புனித அடைக்கல அன்னை தேவாலயம்
இடம்: பூலாங்குடி, செங்குடி அஞ்சல், 623525
மாவட்டம்: சிவகங்கை
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: ஆர்.எஸ். மங்கலம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், செங்குடி
பங்குத்தந்தை அருட்பணி. J. தினேஷ்
குடும்பங்கள்: 200
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 15-ம் தேதி பெருவிழா.
மண்ணின் இறையழைத்தல்கள் :
அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. அந்தோணி (late), Sivagangai Diocese
2. அருட்பணி. சேசுராஜ், SJ
3. அருட்பணி. ஜோ மைக்கேல், SJ
4. அருட்பணி. இஞ்ஞாசி (late), Sivagangai Diocese
5. அருட்பணி. சவரிமுத்து சந்தியாகு, Chilchar Diocese, Assam
6. அருட்பணி. நி. அருள் ஆனந்த், Sivagangai Diocese
7. அருட்பணி. சூசைராஜ், OFM Cap
8. அருட்பணி. டோனி, Ahmadabad Diocese
9. அருட்பணி. Dr. ப. சூசை மாணிக்கம், OFM Cap
10. அருட்பணி. S. ஜோசப் சேவியர், OFM Cap
11. அருட்பணி. ஆண்ட்ரூஸ் ராஜா, Patna Diocese
12. அருட்பணி. அ. சேவியர், SVD
13. அருட்பணி. ஜான்பால், Guwahati Diocese, Assam
14. அருட்பணி. J. ஆரோக்கிய ஐசக், HGN
15. அருட்பணி. ஸ்டீபன்
16. அருட்பணி. ஆரோக்கியம், Arch Diocese of Chennai -Mylapore
17. அருட்பணி. லூர்து ராஜா, HGN
18. அருட்பணி. மரியதாஸ்
19. அருட்பணி. சந்தியாகு, OMD
20. அருட்பணி. ஜெயகுமார், Diocese of Kolkata
21. அருட்பணி. லெவே பிரான்சிஸ், SVD
மண்ணின் அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. பிளம்ஸ் மேரி
2. அருட்சகோதரி. பாக்கியம்
3. அருட்சகோதரி. சமாதானம்
4. அருட்சகோதரி. பிரகாசி
5. அருட்சகோதரி. அருள் மேரி
6. அருட்சகோதரி. செங்கோலம்மாள்
7. அருட்சகோதரி. பாத்திமா நிக்கோலாஸ்
8. அருட்சகோதரி. மரிகிரித்
9. அருட்சகோதரி. கித்திரி
10. அருட்சகோதரி. லில்லி திரேஸ்
11. அருட்சகோதரி. மீரா (திரேஸ்)
12. அருட்சகோதரி. சாரா கிளாடிஸ் பனிமலர்
13. அருட்சகோதரி. குழந்தை திரேஸ்
14. அருட்சகோதரி. அடைக்கல மேரி
15. அருட்சகோதரி. மிக்கேலம்மாள்
16. அருட்சகோதரி. அலெக்ஸ் மேரி
17. அருட்சகோதரி. அருள்மேரி செங்கோல்
18. அருட்சகோதரி. லில்லி
19. அருட்சகோதரி. புஷ்ப ராணி
20. அருட்சகோதரி. மாணிக்கம்
21. அருட்சகோதரி. ஆரோக்கியமேரி
22. அருட்சகோதரி. அகிலா
23. அருட்சகோதரி. கிறிஸ்டி
24. அருட்சகோதரி. ஸ்டெல்லா
25. அருட்சகோதரி. ரதி
26. அருட்சகோதரி. பவுலின்
27. அருட்சகோதரி. விஜி
வழித்தடம்: திருச்சி -இராமேஸ்வரம் -ஆர்.எஸ். மங்கலம் -பூலாங்குடி
மானாமதுரை - சாலைகிராமம் - சாத்தனூர் - பூலாங்குடி
Church Map location: Our Lady of Refuge Church
https://maps.app.goo.gl/RjzfbBqDLtfzAaCX9
வரலாறு:
ஊர் அறிமுகம்:
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி வட்டத்தில், நேர்கிழக்கில் 18 கி.மீ தொலைவில், மதுரை -இராசசிங்கமங்கலம், பரமக்குடி -இராசசிங்கமங்கலம் பேருந்து வழித்தடத்தில் சாத்தனூர், பூலாங்குடி இடைநிறுத்தத்தில் அமைந்துள்ள அழகிய ஊர் தான் பூலாங்குடி. சிவகங்கை மாவட்டத்தின் கீழ்க்கோடி ஊராகவும், இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லையினைத் தொட்டு வாழும் ஊரும் இதுவாகும்.
நாரை பறக்க இயலாத 48 மடைகள் கொண்ட இராசசிங்கமங்கலம் பெரிய கண்மாயின் உட்பகுதியில், அமைந்துள்ள கிராமங்களில் பூலாங்குடி கிராமமும் ஒன்று. வறட்சியான, கரிசல் மண் நிறைந்த வானம் பார்த்த பூமி இது. காடு வெட்டி கழனியாக்கி, உழவு மாடுகள் வைத்து உழுது பயிரிட்டவர்கள், இன்று அறிவியல் யுகத்தில் இயந்திரக் கலப்பையில் வேளாண்மை செய்து வரும் வித்தகர்கள்.
புனித அருளானந்தர் 1674 ஆம் ஆண்டு இந்தியா வந்து மதுரை மறைப்பரப்பு வாரியத்தில் சேர்ந்து, அரியலூர் மாவட்டம் கொழை என்னும் இடத்தில் மறைபரப்பு பணியை செய்ததன் பலனாக, பலர் கிறிஸ்தவம் தழுவினர். ஓரியூரில் அவர் கொலையுண்டு வேதசாட்சியான பின்னர் சருகணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான சிவகங்கையிலும் அருட்பணி. பீட்டர் மார்ட்டின் சே.ச (1708-1711), வேதபோதகர் என்றழைக்கப்பட்ட அருட்பணி. அகஸ்டின் கப்பெல்லி சே.ச (1712-1715), வீரமாமுனிவர் சே.ச (1716), சருகணியின் சின்ன சவேரியார் என்றழைக்கப்பட்ட அருட்பணி. ஜேம்ஸ் டிரோசி ஆகியோர் மறைப்பணியாற்றி புதுகிறிஸ்தவ மக்களை விசுவாச வாழ்விலும், அர்ப்பண வாழ்விலும் உறுதிப்படுத்தி வந்தனர்.
இக்காலத்தில் மறைப்பணியின் தலைமையிடங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் ஆவூர் என்னும் இடத்தில் அருட்பணி. பெர்த்தோல் தி என்னும் ஞானப்பிரகாசம் அவர்கள் பணி செய்து வந்தார். இவர் திருச்சி நாயக்க மன்னரின் உற்ற நண்பராக விளங்கினார். இச்சமயத்தில் சேதுச் சீமையின் (இராமநாதபுரம்) மன்னர் கிழவன் சேதுபதிக்கு பின்னர் நடந்த வாரிசு உரிமைப் போரில், வாரிசு உரிமைக்குரியவர்களான முகவை மன்னர் கட்டயத் தேவரும், சிவகங்கை மன்னர் சசிவர்ணரும் பதவி பறிக்கப்பட்டு இருந்தனர். அப்போது முகவை மன்னர், திருச்சி நாயக்கரை சந்திக்க சென்ற வேளையில், ஆவூர் பெர்தோல்தி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் இரு மன்னரும் (கட்டயத்தேவர், சசிவர்ணன்) தஞ்சை மன்னர் உதவியுடன் 1729 ஆம் ஆண்டு ஓரியூரில் நடந்த போரில் முறையற்ற வாரிசு மன்னரை வென்று, முகவை, சிவகங்கை ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது தான் சிவகங்கை சீமை (சின்ன வாடகை), முகவை சீமை (பெரிய வாடகை) உருவாகியது என்பது வரலாறு தரும் செய்திகளாகும். தாங்கள் மன்னராக பதவியேற்ற உடன், ஆவூர் பெர்தோல்தி அடிகளாரை தமது நாட்டுக்கு விருந்தினராக வரவழைத்து, கிறிஸ்தவ சமயம் பரவத் தடையில்லை எனவும், ஆலயம் கட்டவும், பள்ளிக்கூடங்கள் அமைக்கவும் அனுமதி கொடுத்தனர். ஆகவே 1730 ஆம் ஆண்டிலிருந்து சமயப்பணி தொடங்கியது.
ஆவூர் பெர்தோல்தி 1730-க்குப் பின்னர் ஓரிக்கோட்டை வந்த போது முகவை மன்னர் வரவேற்று, புனித அருளானந்தர் வேதசாட்சியான இடத்தில் மாதா கோயில் கட்ட அனுமதி வழங்கினார்.
புலம் பெயர்ந்த வரலாறு:
1709 ஆம் ஆண்டில் காவிரி கொள்ளிடத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடுமையான பஞ்சம் பல ஆண்டுகள் நீடித்தது. இந்தப் பஞ்சமானது 1731 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்ந்து செழிப்பானது. பஞ்சகாலத்தின் போது மக்கள் பிழைப்பு தேடி தமிழகத்தின் தெற்குப் பகுதிக்கு புலம்பெயர்ந்தனர்.
1712 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சரபோஜி மன்னர்கள் கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு கொடுமைகள் செய்தார்கள். பலரை சிறையில் அடைத்தனர். 1716-1736 காலகட்டத்தில் வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் பணி செய்தார். சில ஆண்டுகள் வேறு பல இடங்களிலும் பணி செய்து வந்தார். இவரது காலத்தில் உடையார் பாளையம் குறுநில மன்னர் ஆதரவால், பலர் கிறிஸ்தவர்கள் ஆயினர்.
கர்நாடக (மைசூர்) போர்கள், மன்னர்களின் ஓயாத சண்டைகள், 1732-36 காலகட்டத்தில் இராணி மீனாட்சிக்கும் -பங்காருக்கும் ஏற்பட்ட சண்டை போன்ற காரணங்களால் படை வீரர்களாக, பல்வேறு தொழில் செய்பவர்களாக மதுரை பகுதிக்கு மக்கள் குடிபெயர்ந்தனர். குறிப்பாக கொள்ளிடம் பகுதி வாழ்ந்த உடையார்கள் கல்லடிதிடலை மையப்படுத்தி சேதுபதி (இராமநாதபுரம்) நாட்டிற்கும், வெள்ளாளர்கள் பெரிய கோட்டையை ஒட்டிய வைகை ஆற்றின் பகுதிக்கும் 1760 ஆம் ஆண்டில் அருட்பணி. டிரோசி (சின்ன சவேரியார்) அவர்களின் பணிக்காலத்தில், மருது சகோதரர்கள் ஆதரவில் புலம் பெயர்ந்து வாழ்ந்தனர்.
கொள்ளிடம் (அரியலூர்) பகுதியில் வாழ்ந்த மக்கள் புயல் காரணமாக சிவகங்கை சீமையின் சருகணி பகுதிக்கு புலம்பெயர்ந்து ஒன்றுபட்ட சமூகமாக, கிறிஸ்தவ விசுவாசத்தில் திளைத்து வாழ்ந்து வந்தனர். அருட்பணி. ஜேம்ஸ் டிரோசி அவர்களால் சருகணியில் முதல் ஆலயமாக, திருஇருதயங்களின் ஆலயம் கட்டபட்டபோது (1751-1753) கட்டுமானத் தொழில் செய்தவர்கள் புலம்பெயர்ந்து வந்த இம்மக்கள் ஆவர். பின்னர் வாழ்விற்கான ஆதாரம் தேடி வேறு ஊர்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒரு பிரிவினர் சூரியன் கோட்டைக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அங்கு சிலநாள் வாழ்ந்தபின் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் இன்றைய பூலாங்குடி பகுதிக்கும், இந்துக்களாக இருந்தவர்கள் வண்டல் ஒட்டிய நல்லூருக்கும், ஒரு பிரிவினர் வாணியங்குடிக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து நல்லூர் மக்கள் பூலாங்குடி மக்களுடன் இணைந்து கிறிஸ்தவர்களாகியுள்ளனர். பின்னர் வாணியங்குடி மக்களும் இணைந்து கிறிஸ்தவர்களாகியுள்ளனர்.
பெரிய கண்மாய் என்றழைக்கப்படும் இராசசிங்கமங்கலம் கண்மாயின் உட்கடை, கடைமடை பகுதியில் உள்ளே இன்றைய பூலாங்குடிக்கு நேர்கிழக்கில் கானக் கரிசலின் கண்டெடுத்த இடம் தான் ஒட்டன்குறிச்சி. அந்தக் குறிச்சியில் தான், புலம்பெயர்ந்த அரியலூர் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னையின் அரவணைப்பால் உறுதிபெற்ற மக்கள், தங்களுக்கென குடிசை அமைத்து, வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தனர்.
ஊர்ப்பெயர்:
அக்காலத்தில் பூலான் விளாறு என்ற குத்துச்செடி விளார் (மாறு) நிறைய மண்டிக் கிடந்தன. ஆகவே மக்கள் தாம் வாழும் இடத்தை பிறருக்கு சுட்டிக்காட்ட பூலான்விளாறு உள்ள இடத்தில் குடிபுகுந்ததால் “பூலாங்குடி” என்னும் பெயரிட்டு நாளடைவில் அதுவே ஊர்ப்பெயர் ஆனது. இந்த ஊர் இன்று காணப்படும் ஊருக்கு நேர்கிழக்கில் 1.5கி.மீ தொலைவில் இருந்தது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த குடிசை வீடுகள், வசதி வாய்ப்புகள் பெருகப் பெருகவும், மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரவும், தற்போது ஆலயம் உள்ள குடியூரணியில் கீழ்க்கரையில் குடியேறினர். அங்கு பழைய பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் ஓடு வேய்ந்த ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.
புண்ணிய பூமி:
இன்றைய நவீன வசதிகள் அத்தனையும் இல்லாத 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இவ்வூர் மக்கள் (1770-1778) சேசு சபை தடைபட்ட காலத்தில் ஆயனில்லா ஆடுகளாக தவித்த காலம் அது. கல்லடிதிடல் மற்றும் இடைக்காட்டூர் பகுதிமக்கள் புதுவை சென்று குருக்களை அனுப்ப வேண்டியதும், அதனால் கல்லடிதிடல் பணி. மாஹே, ஜேம்ஸ் ஆகியோர் வந்ததும், பின் 1838 இல் புதிய மதுரை மறைப்பரப்பு வாரியத்தில் பணி செய்ய குருக்கள் இப்பகுதிக்கு வந்தனர். இப்பகுதி மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினர். குறிப்பாக பூலாங்குடியில் 1853-ல் பணி ஹால்டியார் (அருட்பணி. சின்னப்பர்), இங்கு தங்கியிருந்து பணிசெய்தபோது காலரா நோயால் தாக்கப்பட்டு இறையடி சேர்ந்தார் (26-08-1853). இவர் கல்லடிதிடல் மற்றும் இராமநாதபுரத்தில் உதவிப் பணியாளராக பணிசெய்துள்ளார். அவரை சுவாமி சின்னப்பர் என்றழைப்பர். மக்கள் இவரிடம் சென்று, தங்களுக்கு ஏற்படும் வாய்வு, மூச்சு பிடிப்பு, உடல் வலிக்கு பக்கத்தில் உள்ள குடிநீர் ஊரணியில் மூன்று கல் எடுத்துச்சென்று, இராயப்பரே சின்னப்பரே என வேண்டிக்கொண்டு, எப்பவிடனும்! இப்ப விடனும் என்று மூன்று முறை சொல்லி விட்டு, உடல் முன்புறம் இருந்து பின்புறம் கல்லை வீசிவிட்டு வந்துவிடுவர். நோயும் குணமாகும். பல நூறு பேர்கள் இவ்வாறு குணம்பெற்றதாக பெரியோர் சொல்லக் கேள்விச் செய்திகள். இவரது (வெள்ளைக்கல் கல்லறை) கல்லறையில் ஊர் மக்கள் கல்லறையும் சேர்ந்தே இருந்தது. இங்கிருந்த ஊர் கல்லறைகள், பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஆலயம்:
ஒட்டன்குறிச்சியில் முதலில் குருசடி அமைக்கப்பட்டது. பின்னர் ஓலைக்கூரையில் அடைக்கல அன்னையின் ஆலயமாகவும் மாற்றம் பெற்றது. பின்னர் பழைய பள்ளிக்கூடத்தில் கட்டப்பட்ட ஓடு வேய்ந்த ஆலயம் பழுதடைந்த போது புதிய ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு இடம் இல்லாமல் போகவே, நல்லுள்ளம் கொண்ட மக்கள் நிலம் கொடுத்து உதவினர். இந்த நிலத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் கட்டப்பட்டு, 28.08.1931 அன்று பேராயர் மேதகு லியோனார்டு அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1952 ஆம் ஆண்டு ஆலயத்தின் மண்தரை அகற்றப்பட்டு, கிராம மக்களின் உதவியால் கல்தரை அமைக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு ஆலயமணியும், நற்கருணை பேழையும் நிறுவப்பட்டது (நன்கொடையாளர் ம. செ. குழந்தைசாமி).
1965 ஆம் ஆண்டு ஆலய வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அருட்தந்தை. பங்கராசு பணிக்காலத்தில், பொன்விழா நினைவாக ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, பலிபீடம் மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, 1990 ஆம் ஆண்டு மே மாதம் 16,17 தேதிகளில் ஆலய பொன்விழா கொண்டாடப்பட்டது.
பூலாங்குடி பேருந்து நிறுத்தத்தின் எதிரில் மண்ணின் மைந்தர் திரு. MJF. Lion. A. அந்தோணிராஜ் அவர்களால், வேளாங்கண்ணி மாதாவிற்கு கெபி கட்டப்பட்டு, 14.08.2004 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் மண்ணின் மைந்தர் அருட்பணி. சேவியர் அலங்காரம், SVD அவர்களின் நிதி பங்களிப்புடன் ஆலய முன்மண்டபம் (போர்டிகோ) கட்டப்பட்டது. மேலும் ஓசூர் திரு. உ. சந்தானம் அவர்களின் நிதியுதவியுடன் ஆலயம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு செங்குடி மண்ணின் மைந்தர் அருட்பணி. பெலிக்ஸ், SJ அவர்களால் தேவாலய மேற்கூரை மாற்றப்பட்டு, புதுப்பொலிவு ஏற்படுத்தப்பட்டது.
மண்ணின் மைந்தர் அருட்பணி. S. ஜோசப் சேவியர், OFM Cap அவர்கள் வழியாக நிதி பெறப்பட்டு, அடைக்கல அன்னை மன்ற கட்டிடம் கட்டப்பட்டு, 01.02.2015 அன்று மண்ணின் மைந்தர் அருட்பணி. S. ஜோசப் சேவியர், OFM Cap அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அருட்தந்தை. சாமு இதயன் பணிக்காலத்தில், பவளவிழா நினைவாக பூலாங்குடி இறைமக்களின் நன்கொடையில் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, 14.05.2015 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, பவளவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, 06.08.2024 அன்று சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இவ்வாறாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது தேவைகள் ஏற்படும் போது, ஆலயத்தில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புனித அன்னை தெரசாள் கெபி, மண்ணின் மைந்தர் திரு. லூ. ஜெயசீலன் அவர்களால் கட்டபட்டு 14.08.2025 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
கிளைப்பங்கு:
19-ம் நூற்றாண்டிலிருந்து பூலாங்குடி, இருதயபுரம் பங்கின் கீழும், 11.02.1969 அன்று செங்குடி பங்கான போது அதன் கிளைப்பங்காகவும் மாற்றம் பெற்று, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருவிழா:
1940 ஆம் ஆண்டு வரையில் மே மாதத்தில் திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பங்குத்தந்தை அருட்தந்தை. சந்தியாகு அவர்களின் பணிக்காலத்தில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பாதுகாவலியின் திருவிழாவாக மாற்றப்பட்டு இன்றுவரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேவாலயத்தில் பணியாற்றிய உபதேசியார்கள்:
1. திரு. அருள்சாமி
2. திரு. பல்த்தசார்
3. திரு. ஞானாதிக்கம்
4. திரு. அந்தோனி
5. திரு. சந்தியாகு ஆசிரியர் (சின்ன வாத்தியார்)
6. திரு. ஏரோணிமுஸ்
7. திரு. மரியசூசை.
பங்கில் பணியாற்றிய பங்கு பணியாளர்கள் பட்டியல்.
19 ஆம் நூற்றாண்டிலிருந்து, இந்த கிராமம் இருதயபுரம் பங்காளுமையிலும், பின்பு இருதயபுரம் பங்கில் இருந்து, 11.02.1969 இல் இருந்து செங்குடி பங்கு உருவானது. அதன் பிறகு செங்குடி பங்கின் கிளைப் பங்காக உள்ளது.
1. அருட்தந்தை. பால்
2. அருட்தந்தை. கூலாஸ்
3. அருட்தந்தை. அலெக்சிஸ்
4. அருட்தந்தை. பீட்டர்.
5. அருட்தந்தை. அமல்ராஜ்
6. அருட்தந்தை. ஆசீர்வாதம்.
7. அருட்தந்தை. பங்கிராசு
8. அருட்தந்தை. சேவியர்
9. அருட்தந்தை. அருள்
10. அருட்தந்தை. ஜான் பிரிட்டோ
11. அருட்தந்தை. சவேரியார், OFM CAP
12. அருட்தந்தை. ஆரோக்கியராஜ்
13. அருட்தந்தை. அருள் சிங்கராயர்
14. அருட்தந்தை. சாமிநாதன்
15. அருட்தந்தை. சகாயராஜ்
16. அருட்தந்தை. அமல்ராஜ்
17. அருட்தந்தை. வின்சென்ட் டி. ராஜ்
18. அருட்தந்தை. சாமு இதயன்
19. அருட்தந்தை. வின்சென்ட் அமல்ராஜ்
20. அருட்தந்தை. J. தினேஷ்
பங்கேற்பு அமைப்புகள்:
1. மாதா இளைஞர் அணி
2. ஊதியம் பெறுவோர் ஊழியர் சங்கம்
3. நன்மரணசபை
4. இளம்பெண்கள் இயக்கம்
5. மகளிர் மன்றம்
6. பியோ பீடப்பணி சிறுவர் மன்றம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் சேவியர், OFM Cap அவர்களின் வழிகாட்டலில், ஆலய உறுப்பினர் திரு. இன்னாசி ஜெயகுமார் அவர்கள்.
ஆலய வரலாறு: பவளவிழா மலர் (2015)







