1047 திருஇருதய ஆண்டவர் பேராலயம், தஞ்சாவூர்

                

திருஇருதய ஆண்டவர் பேராலயம்

இடம்: தஞ்சாவூர்  

முகவரி:  Sacred Heart Cathedral Church, Pookkara Street, Kallukulam Road, Thanjavur - 613 001.

மறைமாவட்டம்: தஞ்சாவூர்

மறைவட்டம்: தஞ்சாவூர்

மாவட்டம்: தஞ்சாவூர்

நிலை: தஞ்சை மறைமாவட்ட பேராலயம்

கிளைப்பங்குகள்:

1. அந்தோணியார் புரம்

2. இரயில்வே காலனி

3. கீழவாஸ்தா சாவடி

4. பிலோமினா நகர்

5. பாத்திமா நகர்

6. கரைமீண்டார் கோட்டை

குடும்பங்கள்: 1200

அன்பியங்கள்: 35

அதிபர் & பங்குதந்தை 

பேரருட்பணி. A. M. A. பிரபாகர்

உதவி பங்குத்தந்தையர்

அருட்பணி. S. அரவிந்த்

அருட்பணி. M. ஜெனித் லாரன்ஸ், SJ 

திருவழிபாட்டு நேரங்கள்:

பேராலயத்தில்:

ஞாயிறு திருப்பலி காலை 05:45 மணி, காலை 07:00 மணி, காலை 09:00 மணி & மாலை 06:00 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி, மாலை 06:00 மணி

சனி மாலை 06:00 மணி திருப்பலி (ஆங்கிலம்)

திங்கள் மாலை 05:30 மணி செபமாலை, சகாய மாதா நவநாள், குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, திருஎண்ணெய் பூசுதல் மற்றும் திருப்பலி 

மாதத்தின் முதல் வெள்ளி காலை 10:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை நற்கருணை ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு மற்றும் திருப்பலி 

வியாகுல அன்னை ஆலயத்தில் திருப்பலி:

ஞாயிறு காலை 08:45 மணி (மறைக்கல்வி திருப்பலி)

சனி காலை 06:00 மணி & மாலை 06:00 மணி

சனி மாலை 05:30 மணி (மலையாளம்) 

திருவிழா: ஜூன் 28-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1.அருட்பணி. A. அகஸ்டின் அம்புரோஸ், தஞ்சாவூர் 

2.அருட்பணி. S. மரியலூயிஸ், தஞ்சாவூர்

3.அருட்பணி. A. சூசை அருள், தஞ்சாவூர்

4.அருட்பணி. S. செலஸ்டின், தஞ்சாவூர் 

5.அருட்பணி. A. வின்சென்ட் தேவராஜ், தஞ்சாவூர் 

6.அருட்பணி. C. இருதயராஜ், தஞ்சாவூர்

7.அருட்பணி. A. ஜெயாாஜ், தஞ்சாவூர் 

8.அருட்பணி. B. குழந்தைராஜ், தஞ்சாவூர் 

9.அருட்பணி. A. சவரிமுத்து, தஞ்சாவூர் 

10.அருட்பணி. A.M. லூர்து சாமி, தஞ்சாவூர் 

11.அருட்பணி. U. ஜான் ஜோசப் சுந்தரம், தஞ்சாவூர்

12.அருட்பணி. B. பால்ராஜ் சாப்ளின், தஞ்சாவூர்

13.அருட்பணி. S. ஜோசப் லயனல், தஞ்சாவூர் 

14.அருட்பணி. S. ஜோசப் செல்வராஜ், தஞ்சாவூர் 

15.அருட்பணி. S. ஜான் விக்டர், தஞ்சாவூர் 

16.அருட்பணி. J.J. பிரிட்டோ, தஞ்சாவூர் 

17.அருட்பணி. A. ஆன்டோ சேசுராஜ், தஞ்சாவூர் 

18.அருட்பணி. தேவாரம், OFM Cap., மணிலா

19.அருட்பணி. அருள் சேவியர் ராஜ், OFM Cap., சென்னை

20.அருட்பணி. S. பிராங்கோ எடின், தஞ்சாவூர்

21.அருட்பணி. M. பீட்டர் தமியான் துரைராஜ், தஞ்சாவூர் 

22.அருட்பணி. S. கரோல் அருள் சின்னப்பன், தர்மபுரி

23.அருட்பணி. கிறிஸ்டோபர், MMI, Africa

மற்றும் பல அருட்சகோதரிகள்…

Website: WwW.Sacredheartsathedralthanjavur.com

Facebook: Sacred Heart Cathedral Thanjavur

Blog: www.shotnj.blogspot.com

Church Map location: Sacred Heart Cathedral, Thanjavur

https://maps.app.goo.gl/CUC7RtS3eAt41AUx7

தஞ்சைப் பேராலய வரலாறு:

புவியமைப்பு:

வடபுரம் செழிப்பான காவிரிக் கழிமுக நன்செயும், தென்புறம் வளமைக் குன்றாத புன்செய் நிலப் பகுதியையும் உடைய  தஞ்சையானது, தொன்றுதொட்டு பலவகை கட்டிடக்கலைகள், நுண்கலைகள் மற்றும் பன்முக கலாச்சாரமும் பண்பாடுகளும் கொண்டிருப்பதால், தஞ்சாவூர் மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையத்தின் அமைப்பிடமாகத் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அரசியல் பின்புலம்:

சோழநாடு சோறுடைத்து என்ற பெருமைக்குரியது. சோழநாட்டை மாமன்னன் இராசராசன் (955 - 1014) ஆண்டபோது தஞ்சை அவனது தலைநகரமாயிருந்தது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய சோழப் பரம்பரையின் ஆட்சி கி.பி.15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு சில காலம் தஞ்சைப்பகுதி வடநாட்டு விஜயநகரம் மற்றும் மொகலாய சாம்ராச்சியங்களின் கீழ், பல குறுநில மன்னர்களாலும், நவாபுகளாலும் கப்பம் கட்டி ஆளப்பட்டு வந்தது. பிற்பாடு கி.பி 1535 முதல் கி.பி 1675 வரை நாயக்க வம்ச மன்னர்களாலும், கி.பி 1676 முதல் கி.பி 1855 வரை மராட்டிய வம்ச மன்னர்களாலும் ஆளப்பட்ட தஞ்சை இராச்சியத்தின் தலைநகராக தஞ்சை விளங்கி வந்த நிலையில், கி.பி 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் தொடர்ந்த ஆங்கிலேயரின் மேலாதிக்கம், கி.பி 1947-இல் இந்தியா விடுதலைப் பெறும்வரை நீடித்துள்ளது.

மறைவரலாற்றுப் பின்னணி:

கி.பி.முதலாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தென்னிந்திய மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரையோரம், இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான புனித தோமையாராலேயே கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது பெருமைக்குரியதாக இருந்தாலும்; அதற்குப்பிற்பாடு, போர்ச்சுகீசிய 'பத்ருவோதா' மறைபரப்பு அமைப்பின் ஆதரவின் கீழ், கி.பி பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான், பதருவோதா மறைபரப்பு அமைப்பைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் சபையினர் மறைபரப்புப்பணிக்கு தென்னிந்தியா வந்தனர். அப்போது மலபார் கடற்கரைப்பகுதியில் மட்டுமே கிறிஸ்தவம் தழைக்காவிடினும், துளிர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நம் தமிழ்நாட்டில் அது மறைந்து போயிருந்தது. பிரான்சிஸ்கன் சபையினர் முத்துக்குளித்துறை வந்தடைந்து, பரதவர்களின் முத்துக்குளித் தொழிலை, மூர் எனும் அரேபியரும், உள்ளூர் மரைக்காயர் முகமதியர்களும் கைப்பற்றும் முயற்சியை, போர்ச்சுகீசியரின் தலையீட்டால் காப்பாற்றியதை அடுத்து, அங்கு வெற்றிகரமான மறைப்பரப்புப் பணியை தொடர்ந்து அதன் வழியாக   'கோரமண்டல்' (சோழ மண்டல) கடற்கரைக்கு கி.பி 1534-இல் வந்து, நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு வேதபோதகம் செய்யத் தொடங்கினர். இக்காலக்கட்டத்தில் தான் “வேளாங்கண்ணி”யில் தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கரின் (1531-1590) அனுமதியுடன், போர்ச்சுகீசிய மாலுமிகளால் சாந்து கட்டிடம் கட்டி அது திருத்தலமாக மலர்ந்து. 

பிரான்சிஸ்கன் சபையினரைத் தொடர்ந்து, சேசு சபையைச் சேர்ந்த புனித சவேரியாரை முதலாகக் கொண்டு கி.பி 1545-ம் ஆண்டு முதல் மறைபோதகம் செய்யத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து வேறு சபைகளும், நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு, வடக்கில் தரங்கம்பாடி தாண்டி பரங்கிப்பேட்டை வரையிலும் மறை போதனை செய்து வந்தனர்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களும், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும் போர்ச்சுகீசியரது கடல் வாணிகத்தின் அனுகூலங்களைக் கருதி, தமது கடற்கரையோரங்களில் போர்ச்சுக்கீசியரது ஆதரவில் நடந்த மதபோதகத்தை தடுக்க மனமில்லாதிருந்தனர். அவர்களது கடற்கரைகளுக்கும் அது பாதுகாப்பாக இருந்து வந்தது. ஆனால், மன்னர்களது ஆஸ்தான (பிரதான) குருக்களின் தலையீட்டால், அவர்களது இராச்சியத்தின் உட்பகுதிகளில் கிறித்துவம் பரவ

அனுமதிக்கப்படவில்லை.

சுமார் அரைநூற்றாண்டிற்குப்பின் (பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில்) முத்துக்குளித்துறையைச் சேர்ந்த செல்வாக்குடைய முத்துவியாபாரிகள் சிலரின் அறிமுகத்துடன், மதுரை நாயக்க மன்னர்களின் அனுமதி பெற்று, ஐரோப்பிய குருக்கள் தமிழகத்தின் உட்பகுதியில் மறைபோதகம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இது எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை.

கி.பி 1606-இல் ஐரோப்பிய சேசு சபைக்குரு தந்தை "ராபர்ட் தெநோபிலி" 'மதுரை மிஷன்' எனும் தனித்துவமான அமைப்பை நிறுவி, சில ஐரோப்பிய குருக்களை கொண்டு மதபோதகம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆண்டுகள் பல கடந்தும் குறிப்பிடத்தக்க அளவில் பலனளிக்காதபோது, ஐரோப்பிய குருக்கள் தமது தோற்றத்தினாலும், மொழி, உடை மற்றும் உணவுப்பழக்க வழக்கத்தினாலும், உள்ளூர் மக்களுடன் வேறுபட்டு வாழ்வதுமின்றி, அவர்கள் மது அருந்துவதும், அசைவம் உண்பதும், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோருடன் நெருங்கிப்பழகுவதையும் கருதியே ஈக்கப்படவில்லையென்று கண்டு கொண்டார். ஐரோப்பிய குருக்கள் 'பரங்கி' என்று தரக்குறைவுடன் அழைக்கப்பட்டதை தந்தை நோபிலி அவர்கள் ஆலோசனை செய்து, பிராமண சந்நியாசியைப்போல் உடையணிந்து, பூணூல் போட்டு, சைவ உணவை மட்டுமே உட்கொண்டுவந்ததுடன், தமிழுடன், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமை பெற்று, திருவழிபாட்டுக்குரிய செபங்களையும் இம்மொழிகளில் இயற்றினார். 

பிராமண சந்தியாசியோல் வாழ்ந்த மதபோதகரை பிராமணர்கள் ஏற்க ஆரம்பித்தாலும், அவர்கள் பிராமணரல்லாத மக்களிடம் நெருங்கிப் பழகி, கலந்துரையாடி மதபோதகம் செய்து வந்தது அவர்களின் மதமாற்றத்துக்கு தடையானதை அறிந்த 'தத்துவபோதகர்' என்று தமிழில் அழைக்கப்பட்ட தந்தை ராபர்ட் தெநோபிலி; பிராமணரல்லாத மக்களிடையே மதபோதகம் செய்வதற்கென்று, 'பண்டாரசாமிகள்' எனும் தனி குருக்களின் பிரிவை தனது மேநிலையாளரின் கடுமையான எதிர்ப்பைத் தாண்டி தோற்றுவித்தார். அந்தந்த நாட்டு கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் கிறிஸ்தவ மறையைத் தழுவிவாழத் தடையாக இருக்க முடியாது என, அவற்றை மறைபரப்புப் பணியில் தந்தை ராபர்ட் தெ நோபிலி‌ மேற்கொண்ட முயற்சியால், பண்டாரசாமி குருக்களின் மறைபரப்புப் பணி விரைவில் நல்ல பலன் தந்தது.

தஞ்சை மறைத்தள வரலாறு:

முதல் பண்டாரசாமியான சேசுசபைக்குரு போர்ச்சுகீசிய தந்தை பல்தாசர் டகோஸ்டா தஞ்சைப்பகுதியில் 1643-ஆம் ஆண்டில், அப்போதைய மன்னர் ரெகுநாத நாயக்கரின் (1600-1650) அனுமதியுடன் மதபோதகம் செய்ய ஆரம்பித்தார். நகரிலும், அதைச்சுற்றிய பகுதிகளிலும் ஆறேழு இடங்களில் சிற்றாலயம் கட்டினார். அவற்றுள் ஒரு சில தங்குமிடங்களுடன் கூடியவை. இவ்வாறாக அவர் தஞ்சை 'இல்லிடம்' (Residence) என்ற தற்கால பங்குக்கு இணையான மறைத்தளப் பகுதியை நிறுவினார். இந்த ஆரம்பம் நகருக்கருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்த இருதாரம்கொண்ட முரட்டு இளைஞன் ஒருவன், கரூரில் முகாமிட்டிருந்த தந்தை பல்தாசர் டகோஸ்டாவிடம் திருமுழுக்குப்பெற்று வந்ததும், அவனிடம் கண்ட மாற்றத்தையடுத்து, அக்கிராம மக்கள் அனைவரும் படிப்படியாகத் திருமுழுக்குப்பெற்றதும், அருட்தந்தைக்கு செபமாலைப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவரது உபதேசிமார்கள் தஞ்சைபட்டு நூல்காரத்தெருவில் நூல்வாங்கி வந்து, காட்டுச்செடிகளின் விதைகளில் துளையிட்டு ஜெபமாலை தயாரித்து தட்டுப்பாட்டைப் போக்கியதும், இது குறித்து அவரது கடிதம் ஒன்றில் சுவாரசியமாகக் குறிப்பிட்டுள்ளார். நாயக்க மன்னரின் தளபதியிடம் நடத்திய உரையாடல் அவர் கொடுத்த பரிசுப்பொருட்கள் பற்றிய விவரமும், மன்னரின் தளபதி, தந்தை பல்தாசர் டகோஸ்டோவுக்கு அக்காலத்திலேயே பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும் சுவாரசியமான தகவல்களாகும். தந்தை கோஸ்டாவால் மனந்திருப்பப்பட்ட பக்தியுள்ள ஒருவர் இறந்ததும் அவரது செபமாலை மணிகளை மக்கள் புனித பண்டமாக பகிர்ந்துகொண்டதும், அவரது பணிக்கு பெருமை சேர்ப்பதாகும்.

அவரைத்தொடர்ந்து தஞ்சைப்பகுதி பொறுப்பேற்ற சேசுசபையைச் சேர்ந்த அருட்தந்தை டொமிங்கோ அல்மெய்டா, கி.பி. 1655-இல் பணியாற்றிய காலத்தில் நகருக்குள் எதிர்ப்புகள் கிளம்பவே, கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து பூதலூருக்கு தென்மேற்கே முதலில் 'நந்தவனப்பட்டியில்' தங்கியும், சிறிது காலத்துக்குப்பின் அதற்குத்தெற்கே ஐந்து கல் தொலைவில் உள்ள 'கூனம்பட்டி' எனும் முட்காட்டுச்சிற்றூரில் சிற்றாலயம் ஒன்றைக்கட்டி அதற்கு "இயேசுவின் ஐந்து திருக்காயங்கள்" சிற்றாலயமென பெயரிட்டு, மறைவாகத் தங்கி மறைப்பணிபுரிந்து வந்துள்ளார். ஆங்காங்கே நிறுவப்பட்ட சிற்றாலயங்கள் மற்றும் செபக்கூடங்கள் யாவும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உபதேசியார்களின் பொறுப்பில், வழிபாட்டுக்கும், திருவருட்சாதனங்களைப் பெற தயாரித்து வரவும் பயன்பாட்டில் இருந்து வந்தன. நாயக்க வம்சத்தையடுத்து 1676 ம் ஆண்டு முதல் தஞ்சையின் ஆட்சியைப்பிடித்த மராட்டிய மன்னர்களும், கிறிஸ்தவ போதகத்தை கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், உபதேசிமார்களே இப்பகுதி மக்களை திருவருட்சாதனங்களைப் பெற தயாரித்து, எதிரிகளின் கண்ணில் படாமல் இருட்டு நேரங்களில் குருக்களிடம் அழைத்துச்சென்று, திருமுழுக்கு பெறச் செய்து, திருவருட்சாதனம் பெற்றபின் திரும்பவும் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இதன்படி இங்கு அப்போதே அன்பியக் கோட்பாடுகள் இருந்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாகும். 

அருட்தந்தை அல்மெய்டாவிடம் தஞ்சையில் முதன்முதலில் திருமுழுக்குப் பெற்றது வள்ளி என்ற குறிசொல்லும் குறத்திப் பெண்ணாகும். இவருக்கு 'மார்கரெட்' என்ற பெயரும், குமாரசாமி என்ற இவளது கணவனுக்கு 'பீட்டர்' என்ற பெயரும் தந்தை அல்மெய்டா இட்ட பெயர்களாகும். இவர்களுக்கு கொடுக்க செபமாலை இல்லாததால், தங்களின் நான்கு கழுதைக்குட்டிகளுள் ஒன்றை விற்று, தஞ்சைக்கருகே செபமாலை செய்துவிற்கும் கிராமம் ஒன்றில் (அநேகமாக தற்போதைய செபமாலைபுரமாக இருக்கக்கூடும்) செபமாலை வாங்கி வந்ததாக தந்தையை பற்றிய சேசு சபைக் கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருட்தந்தை டொமிங்கோ 'டி' அல்மெய்டாவைத் தொடர்ந்து, ஐரோப்பிய சேசுசபை குருக்கள் பலரும் 1759-இல் 'பத்ருவோதா' அமைப்பிலிருந்து நீக்கப்படும்வரையில் தஞ்சை மறைத்தளப்பகுதி பொறுப்புடன்தான் நந்தவனப்பட்டியிலும், கூனம்பட்டியிலும் மட்டுமின்றி கொள்ளிடத்தைத் தாண்டி செஞ்சி எல்லையில் வடுகப்பட்டி, தத்துவஞ்சேரி, ஏலாக்குறிச்சி போன்ற இடங்களிலும் மறைவாகத்தங்கி, உபதேசியார்களின் துணையுடன் மறைப்பணி புரிந்துவந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் தந்தை ஆந்திரே பிரையர், அருளானந்தர் எனும் ஜான் தெ பிரிட்டோ, ஜோசப் கார்வலோ, மைக்கிள் பத்ரோல்டி, சைமன் கார்வலோ, மானுவல் மட்சோடா, நோயல் டி போர்ஜஸ் மற்றும் மறை வல்லுநரும் மொழிவல்லுநருமான வீரமாமுனிவர் எனும் தந்தை ஜோசப் பெஸ்கியுமாவர். 

எனவே தஞ்சைப் பங்கு கி.பி 1643-இல் தந்தை பல்தாசர் டகோஸ்டாவால் நிறுவப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தஞ்சையின் முதல் வேத சாட்சி:

தஞ்சையை ஆண்ட மன்னன் ஷாஜியின் (1684-1712) உத்தரவின் கீழ் சிற்றாலயங்கள் பலவும் இடிக்கப்பட்டன. அருட்தந்தை ஜோசப் கார்வலோ கைதுசெய்யப்பட்டு, தஞ்சை சிறையில் வதைக்கப்பட்டு 14-11-1701 அன்று தஞ்சையில் 'முதல் வேதசாட்சியாக' கொல்லப்பட்டுள்ளார். தஞ்சைக்கு மேற்கே 10 மைல் தொலைவில் உள்ள சித்திரக்குடியில் 'வேதியர் இராயப்பன்' ஆடை உரியப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பக்தியுள்ள தஞ்சை கிறிஸ்துவர்கள் சிலர் தஞ்சையை விட்டு வெளியேறி, வெகுதூரம் மேற்கே சென்று, புனித சவேரியார் பேரில் குடியிருப்பு ஒன்றை உருவாக்கி, அங்கு வசித்துள்ளனர். இதுவே தற்சமயம் கோவைக்கு அருகிலுள்ள 'சவரிபாளையம்' என்று அழைக்கப்படும் இடமாகும்.

மறைபரப்புநர் சிந்திய இரத்தத்தின் பலன்கள்:

மதுரை சேசு சபை மறைமாநிலப் பகுதியில் வேறெந்த மறைத்தளத்திலும் இல்லாத அளவுக்கு ஐரோப்பிய குருக்கள் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு அளவுக்கு கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர். எந்த அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு இரத்தம்

சிந்தினார்களோ, அந்த அளவுக்கு தஞ்சை மண்ணில் கிறிஸ்தவம் வேரூன்றி வளம் பெற்று எண்ணிக்கை அதிகரித்தது.

18 -ம் நூற்றாண்டு தொடக்கத்தில் தரங்கம்பாடியில் தோற்றுவிக்கப்பட்ட லுத்தரன் சபை, தங்களது பணம் மற்றும் அச்சு பலத்தாலும், விக்கிரக ஆராதனை கொள்கைக் குழப்பத்தின் வழியாகவும், கத்தோலிக்கர் பலரை தமதுபக்கம் இழுத்த நிலையிலும், தஞ்சை கத்தோலிக்கரின் எண்ணிக்கை கணிசமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. 'மறைசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து' என்ற கூற்றை இது உறுதிப்படுத்தும்.

போர்ச்சுக்கீசியரின் பொருளாதார ஏற்றமும் சரிவும் அவற்றின் பின்விளைவுகளும்:

1498-ல் போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா, புனித மைக்கேல் என்று பெயர் கொண்ட பாய்மரக்கப்பலில் பயணித்து, நன்னம்பிக்கை முனை என்று பிற்பாடு பெயரிடப்பட்ட ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை வழியாக, இந்திய மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்து, அதே வழியில் திரும்பி சென்று போர்ச்சுக்கலை அடைந்ததை அடுத்து, கடல் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வந்தது.

போர்ச்சுகீசியரின் கீழ்த்திசை நாடுகளில், அவர்களது கடல் வாணிகத்துக்கு வட்டியில்லாதவரை அவர்களின் செல்வப்பெருக்கு அதிகமாகிவந்தது. அவர்கள் பல நாடுகளில் வணிக நிறுவனங்களை நிறுவியதுமல்லாமல், ஆங்காங்கே தங்களது குடியிருப்புப் பகுதிகளையும் நிறுவி வந்தநிலையில், இந்திய மேற்கு கடற்கரையில் உள்ள கோவா அவர்களது அரசியல், வணிகம் மற்றும் பத்ருவோதா மறைபரப்புச் சபைகளுக்கும் தலைமையிடமாக விளங்கி வந்தது. கிபி 17 ஆம் நூற்றாண்டு தொடக்க முதல் அவர்களது கடல் வாணிகம், பிற ஐரோப்பிய நாடுகளின் போட்டியால் குறிப்பாக டச்சுக்காரர்களால் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், அவர்களது காலனிகளும் கைப்பற்றப்பட்டதன் விளைவாக, போர்ச்சுகீசியரின் கடல் வாணிக வருமானம் பெரும் சரிவைச் சந்தித்தது. ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்த போர்ச்சுகல் நாட்டிற்கு வாரிசு இல்லாத நிலையில், ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டை தன்னுடன் இணைக்க முற்பட்டதால் அவர்களுக்கு உள்நாட்டிலும் குழப்பமான நிலை தோன்றியது.

மறைபரப்புப் பணிகளில் உண்டான மாற்றங்களும், பிளவுகளும்:

போர்ச்சுகீசியரது கடல் வாணிகம் நலிந்து போன நிலையில், அவர்களால் கீழ்த்திசை தாடுகளின் பல இடங்களிலும் தொடங்கப்பட்டு நிர்வகித்து வரப்பட்ட மறைபரப்புப் பணிகள் பொருளாதாரக் குறைப்பாட்டால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தன.

இதனை அவர்களால் சரி செய்ய இயலாத நிலையில், உரோமை தலைமை பீடம் கி.பி 1622 இல் 'புனித விசுவாச மறை பரப்பு பேராயம்' என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் வழியாக உலகின் பல்வேறு பாகங்களில் விதைத்திருந்த விசுவாச விதை வீணாகாதிருக்கவும், மறைப்பரப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் வழி செய்ய முற்பட்டது. இதுவே "ப்ராபகேண்டா" என்று பிற்பாடு பலராலும் அறியப்பட்டது.

ஆனால் போர்ச்சுகல் நாட்டு மன்னர்கள் கருத்து வேறுபாட்டுடன் இதனை ஏற்காது, உரோமைத் தலைமை பீடத்துடன் மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கலாயினர். இது அவ்வப்போது இருதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமன்பாடுகள், உடன்பாடுகள் மற்றும் ஒப்பந்தம் நடவடிக்கைகளினால், சரி செய்யப்படுவதும், அடங்குவதும், மீண்டும் தலை தூக்குவதுமாக மூன்று நூற்றாண்டுகளுக்குமேல் நீடித்து வரலாயிற்று. இது மறைத்தளங்களிலும் பிரதிபலித்து இருதரப்பினரிடையே ஆங்காங்கே மோதல்களுக்கும், மறைபரப்பு பகுதிகளை கைப்பற்றுவதற்கும் வழிவகுத்து வந்ததுடன், இரட்டை மறை நிர்வாகத்துக்கும் (பத்ருவாதோ, ப்ராபகேண்டா) வழி வகுத்து வந்தது.

கருமேக மூட்டத்தின் நடுவிலொரு வெள்ளிக்கீற்று:

தஞ்சை நகரிலிருந்து கி.பி 1655 ம் ஆண்டுவாக்கில், தந்தை டொமிங்கோ அல்மெய்டா வெளியேற்றப்பட்டு, ஒரு நூற்றாண்டளவாக ஐரோப்பிய மதபோதகர் எங்கும் தஞ்சை இராச்சியத்தில் மறைப்பணி செய்ய அனுமதிக்கப்படாதிருந்த நிலையில், நகருக்குள்ளிருந்த தற்காலிக கோவில்களும், தங்குமிடமும் அவை இருந்த இடங்கள்கூடத்தெரியாத அளவுக்கு மறைந்துபோயின.

இடையில் ஏற்பட்ட இணக்கமான சூழ்நிலை ஒன்றில், தஞ்சை மன்னரால் நகருக்குள் ஆலயம் கட்டிக்கொள்ள சேசு சபையினர் அனுமதிக்கப்பட்டபோது, அரண்மனை ஆஸ்தான குருக்களால் மன்னர்கள் அடிக்கடி மனம்மாறி மீண்டும் இடையூறு செய்யக்கூடியவர்கள் என்பதை உணர்ந்திருந்த சேசு சபை குருக்கள், நகரை தவிர்த்துவிட்டு, குறிப்பாக தஞ்சை நகர் வாழ் கத்தோலிக்கரின் ஆன்மநலங்கருதி நகருக்கு வெளியில் ஆனால் வெகுஅருகிலேயே முதலை முட்டு வாரி எனும் காட்டாறு தாண்டி சுமார் 3 மைல் தூரத்தில் உள்ள 'பள்ளியேரி' என்ற சிறிய கிராமத்தில் இப்போதுள்ளபடிக்கு புனித அந்தோனியார் பெயரில் ஆலயம் ஒன்றை, குதிரை லாயத்துடன் கூடிய அறைவீட்டுடன் நற்சாந்து கொண்டு கட்டியெழுப்பிக் கொண்டனர். இவற்றின் பராமரிப்புக்காக தஞ்சை மராட்டிய மன்னர் முதலாம் துளஜா (கிபி 1728 - 36 ) அக்கிராமத்திலேயே ஐந்து வேலிக்கும் (சுமார் 35 ஏக்கர்) அதிகமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை இனாமாக வழங்கியிருந்தார். [இது இத்தாலிய சேசு சபை குரு ஜோசப்பெஸ்கி என்னும் வித்தகத் தமிழர் வீரமாமுனிவர் தஞ்சை மறைத்தளப் பொறுப்பிலிருந்த (கி.பி 1716 - 40 ) சமகால நிகழ்வாகிறது.]

பள்ளியேரியில் கட்டப்பட்டுள்ள இந்த புனித அந்தோனியார் ஆலயமுகப்பு மேல்நாட்டு கட்டிடக்கலை அம்சங்களுடன், வீரமாமுனிவர் பிறந்து திருமுழுக்கு கொடுக்கப்பட்டு வளர்ந்த அவரது சொந்த ஊரான இத்தாலி நாட்டின், வெனிஸ் மாநிலத்தைச் சேர்ந்த காஸ்தி கிளியோன் நகர கோவிலின் முகப்பையும் அமைப்பையும் உடையது கவனிக்கத்தக்கது. இதன் புகைப்படத்தை தஞ்சை மறைமாவட்ட குருவான அருட்பணி. முனைவர் அமுதன் அடிகளார் எழுதியுள்ள 'வித்தகத் தமிழர் வீரமாமுனிவர்' என்ற நூலின் பக்கம் IX-ல் காணலாம்.

தஞ்சை மறைத்தளப் பொறுப்பில் சேர்ந்த மாற்றங்களும் நிகழ்வுகளும்:

கிபி 1759-ல் சேசு சபையானது, Padroado அமைப்பிலிருந்து போர்ச்சுகீசிய அரசால் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுரை சேசு சபை மறைபரப்பு மாநில பகுதிகளின் பொறுப்பில் அடிக்கடி பல மாற்றங்கள் உண்டாகி, அவை இதர பல்வேறு மறைபரப்பு சபைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அச்சமயங்களில் நகரில் ஆலயமோ, தங்குவதற்கு அறைவீடோ இல்லாதநிலை இருந்துவந்தது. இந்தச் குழலில்தான் நிரந்தர நில வருவாயுடன் கூடிய பள்ளியேரி புனித அந்தோனியார் ஆலயம், கீழ்க்கண்ட காலக்கட்டங்களில் அவரவருக்கு பங்குத்தளமாகவும், மறைபரப்பு மாநில தலைமைப்பீடமாகவும், தொடர்ந்து 107 ஆண்டுகளுக்கு மேலாகவே பயன்பட்டு வந்துள்ளது. (அவர்களிடையே நிலவி வந்த போட்டி மனப்பான்மை அவர்களது சுய ஆதாயத்துக்காக அல்ல, மாறாக இறையரசில் பணி செய்வதற்காகவே என்பது கவனிக்கப்பட வேண்டும்)

கி.பி.1759 வரை: (போர்ச்சுகீசிய மன்னரால் பத்ருவோதா அமைப்பினின்று சேசு சபை நீக்கப்படும் வரை) மதுரை சேசு சபை மறைமாநிலத்தின் தஞ்சை பகுதி மறைத்தள தலைமையிடமாக பள்ளியேரி இருந்து வந்துள்ளது.

கி.பி. 1760- முதல் கி.பி.1835 வரை:

மைலாப்பூர் புனித தோமையார் மறைமாநிலத்தின் கீழ் முதலில் பிரான்சிஸ்கன் சபையின் தஞ்சை பங்குத்தள தலைமையிடமாகவும், அதைத்தொடர்ந்து கி.பி.1785 முதல் கி.பி.1805 வரை நாகை மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளை உள்ளடக்கி, மதுரை சேசு சபை மறைமாநிலத்தை அவர்களால் மதுரை பிரான்சிஸ்கன் மறைமாநிலமாக மாற்றப்பட்டதை அடுத்து, அதன் தலைமைப்பீடமாகவும், பிற்பாடு 1805-ல் தஞ்சை பகுதி மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு, தனி பிரான்சிஸ்கன் மறைமாநிலமாக உருவாக்கப்பட்டு, அதன் தலைமைபீடமாக கி.பி.1835 வரையிலும் (அதாவது போர்ச்சுகீசிய புரட்சி அரசு பத்ருவோதா அமைப்பை கலைக்கும் வரை) நீடித்துள்ளது. இதற்கிடையில் உரோமை தலைமை பீடத்தாலேயே உலகளாவிய அளவில் சேசு சபை கி.பி.1773- இல் தடை செய்யப்பட்டு, மதுரை மறைமாநிலப்பகுதி பாண்டிச்சேரி அன்னிய வேதபோதக சபை (MEP) யிடம் கி.பி. 1776-இல் ஒப்படைக்கப்பட்டிருந்தும், மறைத்தளப் பகுதிகளை அவர்களால் பிரான்சிஸ்கன் சபையினரிடமிருந்து மீட்க இயலாநிலை வெகுகாலம் நீடித்துள்ளது.

கி.பி. 1759-ல் சேசு சபை போர்ச்சுகீசிய பத்ருவோதா அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதை, உரோமை தலைமைபீடம் அது பத்ருவோதா அமைப்பின் உள்விவகாரம் எனக் கருதியுள்ளது. எனவேதான், கி.பி. 1760 முதல் கி.பி.1776 வரையிலான 16 ஆண்டுகள் இடைவெளியில் பள்ளியேரியை வசதியான தலைமையிடமாகக் கொண்ட பிரான்சிஸ்கன் சபையினர், மறைமாநில தெற்குப்பகுதி முழுவதிலும் எவ்வித எதிர்ப்புமின்றி ஆழமாக காலூன்றி அதை முற்றிலுமாக அவர்களது சபை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது.

இக்காலகட்டத்தில் கி.பி.1767 முதல் பள்ளியேரியில் தஞ்சைப் பகுதி பங்கு குருவாகவும், 1785-ம் ஆண்டு முதல் மாற்றப்பட்டு புதிதாக நிறுவிய மதுரை பிரான்சிஸ்கன் மறைமாநில அதிபராகவும், 30 ஆண்டு காலம் தொடர்ந்து பணிபுரிந்து வந்து 19.07-1790 அன்று இறந்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ள கோவாவைச் சேர்ந்த தந்தை கான்ஸ்டாண்டினோ டி வாஸ்கோன்சலஸ் என்ற 'சுவாமி தைரியநாதர்' பள்ளியேரி கிராமத்தின் மீதும், அவ்வூர் மக்களின் மீதும் கொண்ட பற்றுதலால், மைலாப்பூர் ஆயரால் பலமுறை மாற்றப்பட்டும் அதற்குப் பணியாது, அங்கிருந்து வெளியேற மறுத்து வந்துள்ளார். மறைத்தளத்தை MEP சபையினரிடம் ஒப்புவிக்கும் எண்ணமும் அவரிடம் காணப்பட்டதால் அவரை அங்கிருந்து மாற்ற முடியவில்லை எனக்கருதவும் இடமுண்டு. 

அருள்தந்தை தைரியநாதர் தான் தஞ்சை நகரில் பூந்தோட்டம் ஒன்றை வாங்கி, அவ்விடம் முதலில் செபக்கூடமாகவும், கி.பி.1791 முதல் சிற்றாலயமாகவும் பயன்பட்டு வந்து, பிற்பாடு கி.பி.1806-ம் ஆண்டிற்குப்பின், அவரிடம் உதவித் தந்தையாக பணியாற்றிய தந்தை ஜோஸ் டி எஸ் ஜோயோக்கியம் என்பவரால் பழங்கால 'வௌவா நத்தா' கூரையுடன் கூடிய புனித வியாகுல அன்னை ஆலயம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. மைலாப்பூர் புனித தோமையாரை பாதுகாவலராகக் கொண்ட, மதுரை பிரான்சிஸ்கன் மறைமாநில தலைமையிடமாக இருந்த, பள்ளியேரி புனித அந்தோனியார் ஆலயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மரத்திலான பெரியதொரு புனித தோமையார் சுரூபம் ஒன்று இன்றும் அங்கு உள்ளது.

கி.பி. 1835 முதல் 1840 வரை:

கி.பி.1835-ல் பத்ருவோதா அமைப்பு கலைக்கப்பட்டதும், மதுரை மறைத்தளம் கோவா உள்நாட்டு குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, தந்தை ஞானப்பிரகாசியார் (Fr. Louis) புனித வியாகுல அன்னை ஆலயத்தை தலைமையிடமாகக் கொண்டு பங்கு குருவாகவும், தஞ்சை மறைத்தளப் பகுதியின் தலைமைப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். தஞ்சை புனித அந்தோனியார் ஆலயம் இக்காலக்கட்டத்திலும், தஞ்சை மறைத்தளத்தின் பிரதான பங்குத்தளமாக இதரப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

கி.பி.1840 முதல் 1845 வரை:

உரோமைத் தலைமைப்பீடத்தின் கி.பி.1838 Mulate Praeclare பிரகடனத்தின் அடிப்படையில், கி.பி 1840-ல் தஞ்சை ரெசிடன்ட் கலெக்டர் சர் ஹென்றி மான்ட் கோமரி என்பவரின் தலைமையிலான பிரிட்டிஷ் டிரிபுயூனல் மூலம், தஞ்சை புனித வியாகுல அன்னை ஆலயம் தவிர இதர ஆலயங்களையும், தஞ்சை மறைத்தளப் பகுதிகளையும் தந்தை ஞானப்பிரகாசியார் அவர்களிடமிருந்து, தந்தை பெஞ்சமின் கூஸ்ட் MEP என்பவர் மீட்டெடுத்து, பள்ளியேரியை தலைமையிடமாகக் கொண்டு பங்கு குருவாகவும், தஞ்சை மறைத்தள அதிபராகவும் பணியாற்றி

வந்துள்ளார். 

இதற்கிடையில் 1814 ஆம் ஆண்டு சேசு சபை மீண்டும் செயல்பட உரோமை தலைமையிடம் அனுமதித்து, மதுரை மறைத்தளப் பகுதியை பிரெஞ்சு சேசு சபையிடம் ஒப்படைத்திருந்தாலும், உள்நாட்டு குழப்பம் மற்றும் இங்கிலாந்துடனான போர் நீடித்து வந்ததால், கி.பி 1837-ல் தான் தந்தை ஜோசப் பெட்ரான்டு தலைமையில், அவரோடு வந்த மூன்று பிரெஞ்சு சேசுசபைக் குருக்கள் பாண்டிச்சேரி வந்து, சில மாதங்கள் தங்கி, தேவையான பயிற்சி பெற்ற பிறகு திருச்சிராப்பள்ளிக்கு வந்து, அதை தமது புதிய மதுரை சேசு சபை மறைமாநில தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் துவங்கினர். 

கிபி: 1845 முதல் 1867 வரையிலும்:

தஞ்சை மறைத்தளத்தைப் பொறுத்தவரை அதன் வடக்கு எல்லையை தீர்மானிப்பதில் MEP சபையுடன் உடன்பாடு ஏற்படக் காலதாமதம் ஆனதால், கி.பி.1845-ல் தான் அதன் பொறுப்பை பிரெஞ்சு சேசு சபை குரு தந்தை கிளாடுபெடின் அவர்கள், தந்தை கூஸ்டிடமிருந்து MEP பெற்று, பள்ளியேரியையே தலைமையிடமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். அதன்படி வெண்ணாறு, வெட்டாற்றின் போக்குகள் தஞ்சை மறைத்தளம் மற்றும் புதிய மதுரை சேசு சபை மறைமாநிலத்தின் வடபகுதி எல்லையானது.

இதற்கிடையில் MEP அருட்தந்தை கூஸ்ட் கி.பி. 1841 ஆம் ஆண்டில் மன்னார்குடியில் சிற்றாலயம் ஒன்றை கட்டியிருந்தார். வசதிபடைத்த ஆச்சாரமிக்க இந்துமக்களை அதிகமாக கொண்ட மன்னார்குடி நகருக்குள், ஏழை எளிய கிறிஸ்துவர்களின் அமைதியான வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படும் என்ற ஐயத்தால், நகருக்கு வெளியே பாமனியாறு தாண்டியுள்ள ஒரு தாழ்வான சிறு நிலப்பகுதி ஒன்றையே அவரால் தேர்வு செய்து வாங்க முடிந்தது.

தம்மைச் சார்ந்த 'Propaganda' பிரிவு கத்தோலிக்கருக்கென்று நகரில் ஆலயம் இல்லாததைப் பெருங்குறையாக உணர்ந்த தந்தை கிளாடுபெடின், விரைவிலேயே தஞ்சை மன்னரிடம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நான்கு இடங்களில் ஒன்றானதும், புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு மிக அருகில் உள்ளதுமான பெரியதொரு நிலப்பரப்பை, அதில் கட்டியிருந்த சத்திரம் ஒன்றுடன் விலைக்கு வாங்கிப்பெற்றார். தான் ஏற்கனவே திட்டமிட்டப்படி பள்ளியேரியில் வாங்கி சேமித்து வைத்திருந்த தற்காலிக கட்டுமானப் பொருட்களை வண்டிகளில், முதல்நாள் மாலையில் நகரில் வாங்கியிருந்த இடத்திற்கு கொண்டுவந்து சேர்த்து, நாஞ்சிக்கோட்டை சாலையை ஒட்டி மேற்புறம் பள்ளியேரி ஆட்களைக் கொண்டு, சுமார் 2000 பேர் அமர்ந்து வழிப்படக்கூடிய பெரியதொரு 'பந்தல் கோவிலை' 14-04-1846 அன்று காலை கட்டத்தொடங்கி, மூன்றே நாளில் கட்டி முடிக்கச்செய்தார். (அவ்வேலையைத் தடுத்து நிறுத்த எத்தனித்த புனித வியாகுல அன்னை ஆலய பங்குகுரு தந்தை ஞானப்பிரகாசியாரும் அவருடைய ஆதரவாளர்களும், வேலையில் ஈடுபட்டிருந்த பள்ளியேரி ஆட்களின் எண்ணிக்கையையும், அவர்களிடம் காணப்பட்ட மன உறுதியையும் கண்டு அவ்வெண்ணத்தை கைவிட்டுவிட்டதாக கொடைக்கானல் சேசு சபை ஆவணக் காப்பக குறிப்புகளில் பதிவாகியுள்ளது.) 

தந்தை கிளாடுபெடின் தஞ்சை மறைத்தள மேற்குப் பகுதிக்கென கி.பி 1848- புனித சவேரியார் பெயரில் ஏற்கனவே சிற்றாலயம் இருந்த இடத்தில் புதிதாக கோயில் கட்டி, பங்கை தோற்றுவித்து, தந்தை ட்ராங்கு பெட் என்பவரை அதன் முதல் பங்கு குருவாக்கினர். 

இதற்கு முன்பாக மன்னார்குடியில் கி.பி1846 ஆம் ஆண்டளவில் புனித சூசையப்பர் பெயரில் ஏற்கனவே MEP தந்தை கூஸ்ட் கட்டியிருந்த சிற்றாலயத்தைச் சேர்ந்தாற்போலுள்ள நிலப்பரப்பை வாங்கி, அச்சிற்றாலயத்தை இணைத்தாற்போல் பெரியதொரு ஆலயமாக நிறுவி, தஞ்சை கிழக்குப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பங்காக நிறுவினார். இவரது தமிழ் பெயர் கர்த்தநாதசுவாமி என்பதாகும். எனவேதான் அவர் நினைவாக, கோயில் கட்டிய நிலப்பகுதி அவர் பெயரால் 'கர்த்தநாதபுரம்' என்று அழைக்கப்படுகிறது. 

பிற்பாடு கி.பி 1850 ஆம் ஆண்டளவில் பட்டுக்கோட்டையில் பெரியதொரு ஆலயம் எழுப்பி, தென்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு வழிவகுத்ததுடன் பின்னர் தெற்கே மறவநாட்டு எல்லையையொட்டி, பாதிரக்குடியிலும் கோயில் ஒன்றைக்கட்டி அதை பங்குதளமாக நிறுவியுள்ளார் தந்தை பெடின்.

இவை தவிர பலதரப்பட்ட தொழில்புரியும் மக்களின் ஆன்ம நலனுக்காக உக்கடை, வீரக்குறிச்சி, தேவதானம், தச்சங்குறிச்சி மற்றும் கோடியக்கரை அருகிலுள்ள அகஸ்தியம் பள்ளியிலும் சிற்றாலயங்களை நிறுவியுள்ளார். தமது 8-ஆண்டு கால தஞ்சை மறைத்தளப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய மதுரை சேசு சபை மறைமாநில இதர பகுதிகளில் பணிபுரிந்து வந்து, தனது 61ஆம் அகவையில் 29-04-1876 அன்று திருச்சிராப்பள்ளியில் இறந்துள்ளார் தந்தை பெடின்.

தஞ்சை திருஇருதய ஆலயம் அவர் வாங்கிய இடத்தில் கட்டப்பட்டதை தனது வாழ்நாள் பூராவும் நினைத்து மகிழ்ந்ததாகவும், அவரது சுயசரிதையை எழுதிய பிரெஞ்சு சேசு சபைத் தந்தை செயிண்ட்சீர் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தந்தை கிளாடுபெடின் திட்டப்படி கட்டப்பட்ட பந்தல் கோவிலில், பிற்பாடு அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய பாட்டுக்கூடம் ஒன்று இணைக்கப்பட்டு, அப்பந்தல் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வழிபாட்டிற்காகவும், பிற சமய மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்விக்கூடமாகவும் பல ஆண்டுகளாக பயன்பட்டு வந்துள்ளது. அந்நிலத்திலுள்ள சத்திரம் தஞ்சை மறைத்தளப்பகுதியில் பணியாற்றும் குருக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இருந்துள்ளது. 

தஞ்சை நகரில் தற்போதுள்ள திருஇருதய ஆலயத்தை தந்தை மரிய சூசைநாதர் எனும் ஜோசப்லெரோ, தஞ்சை நகரில் 1866-ல் கட்டத் தொடங்கும் போது, தஞ்சை பங்குத்தளமாகிய பள்ளியேரி புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்த நற்கருணை பேழையை இங்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதுமுதற்கொண்டே தஞ்சை நகர், தஞ்சை பங்குதள தலைமையிடமாகியது. முன்னதாக பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858-ம் ஆண்டு புனித அமலோற்பவ அன்னை காட்சி கொடுதத்தன் நினைவாக, சாலையையொட்டி கெபிக் கோயில் ஒன்று கட்டப்பட்டு, அது இன்றளவும் லூர்து மாதா கெபிகோயில் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. 

கி.பி. 1867-ல் பங்குதளம் பள்ளியேரியிலிருந்து, தஞ்சை நகருக்கு மாற்றப்பட்டதும், அங்குள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்கள் பதிதமார்க்கத்தில் சேர்ந்து கொண்டு கோவிலையும், அதன் நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை மீட்க தஞ்சையிலிருந்த பங்கு குருக்கள் 1868-ம் ஆண்டு முதல் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து, அவற்றின் வாயிலாக மீட்டெடுத்துள்ளனர். 

தஞ்சை மறைப்பணித்தளத்தில் அடுத்து உண்டான மாற்றங்கள்:

போர்ச்சுகீசிய அரசுக்கும், உரோமை கத்தோலிக்க தலைமை பீடத்திற்குமிடையேயான 1886 ஆம் ஆண்டு ஒப்பந்தமானது, கி.பி.1893-ம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து மறைமாவட்டப்பகுதியில் அடங்கியிருந்த தஞ்சை மறைத்தளப் பகுதி பிரிக்கப்பட்டு, மைலாப்பூர் பத்ருவோதா மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 

இதனால் ப்ரபொகன்டா பிரெஞ்சு சேசு சபை குருக்களின் கீழிருந்த பங்கு, 'பத்ருவோதா' பங்காக மாற்றப்பட்டது. எனினும் பிரெஞ்சு சேசு சபையினர் கட்டிய இயேசுவின் திருஇருதய ஆலயமே ஒருங்கிணைந்த தஞ்சை பங்கின் தலைமையிடமாக மாறியது.

எனவே பிரான்சிஸ்கன் சபையினர் கட்டி கோவா குருக்களின் வசமிருந்த புனித வியாகுல அன்னை ஆலயம், அதற்குரிய புனிதத்துவத்துடன் இன்றளவும் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. 

தஞ்சையில் கடைசியாக பணியாற்றிய பிரெஞ்சு சேசு சபைக்குரு அருட்தந்தை மடர்ச் என்பவர், பத்ருவோதா பங்குகுரு C.C. பேரட்டா என்பவரிடம் திருஇருதய ஆண்டவர் கோவிலுடன் தனது பங்கு பொறுப்பை ஒப்படைக்க, அருட்தந்தை பேரட்டா சில மாதங்களே பணிபுரிந்து அதே ஆண்டில் (கி.பி.1893), அருட்தந்தை சேவியர் கொயிலோ என்ற பத்ருவோதா குருவானவரிடம் ஒன்றுபட்ட தஞ்சை பங்கின் பொறுப்பை ஒப்படைக்க, அதை ஏற்ற அவர் அதனை வெகு சிறப்பாக நிர்வகித்து வந்தார். அவர் தொடங்கிய புனித சவேரியார் ஆதரவற்றோர் இல்லத்தை பராமரிக்கவும், பங்கில் சமூக பொருளாதார கல்விப்பணிகளை மேற்கொள்ளவும், கி.பி.1906-ம் ஆண்டில் இத்தாலியிலிருந்து சலேசிய சபையை சேர்ந்த மூன்று குருக்களும், ஒரு அருட்சகோதரரும் மைலாப்பூர் ஆயரின் அழைப்பை ஏற்று தஞ்சை வந்து பணியாற்றத் தொடங்கினர். புனித சேவியர் தொழிற்பள்ளியையும், தொன்போஸ்கோ அச்சகத்தையும், இரவு பள்ளி ஒன்றையும், சலேசிய தந்தையர்கள் நிறுவி பல ஆண்டுகள் அவற்றைச்சிறப்புற நிர்வகித்து வந்தனர் என்பதை நம்மில் பலரும் அறிவோம். 

அருட்தந்தை சேவியர் கொயிலோவின் பணிக்காலத்தில்தான் தஞ்சைப் பங்கிலிருந்து, கி.பி. 1912-ல் அம்மாபேட்டை தனிபங்காக பிரிந்தது.

கி.பி.1915 முதல் தஞ்சை பங்கின் நிர்வாகம் சலேசிய சபையைச் சேர்ந்த அருட்தந்தை யூஜின் மெடர்லெட் அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. அவர் பங்கு பொறுப்பை வெகு சிறப்பாக நிருவகித்து வந்தார். பிற்பாடு ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்தே அவர் சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கி.பி 1928-இல் உரோமை தலைமை பீடத்துக்கும், போர்ச்சுகலுக்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், போர்ச்சுகீசியரின் குடியிருப்புகள் தவிர இதர பகுதிகளில் அவர்களது நேரடியான மறைப்பணி தவிர்க்கப்பட்டதையடுத்து, அவ்வாண்டு முதல் தஞ்சை பங்கு தனித்துவ (secular) அடிப்படையில் செயல்படக்கூடிய நிலையில், முத்துக்குளித்துறையைச் சேர்ந்த அருட்தந்தை மைக்கேல் மோத்தாவாஸ் அடிகளார் அவர்கள் தஞ்சை பங்கு குருவானார். இவர் பணியாற்றிய 30 ஆண்டுகாலம் தஞ்சை பங்கின் பொற்காலம் எனக்கருதப்படுகிறது. இவரது பொறுப்புக் காலத்தில்தான் கி.பி.1943-ல் தெற்கில் ஒரத்தநாடு பங்கும், கி.பி.1947-ல் தஞ்சை நகரின் வடக்கில் வடக்குவாசல் பங்கும், தஞ்சைப் பங்கு எல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப் பங்காக உருவாயின.

மறைமாவட்டத் தோற்றமும் அதன் பேராலயமும்:

20-11-1952 தேதியிட்ட உரோமைத் தலைமை பீடத்தின் அறிக்கை 'Exprimavae Eccelesiae' மைலாப்பூர் மறைமாவட்டத்தின் தெற்குப்பகுதி பிரிக்கப்பட்டு, தஞ்சை மறைமாவட்டம் என அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான கத்தோலிக்கர்களுடன், 41 பங்குகளை உள்ளடக்கியிருந்தது.

சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த தஞ்சை மண்ணின் மைந்தரும், தஞ்சைப் பங்கை சேர்ந்த குருவுமான அருட்தந்தை R. ஆரோக்கியசாமி சுந்தரம் அடிகளார் அவர்கள் 19-03-1953 அன்று ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, அவரே புதிதாக உதயமான தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர் என உரோமைப் பேராயத்தால் அறிவிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார்.

25-03-1953 அன்று தஞ்சை வந்த புதிய ஆயரை தஞ்சை மக்கள் வரவேற்று, சரித்திரப் புகழ்மிக்க தஞ்சை மாநகரின் நான்கு இராசவீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலம் அன்று மாலை தஞ்சை பூக்காரத்தெரு திருஇருதய ஆலயம் வந்தடைந்ததும் புதிய ஆயர் அவர்கள் தனது 'தேதெயும்' நன்றி திருப்பலி பூசையை நிறைவேற்றியதுடன், திவ்விய நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது. மறுநாள் (26-03-1953) காலை புதிய ஆயர் மேதகு டாக்டர் ஆரோக்கியசாமி சுந்தரம் அவர்கள் தனது மறைமாவட்ட குருக்கள் கலந்துகொள்ள நிறைவேற்றிய ஆடம்பர கூட்டு திருப்பலியில், திருஇருதய ஆண்டவரின் பாதுகாப்பிலும், புனித ஆரோக்கிய அன்னையை உடன் பாதுகாவலியாகவும் கொண்டு புதிய மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதன் வாயிலாக தஞ்சை பங்கின் இயேசுவின் திரு இருதய ஆலயமானது, தஞ்சை மறைமாவட்டத்தின் பேராலய (கதீட்ரல்) நிலைக்கு உயர்ந்தது.

தஞ்சை மறைமாவட்டமும் தஞ்சைப் பங்கும் இதுகாறும் கண்டுள்ள வளர்ச்சிகள்:

தமது தொலைநோக்கு பார்வையாலும், தீர்க்கமான திட்டங்களினாலும் நேர்மையுடன் 33 ஆண்டுகள் அயராது உழைத்து, தஞ்சை மறைமாவட்டத்தை இந்திய அளவில் சிறந்ததொரு மறைமாவட்டமாக உயர்த்தி அதன் வருங்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்த மேதகு ஆயர் டாக்டர் R.A. சுந்தரம் ஆண்டகை அவர்கள் கி.பி.1986-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

அடுத்து மறைமாவட்ட பொறுப்பை ஏற்றுக் கொண்ட பேராயர் மேதகு பாக்கியம் ஆரோக்கியசாமி ஆண்டகை, தொடர்ந்து 11 ஆண்டுகாலம் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கி.பி.1997-ம் ஆண்டு முதல் தஞ்சை மறைமாவட்டம் அம்மாபேட்டை பங்கின் மைந்தரான மேதகு டாக்டர். ம. தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் தஞ்சை மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 

மோன்சிஞ்ஞோர் மோத்தாவாஸ் அடிகளார் கி.பி.1957-ம் ஆண்டு முதல் மறைமாவட்ட முதன்மைகுருவாக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, மறைமாவட்டத்தை சார்ந்த குருக்களுள் பலரும் பேராலய பங்கு குருவாக செவ்வனே பணியாற்றிவர, பெருமைக்குரிய இப்பங்கு தனது நகர்பறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களையும் உள்ளடக்கி, பல புதிய பங்குகள் உருவாகக் காரணமாக அமைந்தது.

இதுவரை பேராலயம் கண்ட பரிமாண வளர்ச்சிகள்:

கொடைக்கானல் செம்பகனூர் சேசு சபை ஆவணக்காப்பக குறிப்புகளின்படி, தஞ்சை பங்கு குருவாக கி.பி.1866-இல் பொறுப்பேற்ற மரிய சூசை நாதர் என்னும் பிரெஞ்சு சேசு சபைக்குரு ஜோசப் லெரோ அவர்கள், அப்போது திட்டமிட்டு கட்டத்தொடங்கியது தான் இவ்வாலயம். இதற்கு பக்தி மிகுந்த ஐரோப்பிய குடும்பத்தினர் சிலரும், மதுரையைச் சேர்ந்த பெருஞ்செல்வர் ஒருவரும் நிதியளித்துள்ளனர். கி.பி.1869 ஆம் ஆண்டே கோபுரப்பகுதி முற்றிலும் பூர்த்தியாகாத நிலையில், திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு கானோஸ் ஆண்டகை ஐரோப்பா சென்றிருந்ததால், கோவை விக்காரியேட் அப்போஸ்தலிக்கராகவிருந்த (MEP) டெப்போமியர் அவர்களால் இவ்வாலயம் புனிதம் செய்யப்பட்டு, இயேசுவின் திரு இருதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. (இதற்கிடையில்தான் கி.பி.1867 இல் தஞ்சைப் பங்குதளம் பள்ளியேரியிலிருந்து தஞ்சை நகருக்கு மாற்றப்பட்டது).

புதிய சேசுசபை மதுரை மாநிலத்தில் இயேசுவின் திரு இருதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவென்றும், முதல் ஆலயம் தூத்துக்குடியில் உள்ள பேராலயம் என்றும் செண்பகனூர் ஆவணக் குறிப்புகளில் உள்ளது. மணிக்கூண்டுடையதும், முகப்பில் ஒற்றைக் கோபுரத்துடனும் கூடிய வடக்குநோக்கிய இவ்வாலய கட்டுமான பணிகள் கி.பி. 1873-இல் தான் பூர்த்தியடைந்துள்ளன. அதில் பொருத்தப்பட்ட ஆலயமணி நாகை புனித வளனார் கல்லூரிக்காக வாங்கப்பட்டதாகும். அக்கல்லூரி திருச்சிக்கு மாற்றப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாலயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டிமுடிக்கப்பட்ட ஆலயத்தின் பின்னகம் (Vestry) உள்பட மொத்த நீளம் 112 அடியெனவும், நடுக்கூடம் (Nave) மற்றும் நடைகள் (Ailes) உள்பட இதன் அகலம் 40 அடி என்றும், தூயகம் கூடிய (Sanctuary) இதன் இறக்கைப்பகுதிகள் (Transepts) 64 அடியாகவும் இருந்துள்ளது. கோதிக் கட்டிடக் கலையம்சங்களுடன் கூடிய இவ்வாலயத்தின் நடுத்தூண்கள் யாவும் கருங்கல்லினால் செதுக்கப்பட்டு இழைக்கப்பட்டவை எனவும் கூறப்பட்டுள்ளது. பிற்பாடு இதன் ஒற்றைக் கோபுரம் இடிமின்னலால் பாதிக்கப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது.

இவ்வாலயத்தின் வலப்புற மற்றும் இடப்புற இறக்கைப்பகுதி கி.பி.1935-இல் நன்கொடையாளர்கள் உதவியுடன்  நீட்டித்தரப்பட்டுள்ளன. 1936 ஆம் ஆண்டு பங்குதந்தை அருட்தந்தை மோத்தாவாஸ் அடிகளாரின் குருத்துவ வெள்ளிவிழா நினைவாக, ஆலய பின்னகம் (Vestry) விரிவுபடுத்தப்பட்டது.

பேராலயம் கட்டப்பட்டு நூறாண்டுகள் (1869-1969) நிறைவடைந்ததை அடுத்து, 1969-இல் ஜூலை 6,7,8 தேதிகளில் நூற்றாண்டு விழாவும், இவ்வாண்டில் மேதகு ஆயர் டாக்டர் R. A. சுந்தரம் ஆண்டகை அவர்களின் ஆசியுடன், பேராலய முன்புறம் கணிசமான அளவுக்கு நீட்டப்பட்டு ஒற்றைக் கோபுரத்துடன் புதுப்பிக்கப்பட்டது. மேலும் பேராலய தூயகம் மற்றும் பீடப்பகுதிகள் நன்கொடையாளர் நிதிபங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பேரருள்பணி. அருள் இருதயம் அடிகளார் பேராலயப் பங்கு குருவாக பணியாற்றிய போது, ஆயர் மேதகு ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால் பேராலய முகப்பு தட்டைக் கூம்புடன் கூடிய உயர்ந்த மேடையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, 05.08.1994 அன்று பேராலய 125-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது .

பள்ளியேரி ஆலயத்தின் மகத்தான வரலாற்றை அறிந்து கொண்ட மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள், ஆலயத்தை புதுப்பித்து, 04.12.2012 அன்று அவரது திருக்கரங்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இப்பேராலயத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா 2018 ஆம் ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

சிறப்புக்குரிய மாபெரும் காலக்கட்டம்:

தஞ்சைப் பங்கின் திருஇருதய பேராலயம் கட்டப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சுமார் நான்கு நூற்றாண்டுகால தலைசிறந்த வரலாற்றையுடைய தஞ்சை பங்கும், பெருமைக்குரியதும் புனித ஆரோக்கிய அன்னை காட்சி நல்கிய வேளாங்கண்ணியை உள்ளடக்கியதும், சுமார் 500 ஆண்டுகால மகத்தான மறை வரலாற்றைக் கொண்ட தஞ்சை மறைமாவட்டமும், அவை இதுவரையிலும் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும், வரங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கிவரும் இயேசுவின் திருஇதயத்திற்கும், மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கும் மகிழ்ச்சி பொங்க நன்றி சொல்லும் மாபெரும் காலகட்டமிதுவாகும்.

பங்கின் வளர்ச்சியில் கல்வி நிறுவனங்கள்:

1.புனித அந்தோணியார் மேனிலைப்பள்ளி:

1886 ஆம் ஆண்டில் அருள்தந்தை பொலீன் அடிகளார் அவர்களால் தொடக்கப்பள்ளியாக உருவெடுத்தது. இப்பள்ளியின் முன்னாள் மாணாக்கர்கள் அறுவர் ஆயர்களாகவும், எண்ணற்ற மாணாக்கர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், உயர்ந்துள்ளது இப்பள்ளிக்கு பெருமைக்குரியதே.

2.புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி:

1890ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் அரசின் இசைவைப் பெற்று பள்ளி தொடங்கப்பெற்றது.

தலைமையாசிரியைகள், ஆசிரியைகளின் அயராத உழைப்பால் உயர்ந்த இப்பள்ளி, எளியோர் பலருக்கும் நற்கல்விக்கண் கொடுத்துச் சமூகத்தை உயர்த்தி வருகிறது.

3.புனித வளனார் மழலையர் மற்றும் ஆங்கிலத் தொடக்கப்பள்ளி:

"பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர்". (திருப்பாடல் 8:2)

✏️காவிரியின் தாலாட்டில் மழலையருக்குக் கல்வியினைக் கறைபடாது கற்பித்து மாண்புடைய மனிதராய் வளர்ந்திடவே தஞ்சை மண்ணில் அடைக்கல அன்னை சகோதரிகளால் தொடங்கப்பெற்றது இப்பள்ளி.

4.புனித வளனார் பெண்கள் மேனிலைப்பள்ளி, பூக்காரத்தெரு:

பூக்காரத்தெருவின் சுற்றுவட்டாரப் பகுதியில், பூக்கள் விற்றுப் பிழைப்பை நடத்தி வந்தவர்களின் பெண் குழந்தைகள் தங்கள் உயர்நிலைப் படிப்பைத் தொடர முடியாமலும், வாழ்க்கையில் முன்னேற முடியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையை மாற்ற புனித அடைக்கல அன்னை சபை சகோதரிகளால் தொடங்கப் பெற்றதே இப்பள்ளி.

❤️துாய மரியன்னையின் பிரான்சிஸ்குவின் மறைபரப்புக் கன்னியர் என்ற தமது அழைப்பைப் புரிந்து கொண்டு, ஏழைகளுக்காய் ஏழைகளுடன் இருந்து கொண்டு, கிறிஸ்தவ விழுமியங்களை மலரச்செய்வதே தமது கடமையாகக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

5.துாய இதய மழலையர் மற்றும் ஆங்கிலத் தொடக்கப்பள்ளி:

1928 இல் துாய மரியன்னையின் பிராசிஸ்குவின் மறைபரப்புக்கன்னியர் சபையால் தோற்றுவிக்கப் பெற்றது. 

6.திரு இதய பெண்கள் மேனிநிலைப்பள்ளி:

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் துாய மரியன்னையின் பிரான்சிஸ்கு மறைபரப்பு கன்னியர்களால் தொடங்கப்பட்டது தான் இப்பள்ளி. தரமான கல்வியையும், நல்லொழுக்கத்தையும் இப்பகுதி மாணவ செல்வங்களுக்கு இப்பள்ளி தந்துக்கொண்டிருப்பது பெருமைக்குரியதே !.

இவ்வாறு பங்கின் வளர்ச்சிக்கு இக்கல்வி நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

பங்கில் நடைபெறும் சிறப்பு தியானங்கள்:

பங்கு மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்ய ஒவ்வோர் ஆண்டும் பங்கில் சிறப்புத் தியானம் ஆகஸ்டு மாதத்தில் 3 நாட்களும், தவக்காலங்களில் 3 நாட்களும் அருட்தந்தையர்களைக் கொண்டு தியானம் நடத்தப்படுகிறது.

திரு இருதய ஆண்டவர் திருவிழா:

பேராலயம் திரு இருதய ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பேராலயம். எனவே திரு இருதய ஆண்டவர் பெருவிழா, பங்குச் சிறார்களின் உறுதிப்பூசுதல் அருட்சாதன விழா மற்றும் திவ்ய நற்கருணைப் பெருவிழா என்று முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படும். இந்த விழா எப்போதும் ஜூன் மாதம் கடைசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

திவ்விய நற்கருணைப் பெருவிழா:

திரு இருதய ஆண்டவர் திருவிழாவிற்கு அடுத்த நாள் ஞாயிறு மாலையில் திவ்விய நற்கருணைப் பெருவிழா, திவ்விய நற்கருணைப் பவனி மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் பேராலயத்தில் நடைபெறுவது பாரம்பரியச் சிறப்பாகும். பகல் முழுவதும் நற்கருணை ஆராதனை செய்வது குறிப்பிடத்தக்கது. நற்கருணை ஆராதனை கால அட்டவணையின்படி இறைமக்கள் ஆராதனை செய்வார்கள். மாலையில் தற்கருணைப் பேழையை தஞ்சை ஆயர் அவர்கள் கையில் ஏந்திவர, எண்ணற்ற குருக்களும், எண்ணிலடங்கா மக்களும் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.

தூய வியாகுல அன்னைத் திருவிழா:

வரலாற்று சிறப்புமிக்க தூய வியாகுல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா, இப்பங்கின்  பாரம்பரியத் திருவிழாவாகும்.  இவ்விழாவில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாமல் பிறமத சகோதர, சகோதரிகளும்  பங்குகொள்ளும் இத்திருவிழா, பங்கின் விழாக்களுக்கெல்லாம் மணிமகுடமாக விளங்குகிறது. செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

பாஸ்கா பெருவிழா:

ஏப்ரல் மாதத்தில் இங்கு நடைபெறும் பாஸ்கா விழா புகழ் பெற்றதாகும். இரவு திருவிழிப்பு மற்றும் திருப்பலி பேராலய வளாகத்தில் நடைபெறும். திருப்பலி முடிந்த பின்னர் அருகில் உள்ள வியாகுல அன்னை ஆலய திடலில், ஆண்டவரின் உயிர்த்த காட்சியும் உயிர்த்த ஆண்டவர் தேர் பவனியும் நடைபெறும். மாலை பாஸ்கா நாடகம் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்படுகிறது.

பேராலயத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிட 5 கன்னியர் சபைகள் உள்ளன. அவைகள்..

1.புனித அடைக்கல அன்னை கன்னியர் சபை

2.FMM புனித பிரான்சிஸ்குவின் மரியாளின் மறைபரப்புக் கன்னியர் சபை

3.சத்திய சேவா கன்னியர்சபை

4.SMMI அமல அன்னையின் சலேசிய மறைப்பரப்புச் சபை

5.இயேசுவின் சகோதரிகள் சபை

பேராலயத்தில் காணப்படும் வழிபாட்டிற்குரிய இடங்கள்:

1. தூய வியாகுல அன்னை ஆலயம்:

திருமணம் ஆகாதப் பெண்கள் இவ்வாலயத்திற்கு வந்து குத்துவிளக்கேற்றிச் செபித்தால், திருமணம் விரைவில் நடைபெறும் என்பது இன்றளவும் காணப்படும் நம்பிக்கை. கேட்டவரங்கள் அனைத்தையும் தம் மகனிடம் கேட்டுப் பெற்றுத்தருபவர் நம் வியாகுலத்தாய்.

2. தூய லூர்து அன்னைக் கெபி

3. நற்கருணை ஆலயம்

4. திரு இருதய ஆண்டவர் கெபி

5. ஆரோக்கிய அன்னை கெபி.

பங்கில் உள்ள பக்தசபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. பங்குப்பேரவை

2. மரியாயின் சேனை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை

5. மாதா சபை

6. திருமுழுக்கு ஆயத்தக்குழு

7. திருவழிபாட்டுக் குழு

8. மரியன்னை செபக்குழு

9. பங்கின் துதிக்குழு

10. பரிந்துரை செபக்குழு

11. பலிபீட சிறுவர் சிறுமியர் குழு

12. இளையோர் இயக்கம்

13. பெண்கள் பணிக்குழு

14. கிறிஸ்துவின் தம்பதியர் குடும்ப நலக்குழு

1843 முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்திரு. கிளாடுபேடின், சே.ச (1843-1853)

2. அருள்திரு. J. கோம்பே, சே.ச (1853-1854)

3. அருள்திரு. A. ரிச்சர்டு, சே.ச (1854-1856)

4. அருள்திரு. காலோ, சே.ச (1856-1860)

5. அருள்திரு. A. டி ரோச்லீ, சே.ச (1860-1861)

6. அருள்திரு. B. பர்த்தே, சே.ச (1861-1862)

7. அருள்திரு. கிளாடுபேடின், சே.ச (1862-1867)

8. அருள்திரு. யோசேப்பு லோரா, சே.ச (1867-1869) (இவர் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது)

9. அருள்திரு. A. கேஸ்டனியர், சே.ச (1869-1873)

10. அருள்திரு. A. புரூனி, சே.ச (1873-1874)

11. அருள்திரு. L. தெலசால், சே.ச (1874-1875)

12. அருள்திரு. A. மிக்கேல், சே.ச (1875-1876)

13. அருள்திரு. L. தெலசால், சே.ச (1876-1877)

14. அருள்திரு. A. புரூனி, சே.ச (1877-1878)

15. அருள்திரு. M. பிளான்க், சே.ச (1878-1881)

16. அருள்திரு. போயர், சே.ச (1881-1884) 

17. அருள்திரு. J.D. எர்ஸ்வில்லே, சே.ச (1884-1886 )

18. அருள்திரு. A. பொலீன், சே.ச (1886-1887)

19. அருள்திரு. G. பாரன்ஸ், சே.ச (1887-1889)

20. அருள்திரு. A. சவை ஞாக், சே.ச (1889-1890)

21. அருள்திரு. A. டி எடிரிச், சே.ச (1890-1893)

22. அருள்திரு. C.C. பரேட்டோ, கோவா அடிகளார் (1893-1893)

23. அருள்திரு. A. சேவியர் கொய்லோ, சவேரியார் சாமியார். கோவா அடிகளார் (1893-1915 )

24. பேரருள்திரு. யூஜின் மெடர்லே, சே.ச (1915-1928)

25. பேரருள்திரு. தமிழறிஞர் மோன்சிஞ்ஞோர் மோத்தவாஸ் அடிகளார் (1928-1957)

26. பேரருள்திரு. A. குழந்தைசாமி (1957-1967)

27. பேரருள்திரு. R. சவரிமுத்து (1967-1981)

28. பேரருள்திரு. M.M. சம்மனசு (1981-1990)

29. பேரருள்திரு. G. அருள் இருதயம் (1990-1997)

30. பேரருள்திரு. P. சேவியர் (1997-2003)

31. பேரருள்திரு. J. தேவநேசன் (2003- 2008)

32. பேரருள்திரு. A. மைக்கேல் (2008-2009)

33. பேரருள்திரு. I. பிரான்சிஸ் சேவியர் (2009-2016)

34. பேரருள்திரு. S. செபாஸ்டின் பெரியண்ணன் (2016-2018)

35. பேரருள்திரு. C. இருதயராஜ் (2018-2021)

36. பேரருள்திரு. A. M. A. பிரபாகர் (2021....

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தை பேரருட்பணி. A. M. A. பிரபாகர் அவர்களின் வழிகாட்டலில் உதவி பங்குத்தந்தை அருட்பணி.‌ S. அரவிந்த் அவர்கள்.