலுள்ள தளிர்மருங்கூரைச் சேர்ந்த அமிர்தம் மனைவி செபஸ்தியம்மாள், தீய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு, இவ்வாலயத்திற்கு வந்து தங்கி இருக்க, தீயஆவியானது புனிதரில் வெளிப்பட்ட இறைவல்லமையினால் வெளியேறியதோடு, படிப்பறிவில்லாத அப்பெண் பல மொழிகள் அடங்கிய மறைபுத்தகங்களின் பகுதிகளை
வாசித்ததும், தன் சக்திக்கு அப்பாற்பட்டு பெரும் பாறாங்கல்லைத் தூக்கியதும் புனிதர் மீது மக்கள் கொண்டிருந்த பக்தியை மேலும் வளர்த்தது.
மரைக்காயன் குடியிருப்பு ஊரைச் சேர்ந்த அமலோற்பவம் என்பவர் ஓர் ஆட்டினை புனித அந்தோணியாருக்கு நேர்ந்து வளர்க்க, அது வேறு ஒருவர் நிலத்தில் மேயும்போது அந்நிலத்து உரிமையாளர் அதனைப் பிடித்து ஆத்திரம் தீர அடித்துள்ளார். அப்போது "இந்த வாயில்லா ஜீவனை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்? இது புனித அந்தோணியாருக்கு நேர்ந்துள்ள ஆடு" என்று ஆடு வளர்த்தவர் கூற! அதற்கு அவர் "அந்தோணியார் ஆட்டுக்கு என்ன நாலு கொம்பா?" எனக் கேட்டுள்ளார். சொல்லிய ஒருசில தினங்களுக்குள்ளாக அந்த ஆட்டுக்கு வேறு இரண்டு புதிய கொம்புகள் முளைக்க, அதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தோடு! புனித வனத்து அந்தோணியாரின் மகிமையை உணர்ந்து, இப்புதுமை ஆலயம் வந்து நேர்த்திக்கடன் செய்ததாக வரலாறு. இந்நிகழ்வுக்கு இங்கு பராமரிக்கப்படும் அதே நாலு கொம்பு ஆட்டுத்தலையே சான்று.
மேலும் விவசாயத்திற்கு உதவிடும் கால்நடைகளுக்குப் பாதுகாவலாகக் கொண்ட புனித அந்தோணியாருக்கு, ஆடு மாடுகள் வழி நேர்த்திக் கடன் செலுத்துவதும், பொங்கல் வைப்பதும் அன்று முதல் இன்றுவரை நடந்து வருகிறது. இத்திருத்தலத்தைக் குறித்து "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார். இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது. இதுவே இறைவனின் இல்லம். விண்ணுலகின் வாயில்" (தொ.நூ. 28:16) என விவிலிய அடிப்படையில் கூறுதல் பொருத்தமே.
அற்புதங்கள் ஆயிரம்:
"இவ்விடத்தில் நான் நலம் நல்குவேன்" (ஆகாய் 2:7) என்ற இறை வார்த்தைக்கேற்ப இவ்வாலயத்திற்கு நம்பிக்கையோடு வந்து நேர்ச்சை செய்து செபிப்பவர்கள் நலம் பெறுவதும், குறிப்பாக அலகையின் பிடியிலிருந்து விடுபடுவதும், காணாமல் போன பொருள் மீண்டும் கிடைப்பதும், வழக்குகளில் எது மெய்யெனத் தெரிந்துகொள்ள சத்தியத்தின் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வதும், திருமண வரங்கள் அமைவதும், குழந்தைப் பாக்கியம் இல்லாதோர் கிடைக்கப் பெறுவதும், செய்வினைகளைச் செயல் இழக்கச் செய்வதும் போன்ற எண்ணற்ற புதுமைகள் நடந்தேற, இவ்வாலயம் தமிழகமெங்கும் புகழ்பெறத் பெறத் தொடங்கியது.
தரமான சாலை வசதியும், பேருந்து வசதியும், மேலும் இங்கு தங்க அடிப்படை வசதிகள் இல்லா நிலையிலும்கூட பக்தர்கள் இப்புதுமை ஆலயத்திற்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செபிப்பதும், இங்கு தங்கி (வாரத்திற்கு இருந்து) மன்றாடுவதும் இங்குள்ள புனித வனத்து அந்தோணியாரின் வல்லமையான பரிந்துரைக்குச் சான்றாய் அமைந்து வருகிறது.
இங்குள்ள ஆலயத்தில் பக்தர்கள் நேர்ச்சை வைத்துச் செபித்துப் பெற்ற நன்மைகளுக்கு நன்றியாக அவர்கள் வைத்துள்ள பொன், வெள்ளி காணிக்கைப் பொருள்களுமே இக்கோவிலின் பெருமையை மேலும் பறைசாற்றும் சான்றாகும்.
மறைமாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு:
இப்புதுமைமிகு ஆலயத்தை, 2008 செப்டம்பர் 20ஆம் நாள் வரை முத்துப்பட்டணம் இறை மக்களே நிர்வகித்துப் பராமரித்து வந்தனர். இத்திருத்தலத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், பக்தர்களின் ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், அருள்தந்தையர் இத்தலத்திலே தங்கிப் பணியாற்றப் பங்குத் தளமாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, இந்நிர்வாகத்தை மறைமாவட்டத்திற்கு ஒப்படைக்க முத்துப்பட்டணம் இறைமக்கள் முடிவு செய்து, 20.09.2008 அன்று முறைப்படி கல்லடிதிடல் பங்குத் தந்தை அருள்திரு. அகஸ்டின் இருதயம், ஆர்.எஸ். மங்களம் மறைவட்ட அதிபர் அருள்திரு. பிரான்சிஸ் ஜெயபதி அவர்கள் வழியாக மறைமாவட்டத்திற்கு எழுதிக் கொடுத்தனர். அதுமுதல் பங்குத் தந்தை வழியாக மறைமாவட்டம் பொறுப்பேற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
புதிய ஓர் ஆலயம்:
பழைமையான இப்புதுமை ஆலயம் சிறியதாகவும், நேர்ச்சைக்கும் நன்றியறிதலுக்கும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அனைவரும் இணைந்து திருப்பலி வழிபாடுகளில் பங்குபெற வசதியாக, முத்துப்பட்டணம் இறைமக்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி ஒரு புதிய ஆலயம் கட்டும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. அதற்கு ஏதுவாக ஆலயத்திற்கு முன்பு இருந்த வீடுகள் அகற்றப்பட்டு, ஆலய வளாகம் பெரிதாக அமைய உதவிய முத்துப்பட்டணம் இறைமக்களை நன்றியோடு நினைவுகூருகிறோம். மேலும் முத்துப்பட்டணம் இறைமக்களாலும், பக்தர்களின் பேருதவியினாலும் புதுமை ஆலயத்திற்கு அருகாமையில் கட்டப்பட்ட இப்புதிய ஆலயம் 23.04.2010ஆம் நாள் சிவகங்கை ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் D.D.,S.T.D. அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்குத்தளமாக உதயமானது:
அதன்பிறகு கல்லடிதிடல் பங்கில் பணியாற்றிய பங்குத் தந்தையர்கள் அருள்திரு. லா. அமல்ராஜ் (2010-12), அருள்திரு. திரவியம் (2012-13) அவர்கள்
திருத்தல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டனர். மறைமாவட்ட நிர்வாகம் இத்திருத்தல வளர்ச்சிக்காக கிளைப் பங்காக இருந்த முத்துப் பட்டணத்தை பங்குத்தளமாக உயர்த்த ஒப்புதல் அளித்தது. அதனைச் செயல்படுத்தும் விதமாக கல்லடிதிடல் பங்குத்தந்தையாக இருந்த அருள்திரு. திரவியம் அவர்கள் இறைமக்களோடு கலந்து பேசி, பங்குத் தொடக்க விழாவை வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாகக் கொண்டாட சிறப்பாகத் திட்டமிட்டு, அதன்படி மேதகு ஆயர் செ. சூசைமாணிக்கம் D.D. S.T.D. அவர்கள் 2013 ஜூன் மாதம் 23ஆம் நாள் மாலை அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் பங்கேற்க மறைமாவட்டத்தின் 78-வது பங்காகவும் அருள்திரு. ச. சூசை ஆரோக்கியசாமி அவர்களைப் புதிய பங்கின் முதல் பங்குத் தந்தையாகவும் அறிவித்துத் தொடங்கி வைத்தார். அது முதல் ஞாயிறு திருப்பலிகளும், சிறப்பு வழிபாடுகளும், தியான உரைகளும், மறைக்கல்வி வகுப்புகளும் நடந்து வருகின்றன.
அதன் பிறகு திருத்தல வளர்ச்சிக்காக முத்துப் பட்டணத்தில் வாழும் பல சமயத்தாரும் தங்களுக்குச் சொந்தமான, சிறு தோட்டம் வைத்திருந்த இடமான 1.25
ஏக்கர் நிலத்தை ஆலயத்திற்குத் தானமாகக் கொடுத்துதவியது பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தை அளித்து வருகிறது. தொடர்ந்து பொறுப்பேற்ற பங்குப் பணியாளர்களின் வழிகாட்டலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. இறைமக்கள் பேரவை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மறைக்கல்வி
4. பாடகற்குழு
5. அன்பியங்கள்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. ச. சூசை ஆரோக்கியசாமி (2013-2018)
2. அருட்பணி. சூ. அற்புத அரசு (2018-2023)
3. அருட்பணி. S. அமல்ராஜ் (2023...)
முத்துப்பட்டணம் நோக்கி வாருங்கள், கோடி நன்மைகள் பெறுங்கள். பெற்ற அனுபவத்தை எல்லாரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். முத்துப் பட்டணம் புனித வனத்து அந்தோணியாரின் பரிந்துரையும், பாதுகாப்பும் இறையாசீரும் உங்கள் உள்ளங்களையும், இல்லங்களையும் நிறைவாக நிரப்புவதாக!
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. S. அமல்ராஜ் அவர்கள்.





