புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: அந்தோனியார் கோயில் தெரு, பழைய குயவர்பாளையம், 625009
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் & பங்குதந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்பணி. பெனிட்டோ, SJ
குடும்பங்கள்: 30
அன்பியம்: 1 (அதிசயம்)
மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி
திருவிழா: ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை
வழித்தடம்:
வியாகுல அன்னை திருத்தலப் பேராலயத்திலிருந்து பழைய குயவர் பாளையம் ரோடு முனிச்சாலை செல்லும் வழியில், புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
Church Map location:
https://maps.app.goo.gl/3LDMXZAoLZTruA73A?g_st=aw
வரலாறு:
பழைய குயவர்பாளையத்தில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித பதுவை அந்தோணியார் ஆலயமானது நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை வாய்ந்தது ஆகும்.
1841-ம் ஆண்டு வியாகுல அன்னை திருத்தலப் பேராலயத்திற்கு அடித்தளமிட்ட அருட்தந்தை கார்னியர் சுவாமிகள், பழைய குயவர்பாளையத்தை ஒரு பங்குத் தளமாக்கும் முயற்சி மேற்கொண்டார். அதனால் ஆழ்ந்த கத்தோலிக்க நம்பிக்கையும், எளிய வாழ்வும், கடின உழைப்பும், கைத்தறி தொழிலின் தனித்திறன் மிக்க 30 குடும்பங்களை வத்ராயிருப்புப் புதுப்பட்டி பகுதியிலிருந்து அழைத்து வந்து, கோயிலின் வடக்குப் பகுதியில் குடியிருக்க வைத்தார். அவர்களுக்கு வீடுகளையும், இரு கிணறுகளையும் அமைத்துத் தந்தார். அப்பகுதியே தற்போது புனித அந்தோணியார் கோவில் தெரு என அழைக்கப்படுகிறது.
அவர்களின் ஒற்றுமைமிக்க வாழ்வும், புனிதர் மீதிருந்த ஆழ்ந்த பற்றுதலையும் கண்ட அருட்தந்தை திரிங்கால் சுவாமிகள், 1856-ம் ஆண்டு அந்தோணியார் குருசடி ஒன்றை அமைத்துத் தந்தார். மேலும், அம்மக்களின் குழந்தைகள் ஆரம்பக் கல்வி பயிலவும், கிறிஸ்துவ மறையில் வளரவும் ஏதுவாக திண்ணைப் பள்ளியொன்றையும் ஏற்படுத்தினார். ஞான உபதேசமும் (மறைக்கல்வி) கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
1877-ம் ஆண்டில், புனிதரின் பெயரில் சிற்றாலயமாக கட்டியெழுப்பப்பட்டு, பின் 1938-ம் ஆண்டுவாக்கில் புதுப்பிக்கப்பட்டதுடன், மதுரை உயர் மறைமாவட்ட முதல் ஆயரான மேதகு லியோனார்டு ஆண்டகை அவர்களால் புனிதரின் சுரூபம் திருநிலைப்படுத்தப்பட்டு ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத் திருவிழாவும், மதுரை நகரே வியக்கும் வண்ணம் சிறப்பாக தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
1988-ம் ஆண்டில் அருட்தந்தை விக்டர் அவர்கள் பங்குத் தந்தையாக பணியாற்றிய காலத்தில், இரண்டாவது முறையாக உரோமானிய கலையம்சமும், வளைந்த மேற்கூரையும் கொண்டதாக இச்சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டு, முன்னாள் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது. அதுவே இன்று நாம் காணும் அழகிய சிற்றாலயமாகும்.
2017ம் ஆண்டில், இச்சிற்றாலயத்தின் 141-ம் ஆண்டு திருவிழா 13 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றளவும் புனிதரின் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிகமான மக்களின் பங்கேற்புடன், பிரதி வாரம் செவ்வாய்க் கிழமைகளில் புனிதரின் நவநாள் பிரார்த்தனையும், செப வழிபாடும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல அற்புதங்களும். நன்மைகளும் கிடைப்பதால், சமய வேறுபாடின்றி புனிதர் வழியாக இறை ஆசீரையும், நன்மைகளையும் பெற்றுச் செல்கின்றனர். அத்துடன் மாதந்தோறும் திருப்பலியும், தேவையான சமயங்களில் நற்கருணை ஆராதனையும், அருட்சாதன கொண்டாட்டங்களும் நடத்தி இப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் ஆன்மீக நலத்தோடு வாழ, இச்சிற்றாலயம் மிகச் சிறந்த தொண்டாற்றி வருகிறது.
ஆலய வரலாறு: உதவி பங்குதந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திருத்தலப் பேராலய பங்கு உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.


