1043 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், மணலி புது நகர்

              

அற்புத குழந்தை இயேசு திருத்தலம் 

இடம்: மணலி புது நகர், விச்சூர் ஊராட்சி, சென்னை, 600103

மாவட்டம்: திருவள்ளூர்

மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: குழந்தை இயேசு மறைவட்டம், மணலி 

 நிலை: சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட திருத்தலம் 

சிற்றாலயம்:

புனித அந்தோனியார் ஆலயம், மணலி புது நகர்

பங்குத்தந்தை அருட்பணி. H. தங்க குமார் 

குடும்பங்கள்: 320

அன்பியங்கள்: 11

திருவழிபாட்டு நேரங்கள்:

ஒவ்வொரு மாதத்தின் முதல் வியாழக்கிழமை அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு நாள்.

தமிழில் திருப்பலிகள் காலை 07:00 மணி, 09:00 மணி, 10:30 மணி, பிற்பகல் 12:00 மணி, 01:30 மணி, 03:00 மணி, மாலை 05:30 மணி நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெறும். ஒவ்வொரு திருப்பலிக்கு பிறகும் தேர்பவனி நடைபெறும். குழந்தை இயேசுவின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இதர வியாழன் காலை 07:00 மணி, 10:30 மணி மற்றும் மாலை 05:30 மணிக்கு தமிழில் திருப்பலிகள் நடைபெறும்.

ஞாயிறு காலை 07:15 மணி திருப்பலி (தமிழ்)

காலை 09:30 மணி திருப்பலி (தமிழ்)

மாலை 05:00 மணி திருப்பலி (தமிழ்-சிற்றாலயம்)

வார நாட்களில் திருப்பலி காலை 06:30 மணி (தமிழ்)

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணி திருச்செபமாலை, ஆராதனை, திருப்பலி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6:00 மணி திருச்செபமாலை, திருப்பலி

ஒவ்வொரு மாதமும் 11-ம் தேதி மாலை 06:00 மணி திருச்செபமாலை, திருப்பலி, புனித லூர்து அன்னையின் கெபியில் ஆசீர்.

திருவிழா: ஆண்டின் முதல் ஞாயிறு, அல்லது ஆண்டின் முதல் வியாழன் பிறகு வரும் ஞாயிறு.

புனித அந்தோனியார் சிற்றாலயம்:

ஞாயிறு திருப்பலி மாலை 05:30 மணி

மாதத்தின் முதல் செவ்வாய், மாலை 05:30 மணி திருப்பலி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. லியோ ஜோசப், சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

2. அருட்பணி. லியோ ஜோசப், Congregation of the Servants of Charity

Shrine location: SH 104, Ezhil Nagar, Elandanur, Chennai, Vichoor Village, Tamil Nadu 600103, India

வழித்தடம்: 

பேரூந்து : பிராட்வே -மீஞ்சூர் - 56P,  பிராட்வே - மணலி புது நகர் 56J,  எழும்பூர் -மணலி புது நகர் 28A, கோயம்பேடு -மணலி புது நகர் 121C, 121ட

மெட்ரோ ரெயில் வழித்தடம்: 

அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் விம்கோ பணி மனை நிலையம். அங்கிருந்து ஷேர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் திருத்தலம் வந்தயடையலாம்.

Church Map location: https://maps.app.goo.gl/9JLbmbe25Jg9KA3k9

அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் வரலாற்றுப் பதிவுகள்:

அற்புத குழந்தை இயேசுவின் திருத்தலமானது சென்னையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில், மீஞ்சூர் –பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விச்சூர் ஊராட்சியில், மணலி புது நகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1980 ஆகஸ்ட் 25-ஆம் தேதி அருட்பணியாளர் ஜான் கொட்டாரம் அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. 

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி–மத பேதமின்றி இந்த ஆலயத்தை தரிசித்து, அற்புத குழந்தை இயேசுவின் அருளும் ஆசீர்வாதங்களும் பெற்று வருகிறார்கள். இந்த புனிதத் தலம் ஒரு நாள் திருயாத்திரைக்கு மிகத் தகுந்த இடமாகத் திகழ்கிறது. இங்குள்ள அழகிய ஆலயம், குழந்தை இயேசுவின் சிற்றாலயம், 

அழகிய சிலுவைப்பாதை நிலைகள் மற்றும் கல்வாரி மலை, புனித லூர்து அன்னையின் கெபி, சாலையோரக் குழந்தை இயேசு சிற்றாலயம், புனித பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவை இந்த தலத்தின் புனிதத்தையும் ஆன்மீக அர்த்தத்தையும் மேம்படுத்துகின்றன.

திருத்தலத்தின் குறிக்கோள் மற்றும் புதுமைகள் :

“அன்பு செய்க! ஆசீர் பெறுக!!”

ஒவ்வொரு மாதத்திலும் முதல் வியாழக்கிழமை குழந்தை இயேசுவின் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை முதல் மாலை வரை திருப்பலிகள் நடைபெறும். ஒவ்வொரு திருப்பலிக்குப் பின்பும் தேர்பவனி நடைபெறுகிறது. விடியற்காலையிலிருந்தே பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்தத் திருத்தலத்திற்கு வந்து சிறப்பு ஜெபங்களிலும், தேர் பவனியிலும் கலந்துகொண்டு அமைதியும் ஆனந்தமும் அடைந்து திரும்புகின்றனர்.

ஏராளமான புதுமைகளும் சாட்சியங்களும் திருத்தலத்தில் நிறைவேறியுள்ளன. குறிப்பாக குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு, அற்புத குழந்தை இயேசுவின் அருளாலும் ஆசீராலும் குழந்தை வரம் பெற்று செல்வது இத்திருத்தலத்தின் முக்கியமான புதுமையாகும்.  

பக்தர்கள் எண்ணிக்கை பெருகியதால்

அவர்களை அரவணைக்கும் வகையில்

பெரிய ஆலயம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே புதிய ஆலயம் கட்டப்பட்டு, 2005 டிசம்பர் 21-ஆம் தேதியன்று புனிதபடுத்தி திறக்கப்பட்டது. அதே நேரத்தில்

பங்கின் வெள்ளி விழாவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயத்தின் ஏழு கதவுகள் ஏழு இரகசியங்களையும், பதினான்கு ஜன்னல்கள் சிலுவைப்பாதையின் 14 நிலையங்களையும் குறிக்கின்றன. ஆலய பீடம் அமைந்துள்ள இடம் கொட்டகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறம் பெத்லகேம் நட்சத்திரத்தை நினைவுபடுத்தும் நட்சத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு, அற்புத குழந்தை இயேசுவின் சிற்றாலயம் பக்தர்களின் ஆன்மீக ஈர்ப்பை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

திருத்தலமாக உயர்த்தப்படல்:

திருத்தல வரலாற்றின் மைல்கல்லாக 2005 செப்டம்பர் 8-ஆம் நாளில், முன்னாள் சென்னை மறைமாவட்ட பேராயர்  டாக்டர் A.M. சின்னப்பா SDB, DD, Ph.D அவர்கள் இந்த ஆலயத்தை சென்னை -மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் திருத்தலமாக மேம்படுத்தி உயர்த்தினார்.

திருத்தலம் பற்றிய மேலும் சில குறிப்புகள்:

திருத்தலம் சுமார் 320 குடும்பங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களையும் கொண்ட ஒரு ஆன்மீகக் குடும்பமாக திகழ்கிறது. இந்த அனைத்து குடும்பங்களும் பகுதி அடிப்படையில் 11 அன்பியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இயேசுவின் திருதூதர்களின் பெயர்களில் அழைக்கப்படுவது ஒரு சிறப்பு.

திருத்தலத்தில், பங்குத் தந்தையைத் தலைவராகக் கொண்டு பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பு, இளையோர் குழு, மரியாயின் சேனை, வின்சென்ட் தே பால் குழு, பீட சிறுவர் சிறுமியர், நல்ல சமாரியன் குழு, இயேசுவின் நண்பர்கள் குழு  ஆகிய பல ஆன்மீக செயல்பாடுகள் அழகாக நடைபெற்று வருகின்றன.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் திருத்தலத்துக்குத் திரண்டு வந்து, அற்புத குழந்தை இயேசுவின் அருளை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை அருளும் அற்புதம் இங்கு பெருமளவில் நிகழ்ந்ததாகப் பல சாட்சிகள் கூறுகின்றனர்.

மேலும் வேலைவாய்ப்பு, திருமணம், வெளிநாட்டு வேலை, தேர்வு வெற்றி, உடல் நலம் போன்ற பல நோக்கங்களுக்காக ஜெபிக்கும் பக்தர்கள் அற்புத குழந்தை இயேசுவின் அருளை அனுபவித்ததாக அநேக சாட்சிகளைப் பகிர்ந்துள்ளனர். 

திருத்தலத்தில் பல அற்புதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இங்கு சிறப்பு வாய்ந்த “தொட்டில் குழந்தை” வழிபாடு நடைபெறுகிறது;

அற்புத குழந்தை இயேசுவின் ஆசீர்வாதம் கிடைக்க குழந்தைகள் தொட்டிலில் வைக்கப்படுவர். கடன் தீர்வு, உடல் நலம், வீடு கட்டுதல் போன்ற பல அற்புதங்களுக்கும் மக்கள் சாட்சி அளித்து வருகின்றனர்.

திருத்தலத்தில் ஒப்புரவு, ஆலோசனை, ஜெப உதவி ஆகியவற்றிற்காக முதல் வியாழன் அன்று குருக்கள் காலை முதல் மாலை வரை உள்ளனர்.

திருத்தல வளாகத்தில் புனிதப்பொருட்கள் பொருள் விற்பனை நிலையமும், பக்தர்களுக்காக உணவகம் வசதியும் உள்ளது.

திருத்தலத்தின் சாலையோரத்தில் இரவு 9 மணிக்குப் பின்பும் மக்கள் ஜெபிக்கக்கூடிய வகையில் மெழுகுவர்த்தி ஏற்றும் வசதி கொண்ட சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

திருத்தலத்தின் துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலயம்,

திருத்தலத்திலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

விவிலியத்தின் 72 புத்தகங்களை 330 பங்கேற்பாளர்கள் 92 மணி 21 நிமிடங்களில்

நிறுத்தமில்லாமல் வாசித்தற்கு,

திருத்தலத்திற்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்பவற்றிலிருந்து சிறப்பான விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும், திருத்தல வளாகத்துக்கு அருகேயுள்ள சேவா மிஷனரி அருட்சகோதரிகள் (அருட்தந்தை ஜான் கொட்டாரம் அவர்கள் நிறுவிய அமைப்பு) திருத்தலத்திற்கும், சுற்றுப்புற மக்களுக்கும் பல வழிகளில் சேவை செய்து வருகின்றனர். அவர்கள் நடத்தும் குழந்தை இயேசு பள்ளி மற்றும் குழந்தை இயேசு மருத்துவமனை

திருத்தலப் பணியை மேலும் சிறப்புறச் செய்கின்றன.

அருட்தந்தையர்களின் அரும்பணிகள்:

சென்னையின் மணலி புது நகரில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலம், இன்றைக்கு அனைவராலும் அறியப்படும் ஒரு புகழ் பெற்ற ஆன்மீகத் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயம் 1980 டிசம்பர் 25 ஆம் தேதி புனித கிறிஸ்துமஸ் நாளில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் எண்ணற்ற அற்புதங்கள் இங்குச் செயல்பட்டதாகப் பல பக்தர்கள் சாட்சியமாக கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கான முயற்சியை ஆரம்பித்தவர் அருட்தந்தை ஜான் கொட்டாரம் அடிகளார். 

அருட்தந்தை ஜான் கொட்டாரம் (1980–1998)

சேவை மனப்பாங்குடன் மக்களுக்கு சேவை செய்யவும், நற்செய்தி பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் ஊக்கமடைந்து, 1937 ஆம் ஆண்டு பூந்தமல்லி புனித இருதய மறைபள்ளியில் சேர்ந்தார். அவரின் வாழ்நாள் இலட்சியம் “சென்று, அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவியுங்கள்” என்பதோடு அவர் வாழ்ந்தார்.

அருட்திரு ஜான் கொட்டாரம், வட சென்னைப் பகுதியில் கிறிஸ்தவ மக்களின் பற்றாக்குறையை மிகுந்த வருத்தத்துடன் உணர்ந்தார். இந்த உணர்வு, அவரை வட சென்னை மற்றும்  தொலைந்த கிராமங்களுக்குத் கிறிஸ்துவின் நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபடுத்தியது.

அவர் ஒரு மருத்துவர் மற்றும் மரியாவின் சேனை குழுவினரை அழைத்துக்கொண்டு காட்டூர், மீஞ்சூர் போன்ற இடங்களில் மக்களுக்குச் ஆன்மீக, சமூக, கல்வி, மருத்துவ சேவைகள் செய்தார்.

குறிப்பாக காட்டூரில், மாற்றங்கள் வெகுவாக நடைபெற்று புனித யூதா ததேயுவிற்கான ஆலயம் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணலி புது நகர் ஆலயத்தையும் அருட்திரு ஜான் கொட்டாரம் மிகுந்த உற்சாகத்துடன் முன்னேற்றினார். அற்புத குழந்தை இயேசுவின் அருளால், 1980 டிசம்பர் 25ஆம் தேதி குழந்தை இயேசுவுக்கான இந்த புனித ஆலயத்தை கட்டிடப்பணி முடிந்தது. மணலி புது நகரில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் அவரால் கட்டப்பட்டது. இது தற்போது அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் துணை ஆலயமாகத் திகழ்கிறது.

அருட்தந்தை Y. F. போஸ்கோ (1998–2006)

1997ஆம் ஆண்டு, இந்த மேன்மையான அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின்

முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை Y.F. போஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.

திருத்தலத்தின் அனைத்து பரப்பிலும்

அவர் பல சிறப்பான பணிகளை மேற்கொண்டு திருத்தல வளர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார். 

அருட்தந்தை போஸ்கோ அவர்கள் பணிசெய்த காலத்தில் பக்தர்கள் திருத்தலத்தை நோக்கி அதிக அளவில் ஈர்க்கப்பட்டனர். அதற்குக் காரணம் ஆன்மீக நிறைவு கொண்ட சூழலும், அர்த்தமுள்ள வழிபாடுகளும், ஒழுங்கான பரிசுத்த நிகழ்வுகளும். 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தை புதிதாக கட்டமைத்து புதுப்பித்து அழகுபடுத்தினார்.

அவரின் பணிகளில், புதிய பங்குத்தந்தை இல்லம் அமைத்தது, விவிலிய கோபுரம் கட்டுதல், மற்றும் சிலுவைப்பாதை, ஜெபமாலை நிலைகள் அமைத்தல், அற்புத குழந்தை இயேசுவின் புகழை மென்மேலும் பரவச் செய்ய பல ஒலிநாடாக்கள் வெளியிட்டார். வத்திக்கன் வானொலியில் மணலி புது நகர் குழந்தை இயேசு ஆலயத்தை பற்றி பேசியது எனப் பல முக்கியமான திருத்தல முன்னேற்றங்கள் அடங்குகின்றன. அற்புத குழந்தை இயேசுவின் மகிமையை

பெருக்கிவைக்க அவர் செய்த சிறப்பான தியாகங்களில் ஒன்று, 25 ஏழை குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளை கட்டிக் கொள்ள நிலத்தை வழங்கியதாகும். இந்தச் செயலால் அவர் கிறிஸ்துவின் அன்பைச் செயலால் வெளிப்படுத்திய ஒரு பெரிய மேய்ப்பராகத் திகழ்ந்தார்.

அருட்தந்தை இக்னேஷியஸ் தாமஸ் (2006–2012)

அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின்

இரண்டாவது பங்குத்தந்தையாக .2006 மே மாதத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த நாளிலிருந்து 2012 வரை திருத்தல வளர்ச்சிக்காக அவர் எண்ணற்ற சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

அவர் செய்த முக்கியப் பணிகளில்:

• புதிய நற்கருணை ஆலயத்தை உருவாக்கியது. ஆலய வளாகத்தில் பக்தர்கள் நடக்க வசதியாக கல் பாதை வளாகம் உருவாக்கினார். 

• ஆலயத்தின் பீடமும்,அற்புத குழந்தை இயேசுவின் சிற்றாலயமும் நவீன முறையில் புதுப்பித்தல்.

• ஆலய மணி கோபுரம் கட்டுதல்

இவை அனைத்தும் திருத்தலத்தின் ஆன்மீக அழகை மிகுந்த பெருமையுடன் உயர்த்தின.

அற்புத குழந்தை இயேசுவின் மகிமையை

உலகம் தழுவப் பரப்பும் நோக்கில்,

அவர் தொடங்கியவை:

• “குழந்தை ஒளி” மாத இதழ் உலகம் முழுவதும் பக்தர்களை சென்றடைந்தது.

• செவிசாய்க்கும் இறைவன், தேடி வந்தேன் போன்ற பல ஒலிநாடாக்கள் வெளியிடப்பட்டது.

• திருமண உதவி மையம் துவங்கப்பட்டது.

முதல் வியாழன் அன்று குழந்தை இயேசு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு துவங்கப்பட்டது. அவரின் பணி, திருத்தலத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும் பக்தர்களின் நன்மைக்கும்

ஒரு பொற்காலமாக அமைந்தது.

அருட்தந்தை பெலவேந்திரம் (2012–2017)

அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின்

மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்தந்தை பெலவேந்திரம் அவர்கள், 2012 ஜூன் மாதத்தில் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் பொறுப்பை ஏற்று திருத்தல வளர்ச்சிக்காக அவர் பல அருமையான பணிகளைச் செய்தார்.

அருட்தந்தை பெல்வேந்திரம் அவர்கள்

திருத்தலத்தின் ஆன்மீக வளத்தை உயர்த்தும் நோக்கில்,

• அற்புத குழந்தை இயேசுவுக்கான சாலையோர சிற்றாலயத்தை கட்டினார்

• திருத்தலத்திற்கான பெரிய நுழைவு வாயில் அமைத்தார்

• திருத்தல வளாகத்தின் முழுமையான சுவர் மற்றும் கட்டடப் பூச்சு வேலைகளை

சிறப்பாக நிறைவேற்றினார்.

அருட்தந்தையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று:

சென்னை -மயிலை மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த துணை ஆலயத்தின் நிலப் பதிவு பிரச்சனை வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நிலம் மறைமாவட்டச் சொத்தாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.

அருட்தந்தை தாமஸ் இளங்கோ (ஜூன் 2017 முதல் 2022 வரை)

அருட்தந்தை  தாமஸ் இளங்கோ அவர்கள்,

உயர்ந்த ஆன்மீக வழிநடத்தலும் புதிய சிந்தனைகளும் மேன்மையான திருப்பலி வழிபாடுகளும் மூலம் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றார்.

அவர் காலத்தில் செய்யப்பட்ட முக்கிய முன்னேற்றங்கள்:

• கல்லில் அழகான கொடிமரம் அமைக்கப்பட்டது

• புனித லூர்து அன்னை கெபி 

புதிதாக கட்டப்பட்டது

• சிலுவைப் பாதை நிலைகள் மற்றும் கல்வாரி மலை அமைக்க பட்டது.

• அற்புத குழந்தை இயேசு சிற்றாலயம் புது பொலிவுடன் உருவமைக்கப்பட்டது.

இத்தகைய வளர்ச்சி பணிகள் 

திருத்தலத்தின் அழகையும் ஆன்மீக மகிமையையும் உயர்த்தியுள்ளன.

அவரின் இடையறாத அர்ப்பணிப்பு, உழைப்பு, மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஆன்மீக புதுமைகளால் அற்புத குழந்தை இயேசு திருத்தலம் நாளுக்கு நாள் பெரிதும் வளர்ந்தோங்கியது.

அருட்தந்தை தங்ககுமார் (2022 முதல்)

அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஐந்தாவது பங்குத்தந்தையாக அருட்தந்தை தங்ககுமார் அவர்கள் 2022 ஜூன் மாதத்தில் பொறுப்பேற்றார். திருத்தல வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட பணிகள் மக்களின் ஆன்மீகத் தேவைகளையும் அவர்களின் உடல் நலனையும் கவனத்தில் கொண்டு அர்ப்பணிப்புடன் வடிவமைக்கப்பட்டவை:

திருத்தலத்திற்கு வருபவர்கள்

தண்ணீர் வசதிக்காக அவதியுறாமல் இருக்க, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்து, ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நன்மை வாய்ப்பை உருவாக்கினார்.

திருப்பலியின் மையமும் ஆன்மீகத்தின் இதயமாகவும் விளங்கும் ஆலயப் பீடம். இதனை அற்புதமாகவும் மிகுந்த கலைநயத்தோடும் புதுப்பித்தார்.

இன்று பீடம், குழந்தை இயேசுவின் அருளை மகிமையைப் பிரதிபலிக்கும் ஒளி நிறைந்த மையமாக திகழ்கிறது.

திருத்தலத்தில் புதிய அன்னதானக் கூடத்தை எழுப்பினார். அதன் மூலம் மிகுந்த ஒழுங்குடனும் அன்புடனும் பக்தர்களுக்கு முதல் வியாழனன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி, திருத்தலத்தை இன்னும் அழகாகவும் ஒழுங்காகவும் வளரச் செய்கின்ற

பல பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அற்புத குழந்தை இயேசுவின் அருளால் அற்புத பலன்களை அளிக்கிறது. அருட்தந்தை அவர்களின்  தாழ்மையும், ஆன்மீக உறுதியும், அர்ப்பணிப்பும், அன்பும் நிறைந்த மேய்ப்பராக திருத்தலத்தின் வளர்ச்சிக்க ஒரு அற்புத ஆதாரமாகத் திகழ்கிறார்.

பங்கில் உள்ள பத்த சபைகள் இயக்கங்கள்:

1.பங்குப் பேரவை

2.அன்பிய ஒருங்கிணைப்பு 

3.புனித வின்சென்ட் தே பவுல் சபை

4.மரியாயின் சேனை

5.இளையோர் குழு 

6. பாடற்குழு

7. நல்ல சமாரியன் குழு 

8.இயேசுவின் நண்பர்கள் குழு 

9. புனித அசிசியார் குழு

10.பீடச் சிறுவர் சிறுமியர்.

புதுமைகள் புரியும் மணலி புது நகர் அற்புத குழந்தை இயேசு திருதலத்திற்கு அனைவரும் வாருங்கள்!  அற்புத குழந்தை இயேசுவின் ஆசீர் பெற்று செல்லுங்கள்!!

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. தங்ககுமார் அவர்களின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திரு. S. அருண் ஆரோக்கியதாஸ் அவர்கள்.