புதுமை மாதா ஆலயம் (காணிக்கை மாதா ஆலயம்)
இடம்: குருநகர், யாழ்ப்பாணம்
நாடு: இலங்கை
மறைமாவட்டம்: யாழ்ப்பாணம்
மறைக்கோட்டம்: யாழ்ப்பாணம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித யாகப்பர் ஆலயம், குருநகர் யாழ்ப்பாணம்
குடும்பங்கள்: 110
பங்குத்தந்தை அருட்பணி. அருளானந்தம் யாவிஸ்
உதவி பங்குத்தந்தை அருட்பணி. கி. ஞா. றொகான்
திருவழிபாட்டு நேரங்கள்:
செவ்வாய், சனி காலை 05:30 மணி திருப்பலி
வெள்ளி நண்பகல் 12:00 மணி திருப்பலி
சனி மாலை 05:00 மணி நற்கருணை ஆராதனை
ஞாயிறு மாலை 05:00 மணி திருப்பலி
திருவிழா: பிப்ரவரி மாதம் 02-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. அமிர்தநாதன் ஹிலேரியன் வேதநாயகம், அ.ம.தி
2. அருட்சகோதரி. மேரி எட்வின் அமிர்தநாதன், திருக்குடும்பக் கன்னியர் சபை
3. அருட்சகோதரி. மேரி இலேன் பார்பரா, அப்போஸ்தலிக்க கார்மேல் சபை
ஆலய முகபுத்தகம் : புதுமை மாதா ஆலயம், குருநகர்
Church Facebook link: https://www.facebook.com/profile.php?id=100064784740037...
Church Map location:
https://maps.app.goo.gl/DgrsSVgyYRMcoPuW8?g_st=aw
வரலாறு:
புதுமை மாதா ஆலய மக்களின் வரலாறு:
புதுமை மாதா ஆலயப் பங்கு மக்கள் பட்டங்கட்டியர், கமண்டலர், கரவர், கடையர் எனப்பல பெயர்களில் குறிப்பிடப்படும் குல மக்களாவர். இவர்கள் சோழர், பாண்டிய காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, இலங்கையில் குடியேறியவர்கள் என வரலாறுகள் கூறுகின்றன. இம் மக்கள் முத்துக்குளிப்போர், சங்கு சுடுபவர்கள், விவசாயம் செய்பவர்கள், சாயவேர் சேகரிப்போர் என இலங்கையில் குடியேறி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இலங்கையில் யாழ்ப்பாணம் (யாழ்நகர், சாட்டி, ஊர்காவற்றுறை, பூநகரி), மன்னார் (22கிராமங்கள்), மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், சிலாபம், வவுனியா ஆகிய இடங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவருமே போர்ச்சுகீசியர் காலத்தில் கத்தோலிக்க திருமறையைத் தழுவியவர்கள் ஆவர்.
அக்காலத்தில் மன்னாரில் வசித்த இந்த மக்கள், மன்னார் வளைகுடா முதல் இராமேஸ்வரம் வரையான கடற்பரப்பில் முத்துக்குளித்தலை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் இந்தியாவின் வேதாளை, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுடன் நெருங்கிய உறவுமுறை தொடர்பு கொண்டிருந்தனர். எனவே 1542இல் இந்தியாவின் முத்துக்குளி கடற்கரையில், புனித பிரான்சிஸ் சவேரியாரினால் மேற்கொள்ளப்பட்ட இறை போதனையில் நாட்டம் கொண்டு, கிறிஸ்தவம் தழுவிய மூத்த குடிகளில் ஒன்றாக இருந்தார்கள். இவர்கள் மூலம் கத்தோலிக்க மறையை அறிந்த மன்னாரில் வாழ்ந்த மக்கள், தாங்களும் திருமுழுக்கு பெற விரும்பி, தென் இந்தியாவின் மணப்பாடு (தூத்துக்குடி மறைமாவட்டம்) எனும் இடத்திற்குச் சென்று, புனித பிரான்சிஸ் சவேரியாரை சந்தித்து, மன்னார் வந்து தங்களுக்கு திருமுழுக்கு வழங்க வேண்டினார்கள். வேலைப்பளு காரணமாக வேறொரு குருவை 1543இல் மன்னாருக்கு புனித சவேரியார் அனுப்பி வைத்தார். மன்னாரில் அவர் இந்த இனத்தாருக்கு சமூகத் திருமுழுக்கு வழங்கி அனைவரையும் கத்தோலிக்கராக்கினார். இவ்வாறு கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்திருந்த 600 பேர், 1544இல் பிற மதத்தவர்களால் பலியாகி வேத சாட்சிகளாயினர். இதனைக் குறித்து புனித பிரான்சிஸ் சவேரியார் தான் உரோமைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் (Letter deted on 02. sep. 1544 ref. The life and letters of st. francis xavier). எனவே போர்ச்சுகீசியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே யாழ்ப்பாண இராச்சியத்தில், மன்னர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு இது சான்றாகும்.
இந்த மக்கள் பண்டைய காலம் முதல் அரச மாளிகைகளுக்கும், கோயில்களுக்கும் சுண்ணா நீற்றுக் (சுண்ணாம்பு) கொடுத்திருக்கின்றார்கள். வருடந்தோறும் சில தினங்களுக்கு, இராச காரிய முறையில் இதனை செய்து வந்தார்கள். இப்பழக்கம் போத்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் (டச்சுக்காரர்கள்) காலத்திலும், ஆங்கிலேயர் காலத்தின் ஆரம்பத்திலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனவே யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் அக்காலத்தில் சிறந்த வருமானம் தரும்தொழிலான சிப்பி, சங்கு, முருகைக்கல் என்பவற்றில் இருந்து சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலைச் செய்து வந்தார்கள். இவர்கள் கொட்டடி, வண்ணார்பண்ணை பகுதிகளில் வசித்து வந்தார்கள் எனினும், இவர்களின் தொழில் நிமித்தம் கடற்கரை பகுதிகளோடு நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்கள். இத்தொழிலை ஆரம்பம் முதல் இன்றுவரை இவர்கள் செய்து வருகின்றார்கள். சீமெந்து (சிமெண்டு) வழக்கத்திற்கு வரும்வரை இச்சுண்ணாம்புத் தொழில் சிறந்த வருமானம் தரும் தொழிலாகக் காணப்பட்டது.
1560ஆம் ஆண்டு பிரகன்சா யாழ்ப்பாணத்தின் மேல் படையெடுத்ததன் நோக்கம், சாம்தோம் கிறிஸ்தவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்காக எனினும், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், சாம்தோம் கிறிஸ்தவர்கள் தம் சொந்த இடங்களை விட்டு வரவிரும்பவில்லை எனக்கூறி, படகுகளைத் திருப்பினார்கள். சிறிது காலத்தில் தமிழ் படைகளால், போத்துக்கேய படை துரத்தியடிக்கப்பட்டது. அப்போது நகரத்தில் இருந்த கிறிஸ்தவர்களும், குருக்களும், சாம்தோமில் இருந்து தூதாக வந்த மூவரும் கொல்லப்பட்டார்கள். உயிர் தப்புவதற்காகப் போத்துக்கேயர் மன்னாருக்கு ஓடிச் சென்றனர். ஆயினும் கத்தோலிக்க விசுவாச சத்தியத்திற்காக உயிர்த்தியாகம் செய்யத் துணிந்த இம் முன்னோர் கிறிஸ்தவத்தில் நிலைத்திருந்தார்கள்.
மன்னாருக்குச் சென்ற போத்துக்கேயர், அக்காலத்தில் விஜயநாயக்கரால் துன்புறுத்தப்பட்ட முத்துக்குளி கடற்கரையில் (புன்னைக்காயல்) இருந்த 60,000 கடையரையும், பரவரையும் 1560 -1564 க்கும் இடைப்பட்ட காலத்தில் மன்னாரில் குடியமர்த்தினார்கள். இக்குடியேற்றத்திற்குப் பொறுப்பாக அருட்தந்தை ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளாரும் அவரது குழுவும் வந்தார்கள். குடியேற்றப்பட்டவர்கள் மன்னாரில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். 1564 இல் ஏற்பட்ட வாந்திபேதி நோயால் பெருமளவான பரவர் இந்தியா திரும்பிச் சென்றார்கள். இவர்களுடன் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அவர்களும் புன்னைக்காயல் சென்றார்.
1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த கப்பலில் ஆயர் தேமுடா, இயேசு சபையின் தலைமை குரு மற்றும் பிறகுருக்களும் வந்தார்கள் என்றும், அவர்களின் மறைப்பணியால் பலர் திருமுழுக்குப் பெற்றார்கள் எனவும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியை தொழில் நிமித்தம் பயன்படுத்தி வந்ததாலும், 1560ஆம் ஆண்டு போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது, குருக்களினால் திருமுழுக்குப் பெற்று, கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட மூத்த குடிகளில் ஒன்றாகவும் இம்முன்னோர் காணப்பட்டனர். சிறிது காலத்தில் போத்துக்கேயர் துரத்தியடிக்கப்பட்டாலும், இம் முன்னோர் கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைத்திருந்தனர். ஆயினும் பிறசமயத்தவர்களின் நிந்தனை, அரசர்களது துன்புறுத்தல்களுக்கும் ஆளாகினர். பிற மதத்தவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். இதன் காரணங்களினால் நகர்பகுதியை (வண்ணார் பண்ணையை) விட்டு, கடற்கரை பகுதிக்கு (தற்போது புதுமை மாதா ஆலயம் உள்ள பகுதிக்கு) இடம்பெயர்ந்து குடியமர்ந்தார்கள்.
இக்காலப்பகுதியில் கத்தோலிக்க விசுவாசத்தை வளர்ப்பதற்காகப் பற்றுறுதி மிக்க இம் முன்னோர் கடற்கரையில் வைக்கோலால் குடிசை கோயில் அமைத்து அதில் வழிபட்டு வந்தார்கள். இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் ஆலயமாகும். அதன் பின்னர் 1591 ஆம் ஆண்டு பூத்தாடோ தலைமையில் போர்த்துக்கேய படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி, அலுப்பாந்தியடியில் இருந்த பிறசமயத்தவரை துரத்தியடித்து அவ்விடத்தில் நிலை கொண்டார்கள். இந்தக் காலப்பகுதியில் தான் கத்தோலிக்க குருக்கள் இக்குடிசைக் கோவிலில் தங்கி இருக்க வந்து சென்றார்கள்.
யாழ்ப்பாணத்தின் முதல் ஆலயம்:
யாழ்ப்பாணத்தின் முதல் ஆலயமானது, அன்டோனியோ பெர்னாண்டஸ் என்று அழைக்கப்படும் கொன்ஸ்தாந்தினோ பிரகன்சா (1560) காலத்தைச் சேர்ந்த ஒரு பூர்வீகக் கிறிஸ்தவரால், கடற்கரையில் (1591) பூத்தாடோ முகாமிட்டிருந்த இடத்தில் அமைக்கப்பட்டது. இவர் வைக்கோலிலான சிறிய குடிசையை அமைத்து சிறிய சிலுவையை வைத்தார். இந்த பக்தியுள்ள கிறிஸ்தவர் ஆலயக்காரியங்களில் மிகக் கவனமாக இருந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் சுத்தம் செய்து அலங்கரித்து வந்தார். கத்தோலிக்கக் குருக்கள் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும்போது அவர்கள் இந்தக் குடிசையிலேயே தங்கிச் சென்றார்கள். இக்குடிசைக் கோயிலிலேயே அருட்தந்தை பெற்றோடி கிறிஸ்ரோ அடிகள் தங்கி இருந்தார்.
இக்குடிசைக் கோயில் குருசுக்கோயில் என அழைக்கப்பட்டது. இது 1580இல் அமைக்கப் பெற்றிருக்கலாம் எனவும், இவ்வாலயம் அமைக்கப்பட்ட இடம் தற்கால புரட்டஸ்தாந்து சஞ்சுவான் கோயிலுக்கும், மேற்றிராசனக் (பேராலயம்) கோயிலுக்கும் இடைப்பட்ட பிரதேசம் ஆகுமெனவும், சுவாமி ஞானப்பிரகாச அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் 1614ஆம் ஆண்டு கல்லினால் வெற்றிமாதா ஆலயம் அமைகின்றபோது அதற்குத் தேவையான கண்ணாம்பு கழியையும் இம் முன்னோர் வழங்கினார்கள். ஆலயத்தை சுற்றியே தமது குடியிருப்புகளையும் அமைத்து வாழ்ந்து வத்திருந்தார்கள். கோட்டை அமைப்பதற்குத் தேவையான சுண்ணாம்பினைப் பெற்றுக்கொள்வதற்கு கடற்கரையோரங்களில் பல சூளைகள் அமைக்கப்பட்டன எனக் களம்பல கண்ட கோட்டை எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து வந்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
போத்துக்கேயர் காலத்தின் ஆரம்பம் முதலே இம் முன்னோர் இவ்விடத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு அன்னையின் ஆலயமே சான்றாகும். ஒல்லாந்தர் (டச்சுக்காரர்கள்) காலத்திலேயே காணிகளுக்குத் தோம்பு எழுதும் பழக்கம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதுமை மாதா ஆலயத்தைச் சூழ உள்ள பங்கு மக்களின் காணிகளின் தாய் உறுதியில், காணியின் அமைவிட முகவரி வண்ணார் பண்ணை மேற்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தற்போதும் காணலாம். தற்போது புதுமை மாதா ஆலயம் அமைந்துள்ள இடத்திலேயே, வெற்றி மாதா ஆலயம் அமைந்திருந்தது.
வெற்றி மாதா ஆலய வரலாறு:
அருட்தந்தை பெற்றோ டி கிறிஸ்ரோ அடிகள் குருசுக்கோயிலில் தங்கியிருந்து, புதிய மன்னனாக எதிர்மன்ன சிங்கன் (1591 - 1614) எனும் 8ஆம் பரராச சேகரன் அரியாசனம் ஏறிய காலத்தில் அனுமதி பெற்று, அரசனால் நியமிக்கப்பட்ட இடத்தில் (நல்லூரில்) 1602இல் வெற்றி மாதா ஆலயத்தை அமைத்தார். இவ்வாலயம் அன்ரே புர்த்தாடோ (Andre Furado) பெற்ற வெற்றியின் நினைவாக ‘வெற்றி மாதா ஆலயம்’ என அழைக்கப்பட்டது.
1603இல் அருட்தந்தை பிரான்சிஸ்கோ டி ஓரின்ரே (Fr. Francisco De Driente) வெற்றி மாதா ஆலயத்தின் பங்குக்குருவாகவும், பிரதேசத்தின் ஆணையாளராகவும் பொறுப்பேற்றார். இவர் தனது பிரதேசத்தில் கிறிஸ்தவம் பரப்புவதில் முனைப்பாகச் செயற்பட்டார். தனது நண்பரான தந்தை அன்ரே டி S.ஜோசப் அடிகளை அழைத்து, வெற்றி மாதா ஆலயத்திற்குப் பொறுப்பாக விட்டுவிட்டு தீவுப்பகுதிக்குச் சென்றார். அன்று மாதாவின் விண்ணேற்பு அடைந்த நாளுக்கு முதல்நாள் (August 14) இந்த ஆலயத்திற்கு தீ வைத்தார்கள். ஆலயம் தீப்பிழம்பாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தந்தை அன்ரே டி. S. ஜோசப் என்ன செய்வது என அறியாது திகைத்து நின்றார். அப்போது அருகில் இருந்த போத்துக்கேயக் குடிகள் ஓடி வந்து, ஆலயத்தினுள் சென்றபோது ஆலய முகடுவரை (மேற்கூரை) தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் பலிப்பீடத்தில் இருந்த அன்னையை வெளியே எடுத்துவந்த பின்னர் ஆலய முகடு எரிந்து நிலத்தில் விழுந்தது. இதனைக் கண்ட பிறமதத்தினர் போத்துக்கேயர் வெளியேறும் வரை ஆலயக் கூரை விழாமல் அவர்களின் கடவுளே அதிசயமாய் காப்பாற்றினார் என்றார்கள்.
இதனை அறிந்த அருட்தந்தை பிரன்சிஸ்கோ டி ஒறிஸ்ரே (Fr.Francisco De Oriente) அரசனிடம் போய் முறையிட்டார். அரசன் உடனே முதலிமாரை அழைத்து ஆலயத்தைத் திரும்பவும் கட்டி முடிக்கும் படியும், இவ்வேலை முடியும் வரை யாரும் அவ்விடம் விட்டுச் செல்லக்கூடாது எனவும் கடுமையாகக் கட்டளை இட்டான். இவ்வாலயம் மீளவும் 8 நாட்களினுள் கட்டி முடிக்கப்பட்டது. இவ் வெற்றி மாதா ஆலயத்தில் 10 -12 ஆண்டுகள் அருட் தந்தையர்கள் தங்கி இருந்து பணியாற்றினார்கள்.
இதன் பிறகு கல், சுண்ணாம்பு கொண்டு ஆலயத்தை அமைக்க விரும்பினார்கள். இதனை அமைக்கும் பொறுப்பு அருட்தந்தை பெற்ரோ டி பென்ரன்கோரிடம் (Fr. Pedro de Betancor) ஒப்படைக்கப்பட்டது. இவர் ஆலயம் கட்டத் தேவையான பொருட்கள் எல்லாம் சேர்த்த பின்னர், ஆலயம் அமைக்கப் பொருத்தமான இடமாகத் தெரிவு செய்தது பள்ளிவாசல் இருந்த இடமாகும். இது மூர்ஸ் (Moors) என்ற இஸ்லாமியர்களின் பள்ளியாக இருந்தது. போர்த்துகேயரின் தொந்தரவுகளை தாங்கமுடியாமல், இஸ்லாமியர் வேறொரு இடத்தில் குடியேறி அங்கே தங்கள் பள்ளிவாசலை கட்டினார்கள். பழைய இடத்தை தேவாலயம் அமைக்க விட்டு விட்டார்கள். அருட்தந்தை பெற்ரோ டி பென்ரன்போர் அடிகள் (Fr. Pedro de Betancor) ஆலயம் அமைக்க, அரசன் உதவி செய்ததோடு அருட்தந்தையின் நண்பரான (Chungali) சங்கிலியும், ஊர்த்தலைவர்களும் உதவி செய்தார்கள். தீவுப்பகுதியின் (தனதீவு) வருமானங்களையும் அரசன் ஆலயத்திற்கு கொடுத்தான். இவற்றினைக் கொண்டு தந்தை ஆலயத்தைக் கட்டி முடித்ததோடு குருமடங்களையும், துறவிகள் தங்குமிடங்களையும், அலுவலகங்களையும் கட்டி முடித்தார்.
இவ்வாறாக வெற்றிமாதா ஆலயமானது பள்ளிவாசல் இருந்த இடத்தில் 1614 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதுவே பின்னர் புதுமை மாதா ஆலயம் என மாற்றம் செய்யப்பட்டது.
1621இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி போத்துக்கேயரின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பிலிப்தே ஒலிவேறா, தலைநகரான நல்லூரில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதனை உணர்ந்து, பாதுகாப்பாக இருக்கக் கோட்டை ஒன்றை அமைக்க எண்ணி, முஸ்லிம்களின் பண்டகசாலைகள் இருந்த இடத்தை தேர்வு செய்து, 1622-ல் கோட்டையை கட்ட ஆரம்பித்தான். இந்த கோட்டைக்குள் அதன்பின் வெற்றி மாதா ஆலயம் கட்டப்பட்டது.
புதுமை மாதா என பெயர்க்காரணம்:
பங்குத்தந்தை அருட்தந்தை பிரான்சிஸ்கோ டி அன்ரோனியோ அவர்களின் வழிகாட்டலில், வெற்றி மாதா ஆலயத்திற்கு ஊர்வலமாக அன்னையின் சுரூபத்தை பவனியாக எடுத்துச் செல்வது என முடிவு செய்து, அரசனிடம் அனுமதி பெற்றதோடு, அரசனின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூர் அரண்மனைக்கு முன்பாக பவனி செல்லவும் தீர்மானித்தனர். இதன்படி 24.07.1614 அன்று நாவாந்துறையில் இருந்து நல்லூர் அரண்மனை உள்ள வீதிகளினூடாக அன்னை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வெற்றிமாதா ஆலயத்தின் (தற்போதைய புதுமை மாதா) நடுவில் சிறிய பலிப்பீடத்தில் வைக்கப்பட்டார்.
நாட்கள் செல்லச் செல்ல அன்னையினால் தொடர்ச்சியாகப் பல புதுமைகள் நிகழத் தொடங்கின. மக்கள் அன்னையை புதுமை மாதா என அழைக்கத் தொடங்கினர். இதனால் வெற்றி மாதா ஆலயமானது, புதுமை மாதா ஆலயம் என மக்கள் அனைவராலும் அழைக்கப்படலாயிற்று. "எனவே புதுமைகள் பல புரிந்த அன்னை வெற்றிமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டதனால், அவ்வாலயம் புதுமை மாதா ஆலயம் என அழைக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.” தற்போதைய புதுமை மாதா ஆலயத்தில் எட்டு ஆண்டுகளாக இருந்த அன்னை தொடர்ச்சியாகப் புதுமைகளைப் புரிந்து வந்தார். புதுமைகளால் நிறைந்த அன்னையை வழிபடப் பெருந்திரளான மக்கள் கூடினர். அன்னையின் புகழ் அனைத்திடங்களிலும் பரவத் தொடங்கியது. எனவே புதுமை மாதாவுக்கென ஒரு பெரிய ஆலயத்தை அமைக்க மக்கள் விரும்பினர். இப்பொறுப்பு அருட்தந்தை பெற்ரோ டி பென்ரல்கோர் அடிகளாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோட்டை புதுமை மாதா ஆலயம்:
கோட்டையில் புதுமை அன்னையின் ஆலயத்தைக் கட்ட ஆரம்பிக்க இருந்தவேளையில், அருட்தந்தை பெற்றோ டி பென்றக்கோர் அடிகள் அவருடைய திருமடச்சபைத் தலைவரால் அழைக்கப்பட்டுக் கோவாவுக்குச் சென்றார். அங்கே சென்று யாழ்ப்பாண புதுமை மாதாவின் புதுமைகளைக் குறித்து சபைத் தலைவருக்கு தெரிவித்துப் புதுமை அன்னைக்கென புதிய ஆலயம் ஒன்றை அமைக்கும் தனது ஆவலைத் தெரிவித்தார். புதுமை அன்னையின் சிறப்பை அறிந்த குருமடத்தலைவரும் அவரை யாழ்ப்பாணம் செல்ல அனுமதித்தார்.
இக்காலத்தில் 1616இல் பரராசசேகர மன்னன் இறந்து சங்கிலிகுமாரன் (செகராசசேகரன்) அரசனானான். இவனைப் போர்த்துக்கேயத் தளபதியான பிலிப்தே ஒலிவேறா 01.02.1621இல் வென்று, யாழ்ப்பாண இராச்சியத்தை போத்துக்கேய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். அன்னையின் அற்புதங்களினால் போரை வென்ற ஒலிவேறா, மறுநாள் 1621 இல் வட இலங்கையின் தலைப்பட்டணமாகிய யாழ்ப்பாண இராச்சியத்தின் பரிபாலினியாக புதுமை மாதாவை ஒப்புக்கொடுத்தார். அவ்வாறு அன்னை பரிபாலினியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட போது ஆலயத்திலேயே (வெற்றி மாதா ஆலயம்) வைக்கப்பட்டிருந்தார். ஏனெனில் 1622ஆம் ஆண்டே அன்னை புதிய ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கோவாவிலிருந்து திரும்பிவந்த அருட்தந்தை பெற்றோடி பென்ரக்கோர் அடிகள், 15 மாதங்களில் புதுமைமாதா ஆலயத்தை கட்டிமுடித்தார். அதாவது 1622ஆம் ஆண்டே கோட்டை புதுமை மாதா ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. 08.09.1622 ஆம் தேதி கட்டட வேலை முழுமை பெற்று, கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட புதுமை மாதா ஆலயத்திற்கு அன்னையைக் கொண்டு செல்வதற்கு ஆயத்தம் செய்யப்பட்டது. எனினும் வெற்றிமாதா திருவிழாவான சீமோன் யூதாததேயு திருவிழாவின் போதே அன்னை பவனியாகப் புதிய ஆமயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ச்சியாக நடைபெற்று வந்த புதுமைகளினால் அன்னை மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டார்.
இவ்வாறாக புதுமை மாதா ஆலயத்தில் இருந்து, கோட்டை புதுமை மாதா ஆலயத்திற்கு அன்னை 1622இல் பவனியாகக் கொண்டு சென்றதன் பின்னர், அன்னையின் புதுமைகளினால் கோட்டைப் புதுமை மாதா ஆலயம் புகழ் பெற்றாலும், ஏற்கனவே இருந்த கோட்டை ஆலயம் யாழ்ப்பாணத்தின் தலைமை ஆலயமாக இருந்ததினாலும், அக்காலத்தில் இந்த புதுமை மாதா ஆலயத்தின் முக்கியத்துவம் குறைந்து போயிற்று. மேலும் 1627இல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாகவும், பழைய புதுமை மாதா ஆலயம் சேதமடைந்திருக்க வேண்டும். ஏனெனில், கோட்டை புதுமை மாதா ஆலயத்தைத் தவிர அனைத்து ஆலயங்களும் புயலால் சேதமடைந்தன எனவும், அவை அனைத்தும் (Friars) குருக்களால் அதிக கூலியோ, பணமோ இன்றி மீளப் புதுப்பிக்கப்பட்டன எனவும் (Early Christianity in Ceylon) எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1658ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி வரை கோட்டை புதுமை மாதாவிற்கான பக்தி முயற்சிகளும், இறைவணக்கங்களும் இடம்பெற்றன. ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பற்றிய போது, முன்னர் புதுமை அன்னையின் சொருபத்தினை மறைத்து வைத்து பாதுகாப்பாக பத்தேவியாவிற்குக் கொண்டு சென்றனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1661ஆம் ஆண்டு நவம்பர் 16 ம் தேதி, மாதாவின் சுரூபம் கோவாவில் உள்ள தூய பிரான்சிஸ் அசிசியாரின் கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று கோவாவில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் வைத்து, புதுமை மாதாவை கோவா மக்கள் சிறப்பாக வழிபட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் புதுமை மாதாவின் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றார்கள்.
பழைய புதுமை மாதா ஆலயத்தில் நடைபெற்ற புனரமைப்புக்கள்:
ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்தில் அவர்கள் இக்கரையோரப் பகுதியில் தமது செல்வாக்கை நிலைநாட்டவில்லை. அவர்களின் கோயில்களும் கரையோரப்பகுதியின் அமைக்கப்படவில்லை எனவும், கரையோரப் பகுதியில் மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள் எனவும் சுவாமி ஜெயசீலன் அடிகள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஒல்லாந்தர் காலத்தில் சமய நெருக்கடியை அனுபவித்த மக்கள் ஒல்லாந்தரிடம் இருந்து வெற்றி அன்னையின் சொரூபத்தைப் பாதுகாப்பாக மறைத்து வைத்துப் பாதுகாத்தனர். ஒல்லாந்தர் காலத்தின் பிற்பகுதியில் மத சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின் அன்னையின் சொரூபத்தை மீண்டும் ஆலயத்தினுள் வைத்து வழிபட்டு வரலாயினர்.
இவ்வாறு மீண்டும் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டபோது வெற்றி மாதா ஆலயத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்ட, சீமோன் யூதா ததேயு திருவிழாவை விடுத்து, அன்னையின் திரு உருவம் குழந்தை இயேசுவைத் தாங்கியவாறு காணிக்கை அன்னையாகத் தோற்றம் அளித்தமையினால், அன்னை குழந்தை இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த பிப்ரவரி 02ஆம் தேதியை திருவிழாவாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். இன்றுவரை இந்நாளிலேயே திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து ஆலயத்தைப் பரிபாலிக்கும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் காலத்துக்குக் காலம் பல திருத்த வேலைகளும், கட்டிடப் புரைமைப்பு வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.
1837-1852 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்றிராசனக் கோயிலில் (யாழ் பேராலயம்) இருந்து பெறப்பட்ட தூண்களைப் பயன்படுத்தி, ஆலயத்தில் கட்டட புனரமைப்பு வேலைகள் நடைபெற்றிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து 1865ஆம் ஆண்டு குருக்கள் தங்குவதற்கான குருமனை கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 1887 இல் ஆலய முகப்பு பகுதி பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது.
மேலும் 1910ஆம் ஆண்டு ஆலயத்தில் பழுதடைந்த சுவர்கள், கூரை, தூண்கள் திருத்தியமைக்கப்பட்டன. 1912ஆம் ஆண்டு ஆலயத்தின் பிற்பகுதியில் குருக்கள் தங்குவதற்கான குருமனை பெரிதாகக் கட்டப்பட்டது. தொடர்ந்து 1916இல் ஆவயத்தின் தளம் சீமெந்தினால் அமைக்கப்பட்டது என, சுவாமி ஞானப்பிரகாசரின் XXV Year Catholic progress எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணக்கத்துக்குரிய பொமிக்கோ அடிகளார் (1951-1960) பங்குக் குருவாக இருந்த காலத்தில், ஆலயத்தில் பல திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1951ஆம் ஆண்டின் முற்பகுதியில் அடைமழை, பலத்த காற்று காரணமாக ஆலய கிழக்குப் பக்க மணிக்கூண்டுக் கோபுரம், கோயில் மணியுடன் சேர்ந்து முற்றாக தரையில் இடிந்து விழுந்தது. எனினும் ஆலயமணிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இம் மணிக்கூண்டுக் கோபுரம் திருத்தியமைக்கப்பட்டதோடு கிழக்கு, மேற்கு பக்கங்களிலுள்ள விறாந்தையும் முழுமையாகத் திருத்தி அமைக்கப்பட்டது. அத்துடன் சேதமடைந்திருந்த ஆலய சுவர்களும் உட்பக்கம் வெளிப்பக்கம் கொத்தி பூசப்பட்டது. மேலும் புதிதாகப் போர்ட்டிக்கோ மண்டபம் கட்டுவதற்கு அஸ்திவாரம் இடப்பட்டது.
1960ஆம் ஆண்டளவில் ஆலயத்தின் தென்மேற்குப் பகுதியில் ஆலய இளைஞர்களுக்காக ஒரு சிறிய கட்டடமும் அமைக்கப்பெற்றது. அது "மருத இளைஞர் கலைமன்றம்" என அழைக்கப்பட்டது. இது சிறிய வாசகசாலையாகவும் இயங்கியது. காலப்போக்கில் அது புதுமை மாதா சனசமூக நிலையமாக மாறியது. இது தற்போது ஆலய கிழக்கு வீதியில் அமைந்துள்ளது. மேலும் 1960 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு புதுமை வரவணிக்க நவநாள் வழிபாடு ஆரம்பமாகியது. இந்த வழிபாடானது 65 வருடங்களைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
(1961-1966) பங்குக் குருவாக இருந்த அருட்பணி எ. சார்வே அடிகளார் காலத்தில், 1962-1965 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 2ஆம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் தீர்மானத்தின்படி, குருக்கள் புதிய பலிப்பீடத்தில் மக்களை நோக்கி திருப்பலி வழிபாடுகளை செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணத்தினால் இந்த ஆலயத்திலும் பலிப்பீடம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்பலிப் பீடத்தை அமைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி இவர்களை ஊக்குவித்தவர் அருட்பணி எ. சார்வே அடிகளார் ஆவார். ஆம் வத்திக்கான் தீர்மானத்தின்படி கொடி மரம் ஏற்றும் சடங்கு நிறுத்தப்பட்டதால் 1966இல் தேவதாரு கொடிமரத்தினை அறுத்து, அழகிய பலிப்பீட மேசை வடிவமைக்கப்பட்டது. ஆலய பீடப் பகுதியில் 5 அடி உயரமான தூணில் நற்கருணைப் பேழை அமைக்கப்பட்டது. அதற்கு மேற்பகுதியிலுள்ள சுவரில் திருச்சிலுவை அமைக்கப் பெற்றது. பீடத்தின் உச்சியில் இருந்த புதுமை மாதா சொரூபம் பீட உட்பகுதியின் இடப்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த தூணுக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்த திருஇருதய ஆண்டவர் சொரூபம் மறையுரை மேடைக்கு மாற்றப்பட்டது.
மேலும் 1966ஆம் ஆண்டு ஆலயத்தினுள் நுழைவதற்கான பிரதான வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மரக்கதவு மாற்றப்பட்டு, இரும்புக்கதவு அமைக்கப்பட்டது. இக்கதவு மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இன்றும் ஆலயத்தில் உள்ளது.
1966 -1970: அருட்பணி. பெனற் கொன்ஸ்ரன்ரைன் அடிகள் பணியாற்றிய காலத்தில், ஆலய வழிபாட்டு முறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதுடன், ஆலயத்தின் பலிப்பீடப்பகுதி அழகுபடுத்தப்பட்டது. ஆலயத்தில் கிழக்கு, மேற்கு பக்கத்தில் உள்ள வெளிக்கதவுகள் இரும்பினால் மாற்றப்பட்டது.
1973-1976ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பங்குக்குருவாக அருட்பணி. M.E. பயஸ் அடிகள் இருந்தபோது, திருவிழாவன்று அன்னையின் சொரூபப் பவனியானது, சின்னக்கடையில் இருந்து நாதஸ்வர இசையோடு ஆலயம் வரை நடைபெற்று வந்தது.
(1978-1981) அருட்பணி. சந்தியாப்பிள்ளை அடிகள் பணிக்காலத்தில் 1977ஆம் ஆண்டு, அழகிய வேலைப்பாடுகளுடனான மரத்தேரில் முதன்முதலாக அன்னை வீதிகளில் பவனியாகக் கொண்டு செல்லப்பட்டார்.
(1987-1993) அருட்பணி. P.M. இம்மானுவேல் அடிகளார் காலத்தில் ஆலயத்தில் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டன. மரத்தினாலான பீடத்திற்குப் பதிலாக 1992இல் கருங்கல்லினாலான பலிப்பீடம் அமைக்கப்பட்டது. இதனை தற்போது ஆலயப் பீடத்தில் காணலாம். மேலும் மெழுகுதிரிக் கடை கல்லினால் கட்டப்பட்டது. ஆலயக் கிணறு மூடப்பட்டு தண்ணீர்த்தாங்கி கட்டப்பட்டு மக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டது. மேலும் ஆலய முன்றலில் மரியன்னையின் திருச்சொருபம் அமைக்கப்பட்டது. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட ஆலய கூரை, ஜன்னல், கதவுகள் திருத்தியமைக்கப்பட்டன. ஆலயத்தில் கிழக்கு, மேற்குப் பக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வாசல்களுக்கு இரும்புக் கதவுகள் போடப்பட்டடது.
(1998-2000) அருட்பணி. B. F. பொனிபொஸ் அடிகளார் காலத்தில் புதுமை மாதா மீது பக்தர்களுக்கு உள்ள பற்றுதலும், உலகெங்கும் இருக்கும் அவர் இல்லம் தேடி வரும் அடியார்களின் நம்பிக்கையும் காரணமாக, புதுமை அன்னையின் ஆலயத்தை முன்னாள் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை 2000 ஆம் யூபிலி ஆண்டில் திருயாத்திரை திருத்தலமாக பிரகடனப்படுத்தினார்.
புதுமை மாதா புதிய ஆலயம்:
வரலாற்றுச் சிறப்பு மிக்க உன்னதமான புதுமை மாதா ஆலயமானது பழைமையின் காரணமாகவும், உள்நாட்டு யுத்தம் காரணமாகவும், ஆலயமானது போத்துக்கேயர் காலத்தில் இருந்து திருத்த வேலைகளுக்குட்பட்டு வந்ததாலும், ஆலய டோமில் பெரிய வெடிப்புக்கள் ஏற்பட்டதாலும், ஆலயச் சுவர் கண்ணாம்பு நீறு பயன்படுத்திக் கட்டப்பட்டிருந்ததாலும், மழைநீர் சுவர்களில் ஊறி வெடிப்புக்கள் காணப்பட்டதாலும், ஆலயத்தின் உறுதித் தன்மையை இழக்கத் தொடங்கியது.
எனவே ஆலயத்தைப் புதிதாக அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆயினும் அதற்குத் தேவையான நிதி கைவசம் இருக்கவில்லை.
இக்காலப்பகுதியின் (2001-2002) பங்குக்குருவாக வந்த சுவாமி அமிர்த ஜெயசேகரம் அடிகளார், பல்வேறு தடைகளையும் புதுமை அன்னையின் துணைகொண்டு வெற்றிபெற்று முன்னேறி, மேதகு ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையின் அனுமதியுடன் பழைய ஆலயத்தை இடித்து, புதிய ஆலயத்தை அமைப்பதற்கு முன்னின்று உழைத்தார். 03.02.2003 அன்று (அன்னையின் திருவிழாவன்று) மேதகு ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் பழைய ஆலயத்தின் பீடப்பகுதியின் கிழக்கு மூலையில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது. பணிகளும் துவக்கப்பட்டது.
தொடர்ந்து பொறுப்பேற்ற (2003-2008) அருட்பணி. R.J. சகாயநாயகம் அடிகளாரிடம் புதுமை அன்னையின் ஆலயத்தை அமைக்கும் பொறுப்புக் கையளிக்கப்பட்டது. இவர் முன்னைய பங்கு தந்தையர்களின் ஆலோசனையினாலும், மதிப்புக்குரிய யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களின் ஊக்குவிப்பாலும், ஒத்துழைப்பாலும் ஆலயப் பணியை தொடங்கினார். கட்டட வடிவமைப்புப் பணியினை அருட்தந்தை A.H. வேததாயகம் அ.ம.தி அடிகளார் சிறப்புறச் செய்து பங்குத்தந்தையிடம் ஒப்படைக்க, கட்டட நிபுணர்களின் உதவியோடு கட்டட வேலையை ஆரம்பித்தார். முதற்கட்டமாக 16.02.2005 அன்று பீடம் ஆலயத்தின் முன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு சிறியதொரு அறைவீடும் கட்டப்பட்டது. 06.05.2005 இல் அருட்தந்தை சகாயநாயகம் அடிகளாராலும், அருட்தந்தை வேதநாயகம் அடிகளாராலும் அஸ்திவாரம் இடப்பட்டுக் கட்டிடவேலைகள் ஆரம்பமாகின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள அன்னையின் பக்தர்களிடம் பெருமளவு நிதியினைச் சேகரித்து, அன்னையின் ஆலயம் சிறப்புற அமைய உதவி புரிந்தார்.
அன்னையின் புதுமையால் பணிகள் நிறைவுபெற்று, 25.01.2008 அன்று மேதகு ஆயர் கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு தடைகளையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் பங்குத்தந்தை எதிர் கொண்ட போதும் சளைக்காது ஆலயம் உயர்வு பெற உழைத்த பங்குக்குரு அருட்பணி. சகாயநாயகம் அடிகளார் குருநகர் இறைபக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
(2008-2016) அருட்பணி. R.C.X. நேசராஜா அடிகளார் காலத்தில், ஆலயக் கட்டட வேலைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, பழைய ஆலயத்தின் போட்டிக்கோ இடிக்கப்பட்டு, புதிய போட்டிக்கோ அமைக்கப்பட்டதோடு மணிக்கூட்டுக்கோபுர வேலைகள் ஆரம்பமாகி நடைபெறத் தொடங்கி, வேலை முடியும் முன்னர் பங்குத்தந்தை இடமாற்றம் பெற்று வேறு பங்குக்குச் சென்றார்.
தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்தந்தை யோ.யோ. மௌலிஸ் அடிகளார் காலத்தில் மேற்குப்பக்க மணிக்கூட்டுக் கோபுர வேலைகள் நிறைவுபெற்று, 24.01.2017 அன்று திருவிழா கொடியேற்றத்துடன் அர்ச்சிக்கப்பட்டது.
தொடர்ந்து பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார் காலத்தில் கிழக்குப்பக்க மணிக்கூட்டுக்கோபுர வேலைகள் முடிக்கப்பட்டதோடு, ஆலயத்தில் எஞ்சியிருந்த பல குறை வேலைகள் முடிக்கப்பட்டு, ஆலயம் முழுமை பெற்று வர்ணம் பூசப்பட்டு, 2018ஆம் ஆண்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. மேலும் அன்னைக்கென பொன்முடி, செங்கோல், பதக்கம், சங்கிலி என்பன செய்யப்பட்டன.
தொடர்ந்து பங்குக்குருவாகப் பணியாற்றிய அருட்பணி. C. யஸ்ரின் அடிகளார் காலத்தில் 2019இல் ஆலயத்தின் தளத்திற்கு ரெறாசோ பதிக்கப்பட்டது.
அருட்பணி. A.J. யாவிஸ் அடிகள் 2020இல் பங்குக்குருவாக பொறுப்பேற்ற போது ஆலயத்திருவிழா ஆரம்பமாக இருந்தது. புதுமை அன்னை யாழ்ப்பாண இராச்சியத்தின் பரிபாலினியாக ஒப்புக்கொடுக்கப்பட்டு, 400 வருடங்களை நினைவு கூர்ந்து, விழா கொண்டாட ஆயரின் அனுமதியைப் பெற்று, யூபிலி ஆண்டின் முதல் கட்டமாக 03.02.2020 அன்று ஆண்டு திருவிழா அன்று யூபிலி விளக்கொன்று ஏற்றப்பட்டது.
மேலும் 400 -ஆவது யூபிலி ஆண்டில் (1621-2021) பீடப்பகுதியில் மரக்கிறாதி அமைப்பதற்கும், திருப்பாடுகளின் காட்சிகளை வரைவதற்கும், புதுமை அன்னைக்கென ஒலி நாடாவை வெளியீடு செய்வதற்கும், ஆலய வரலாற்றைக் கல்வெட்டில் பதிக்கவும், ஆலய முன்றலில் அழகிய நுழைவாயில் ஒன்றை அமைப்பதற்கும், உறுதுணையாக இருந்த பங்குத்தந்தை அருட்பணி. A.J. யாவிஸ் அடிகளார் அவர்களை நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.
ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள்:
மெழுகுவர்த்தி ஆசீர்வதிக்கும் நிகழ்வு:
ஆரம்பத்தில் வேஸ்பர் தினத்தன்று நடைபெற்ற மெழுகுதிரி ஆசீர்வதிக்கும் நிகழ்வு, தற்போது 2ம் திருவிழா திருப்பலியின் போது, திருப்பலி ஆரம்பித்த பின்னர் இந்த நிகழ்வு இடம்பெறும். இதில் திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்கும் ஆயரும், அவரோடு இணைந்த குருக்களும், மெழுகுவர்த்தியை கையிலேந்தி ஆரம்பகாலத்தில் பீடப்பகுதியை மட்டும் சுற்றிவந்தனர். 2ம் வத்திக்கான் சங்கத்தின் மாற்றத்திற்கு பின்னர் இப்பவனி ஆலயத்தின் வெளிப்பகுதியை சுற்றி இடம்பெறும். திருப்பலிக்கு வருகைதரும் மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி கொண்டு வருவர். அவற்றை ஆயர் அல்லது குருக்கள் ஆசீர்வதிப்பர். மெழுகுவர்த்திகள் சுடர்விட்டு எரிந்து சிறு வழிபாடு நடைபெறும். அவ்வழிபாடு முடிவடைந்த பின்னர் மக்கள் மெழுகுதிரியை வீட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பர். வீடுகளில் செபம்செய்யும் போதும், வீட்டில் உள்ளவர்களுக்கு நோய்கள் ஏற்படும் போதும் இந்த மெழுகுதிரியை ஒளிரச்செய்து செபம் செய்வர்.
குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வு:
அன்னை மரியாள் இயேசு பாலனை காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததன் நினைவாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில் பெற்றோர்களும், தம் பிள்ளைகளை காணிக்கையாக்குவதற்கு அன்னையின் ஆலயத்தைத் தேடி வருவர். எனவே ஆலயத்தில் அந்நாள் முழுவதும் குருக்கள் தங்கியிருந்து, ஆலயத்திற்கு வரும் குழந்தைகளை ஆசீர்வதித்து வந்தனர். இந்த நிகழ்வு அன்றைய நாள் முழுவதும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும்.
ஆலய திருவிழாவிற்கு பின்னரான நடைமுறைகள்:
அன்னையின் சுரூபத்தை தலையில் வைத்தல்:
இது புதுமை மாதா ஆலயத்திற்கே உரித்தான சடங்கு முறையாகும். திருவிழாவிற்காக வெளியே எடுக்கும் அன்னையின் திருச்சொரூபத்தை மீண்டும் உள்ளே எடுத்துச் செல்லும் வேளையில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. மக்கள் கொலுவிருக்கும் அன்னையின் வெளி அடைப்பைச் சுற்றி மக்கள் முழந்தாழில் மிக நீண்ட வரிசையில் இருப்பர். அப்போது கோயில் பரிபாலகர் அன்னையின் திருச்சொரூபத்தை தூக்கி பக்தர்களின் தலையில் வைப்பர். இதன் போது மக்களின் நோய்களும், துன்பங்களும் விலகிவிடுவதாக மக்கள் விசுவசித்தனர். இச்சடங்கு நீண்ட காலமாக இடம் பெற்றுவருகிறது எனினும் பிற்காலங்களில் நிறுத்தப்பட்டது. எனினும், அன்னையை உள்எடுக்கும் நாள் மாலையில் நன்றி வழிபாடு இடம்பெறும். இதில் பெருமளவில் மக்கள் பங்கேற்பர். வழிபாட்டின் முடிவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர் இடம்பெற்று, அன்னையின் திருச்சொரூபம் உள்ளெடுக்கப்படும். இம் மாலை வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. யஸ்ரின் அடிகளாராவார்.
குழந்தைகளை விற்று வாங்கும் நிகழ்வு:
தொன்றுதொட்டு அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வாகும். இது குழந்தைகளுக்கு உரித்தான சடங்காகும். ஆலய பரிபாலகரிடம் பெற்றோர்கள் தம் குழந்தையை ஒப்படைப்பர். பரிபாலகர் பெற்றோர்கள் குறிப்பிடும் தொகைக்கு குழந்தையை அன்னைக்கு விற்று, பின்னர் பெற்றோர் அன்னையின் உண்டியலில் பணத்தை போட்டு, தம் பிள்ளையை வாங்கிக்கொள்வர்.
புதுமை அன்னையின் திருச்சொரூபம் மக்களின் வழிபாட்டிற்காக 3 நாட்கள் இடம்மாற்றம் செய்யும் நிகழ்வு:
இந்த நிகழ்வு புராதன காலம் முதல் நடைபெற்று வருகின்றது என முன்னோர்களால் கூறப்பட்டது. திருவிழாவுக்கு முன்னர் நற்கருணை பெருவிழா அன்று, மக்களின் வழிபாட்டிற்காக வெளியில் எடுக்கப்படும் அன்னையின் திருச்சொரூபம், திருவிழாவின் பின்னரான 3 நாட்கள் பக்தர்களின் வழிபாட்டிற்காக வெளியில் வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கலை ஆக்கங்களில் அன்னையின் திருச்சொரூபம் வைக்கப்படும். உதாரணமாக (இலங்கை பூகோளம், அரண்மனை கன்னிகை, முடி, தாமரைப்பூ, பூச்சாடி) எனும் கலை ஆக்கம்.
இந்த முறையானது நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டதாக காணப்படுகிறது. ஆலய பரிபாலர்கள் பக்தர்களால் வழங்கப்படும் செபமாலை மற்றும் நூலை வாங்கி, அன்னையின் திருச்சொரூபத்தை தடவி, நூலினை அளந்து பக்தர்களிடம் கொடுப்பது வழமையாகும். அத்தோடு பெற்றோர்கள் தம் சிறு குழந்தைகளை பரிபாலரிடம் வழங்கி, அன்னையின் பாதத்தில் வைத்து எடுப்பதும் வழமையாகும். இந்நிகழ்வுகள் மூலம் நோய்கள் நீங்கப்படும் என்பதும், அன்னையின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதும் மக்களின் உறுதியான நம்பிக்கையாகும். அன்னையை தரிசிக்க இந்நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சமய வேறுபாடின்றி குடும்பம் குடும்பமாக ஆலயத்திற்கு வருகை தருவர். காலைமுதல் மாலைவரை ஆலயத்தில் தங்கி இருந்து தங்களின் வேண்டுதல்களையும், நன்றிகளையும் அன்னையின் முன் தெரிவிப்பர். இந்த மூன்று நாட்களும் ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழியும். இந்த மூன்று நாட்களிலும் அன்னையின் பக்தர்கள் பல சுபகாரியங்களை செய்வர். ஆலயத்திற்கு வருகை தந்து பிள்ளைக்கு பெயர் வைத்தல், ஏடுதிறத்தல், பிள்ளைக்கு சோறுஊட்டல், திருமண ஒப்பந்தங்களை ஆலயத்திற்குள் செய்தல், பெண்பார்க்க வருதல், அந்நாட்களில் புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டுதல், புதுமனை புகுதல், கடலிலே புதிய வள்ளம் இறக்குதல், தொழில் முயற்சிகளை மேற்கொள்ளல் போன்ற காரியங்களை மேற்கொள்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மூன்று நாட்களும் காலை முதல் மாலைவரை மக்கள் உணவுப் பொருட்களை வழங்கிய வண்ணம் இருப்பார்கள். அதாவது சோறு, குளிர்பானம், கஞ்சி, பிஸ்கட், சர்பத், சவ்வரிசி போன்றவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு கொண்டே இருக்கும். இது ஒருபுறம் இருக்க மெழுகுவர்த்திகள் அது கொழுத்தும் இடத்தில் நிரம்பிவழியும். பக்தர்கள் அன்னை மீது கொண்ட அன்பினையும், பாசத்தினையும், பக்தியினையும் இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு அடிப்படைக்காரணம் யாதெனில் நாடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் புதுமைதாயவள் ஓடிவந்து அருள் புரிபவளாக இருப்பதேயாகும். எனவேதான் இன்றுவரை பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகை தந்து, அன்னையை தரிசித்து ஆசீர்களையும் பெற்றுச் செல்கின்றனர்.
நானூறு ஆண்டுகளைக் கடந்த , நானிலம் போற்றும் புதுமை அன்னையின் ஆலயம் வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
வரலாறு: 400-வது யூபிலி ஆண்டு மலர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருளானந்தம் யாவிஸ் அவர்களின் அனுமதியுடன் ஆலய உறுப்பினர்கள் கீ.நோயல் சர்வானந்தா மற்றும் கீ. மேரியன் நித்தியானந்தா ஆகியோர்.










