1048 புனித பரலோக மாதா ஆலயம், செட்டிவிளை

       

புனித பரலோக மாதா ஆலயம்

இடம்: செட்டிவிளை (செல்வநகர்), படுக்கபத்து அஞ்சல், 628703

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம் தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: பங்குத்தளம் 

பங்குதந்தை அருட்பணி. R. அந்தோனிதாஸ்

குடும்பங்கள்: 450

அன்பியங்கள்: 8

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 05:30 மணி

திருவிழா: செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 29-ம் தேதி தேர்ப்பவனி, 30-ம் தேதி பெருவிழா. 

அக்டோபர் 01-ம் தேதி நற்கருணைப் பவனி (11-ம் திருவிழா), அக்டோபர் 02-ம் தேதி ஊர் பொதுஅசனம்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. M. ஜெபநாதன்

2. அருட்பணி. அந்தோணி ராபர்ட்

3. அருட்பணி. A. J. ரெக்ஸ்

4. அருட்பணி. சேவியர் அருள்ராஜ்

5. அருட்பணி. A. அகஸ்டின்

6. அருட்பணி. A. பாக்கிய ராஜா

7. அருட்சகோதரி. கிளமென்ஸ்

8. அருட்சகோதரி. L. ஹோபர்ட் மேரி

9. அருட்சகோதரி. செல்வி

10. அருட்சகோதரி. அம்புரோசினா மேரி

11. அருட்சகோதரி. பபியான்

12. அருட்சகோதரி. ஜாக்குலின்

13. அருட்சகோதரி. ரோஸ் மார்க்கரட்

14. அருட்சகோதரி. ரெக்ஸ்லின்

15. அருட்சகோதரி. அற்புதம்

16. அருட்சகோதரி. சாராள்

17. அருட்சகோதரி. மேரி செல்வ விஜயா, SSHJ

18. அருட்சகோதரி. நான்சி இக்னேசியஸ், SSHJ

வழித்தடம்: தூத்துக்குடி -கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் பெரியதாழை. பெரியதாழையிலிருந்து 1கி.மீ தொலைவில் செட்டிவிளை அமைந்துள்ளது.

திருநெல்வேலி -திசையன்விளை -மணல் மாதா திருத்தலம். மணல் மாதா திருத்தலத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் செட்டிவிளை அமைந்துள்ளது.

Church Map location:

https://maps.app.goo.gl/CPRfoqSCN8JpYXKr5

வரலாறு:

ஊர் வரலாறு:

செட்டிவிளையின் தோற்றம் கி.பி. 16 -ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. உழைக்கும் மக்களைக் கொண்ட பத்துப் பதினைந்து குடும்பத்தினரே, தற்போதைய இவ்வூரில் முதலில் குடியேறியிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இவர்கள் உழவுத் தொழில், பனைத்தொழில், குளத்தில் மீன் பிடித்தல் போன்ற தொழில்களையே முக்கியமாச் செய்து வந்துள்ளனர்.

கணக்கன்குடியிருப்பு:

கி.பி. 14,15,16 ம் நூற்றாண்டுகளில், சீரும் சிறப்புடனும் செழித்திருந்த கணக்கன் குடியிருப்பு என்ற பேரூரின் கிழக்கு கடைசியில் ஒரு பகுதியாக செட்டிமார் என்ற வணிகர்கள், வாழ்ந்து வந்த ஒரு நிலப்பகுதியாக இருந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. கணக்கன்குடியிருப்புடன் இப்பண்டைய குடியிருப்பு கி.பி. 16 ம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் குடியற்று அழிந்து போயிருக்கக்கூடும் என்று தெரிகிறது.

அரசியல் பின்னணி:

பாண்டிய நாட்டின் தென்பகுதி (தாமிரபரணிக்குத் தென்பகுதி) பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலங்களில், பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. 16-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 17-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி அழிந்து, நாயக்க மன்னர்களின் பேராட்சி நடைபெற்று வந்தது. 1750 -ம் ஆண்டிற்குப்பின் இந்த தென் நெல்லைச்சீமையில், கான் என்ற முகமதிய சிற்றரசன் இப்பகுதிகளை ஆக்கிரமித்ததால், பாண்டிய குறுநில மன்னர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். மானவீரநாடு என்று அழைக்கப்பட்ட, கடற்கரைப் பகுதி நீங்கலான தென்பாண்டி மண்டலத்தின் சிற்றரசர்களும், மக்களும் ஓடி ஒளிந்தனர். இஸ்லாமிய ஆதிக்கம் ஏற்பட்டது.

பொதுவாக, அமைதியுடன் செழிப்பான பாண்டிய மன்னர்களின் அரசாட்சிக்குப்பின், தென் பாண்டிப் பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியில் ஓரளவு அமைதியுடன் இருந்தது. ஆனால் 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில முகமதிய மன்னர்கள் தாக்குதலால் இந்த அமைதி மண்டலம் அமைதி கெட்டு சீரழிந்தது. முகமதியருடன் ஒத்துழைத்த சில குலத்தவர்களைத் தவிர மற்ற பெரும் பகுதி குலத்தைச் சார்ந்த மக்கள் மிகவும் அல்லல்பட்டு சிதறடிக்கபட்டனர். இக்கடுமையான காலக்கட்டத்தில் கடற்கரைப் பகுதி மக்கள் 16,17 ம் நூற்றாண்டு காலங்களில் போர்ச்சுக்கீசிய அரசாலும், மதகுருக்களாலும் பாதுகாக்கப்பட்டனர்.

கணக்கன்குடியிருப்பு ஊர், கிறிஸ்தவர்களும் இந்து சமய மக்களும் நிறைந்த, பல தொழில்களையும் செய்து வந்த, பல இனத்து மக்களுடன் கூடிய ஒரு பேரூர் என்று அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிகிறது.

16 -ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வூர் இயற்கைச் சீற்றங்களினாலோ, கொள்ளை நோயினாலோ, தொற்று நோய்களாலோ, அல்லது அரசுரிமை குழப்பங்களாலோ அழிந்து போயிருக்கக் கூடும். உண்மையான காரணம் எதுவென்று உறுதிபட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

இப்பேரூரின் அழிவுக்குப்பின், சில காலம் சென்றபின் இவ்வூரைச் சுற்றிலும், புத்தன்தருவை குளத்தை சுற்றிலும் பல ஊர்கள் தோன்றின. அவற்றுள் சில தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, உசரத்துக்குடியிருப்பு, கேட்டவிளை. செட்டிவிளை, தோப்புவிளை, இளஞ்சுனை போன்றவையாகும். இவ்வூர்களின் தோற்றத்தின் காலம் ஒன்றுக்கொன்று சற்று முன்பின் இருக்கக்கூடும்.

இப்பகுதியில் கிறிஸ்தவம் எப்பொழுது தோன்றியது என்பது ஒரு முக்கிய ஆராய்ச்சிக்குரிய செய்தி. இப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவத்தை தழுவியதாக ஆதாரம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. மிஷனரிகளால் ஒட்டு மொத்தமாக அல்லது பெரும் எண்ணிக்கையில் மனந்திரும்பப்பட்டதாக செய்திகள் எதுவும் இல்லை. அப்படியானால் இப்பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்தவம் இவ்வளவு அழகாக பரவலாகவும், வேரூன்றி வளர்ந்தது எப்படி என்பது சீரிய சிந்தனைக்குரியதாகும். இனிமேலும் இது ஆராயப்படாமல் புறக்கணிக்கப்படலாகாது. இம்மக்கள் தூய சவேரியாராலோ அல்லது அவருக்குப் பின்வந்த குருக்களாலோ விசுவாச மந்தையில்

இணைக்கப்பட்டதாகவும் எந்த செவிவழிச் செய்தி கூட கிடைத்ததாகத் தெரியவில்லை. சிலர் இவர்கள் தூய தோமையார் வழி கிறிஸ்தவர்கள் என்று, இரட்டைச் சிலுவை போன்ற சில சான்றுகள் மூலம் வாதிடுகின்றனர். ஆனால் இம்மக்கள் ஆழ்ந்த விசுவாச பற்றுறுதி கொண்ட இல்லற கிறிஸ்தவர்கள் மூலமே திருமறைக்கு ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் துறவறக்குருக்களும், பிற்காலத்தில் இவர்கள் இறை விசுவாசம் பெற உதவியிருக்கலாம்.

செட்டிவிளை ஊர் தோன்றிய காலத்தில் இவ்வூரில் வாழ்ந்த மக்கள் வறுமை, கல்வி அறியாமை, எளிய மனம், இறைப்பற்று மிக்கவர்களாக வாழ்ந்தனர். பொதுவான கோயில் ஊரில் இல்லாததால் அருகில் உள்ள மணப்பாடு, பெரியதாழை போன்ற ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். திருவருட்சாதனங்கள் நிறைவேற்றுவதற்காக குருக்கள் யாரும் அன்றையக் காலக்கட்டங்களில் இவ்வூருக்கு வந்ததாகத் தெரியவில்லை. ஐரோப்பிய குருக்கள், சாத்தான்குளம், அணைக்கரை, சொக்கன்குடியிருப்பு முதலிய ஊர்களுக்கு வந்த காலங்களில் இம்மக்கள் அங்கு சென்று திருவருட்சாதனங்கள் பெற்று வந்தனர்.

பரலோக அன்னைக்கோயில் கண்டுபிடிப்பு (மணல் மாதா திருத்தலம்):

கி.பி. 18 -ம் நூற்றாண்டில் தான் அருகிலுள்ள முதலூர், இடையன்குடி போன்ற ஊர்களில் பிரிவினை புரோட்டஸ்டண்ட கிறிஸ்தவம் தோன்றத் தொடங்கியது. ஆனால் அப்பிரிவினை கிறிஸ்தவத்தால் இம்மக்கள் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை.

இக்காலக்கட்டத்தில் தேவ அன்னை அற்புதமாக தனது கோயிலை, அழிந்து மறைந்து போன, ஓரளவு மறைக்கப்பட்ட ஊரின் பகுதியிலிருந்து தன்னை வெளிப்படுத்தி மக்களை ஒன்றுபடுத்த திருவுளங்கொண்டார். பழம் பெருமையும் வளமும் கொண்ட கணக்கன்குடியிருப்பு முழுவதும் அழிவுற்ற நிலையில், அன்னையின் கோயில் மட்டும் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெளிப்பட்டுள்ள விதம் உண்மையில் ஒரு புதுமையே.

செட்டிவிளை கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள், கோயில் இல்லாமல், தாயற்ற பிள்ளை போல் இருந்த சமயத்தில், புத்தன்தருவையைச் சேர்ந்த இடையர்குல மக்கள் மூலம், தேரியில் காட்டுப்பகுதியில் சிலுவை ஒன்று வெளிப்பட்டதைக் கேள்விப்பட்டு, ஆச்சரியத்திலும், அளவற்ற மகிழ்ச்சியிலும், திரண்டு சென்று கோயிலைச் சுற்றி தோண்டி, கோயிலை வெளிப்படுத்தினர்.

கோயிலின் உள்ளே சென்று தேவ அன்னையின் அழகிய சுரூபத்தைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினர். பெற்ற தாயினும் உற்றதாய் நமக்கு வலியவந்து, காட்சி தந்து கருணை செய்தாள் என்று மகிழ்ந்து அன்று முதல் தீப ஆராதனையும், செபங்களும் செய்து வழிபட்டு வந்தனர். இக்கோயிலைச் சுற்றிதான் அன்றும், இன்றும் தங்கள் சொந்த நிலங்களில் தொழில் செய்து வருகின்றனர். இப்பெரிய நிகழ்ச்சி நடந்த காலம் உறுதியாக ஆண்டு நிர்ணயிக்கப்படாவிடினும் ஏறத்தாழ ஏழு தலைமுறை காலத்துக்கு முற்பட்டது என்று இவ்வூரைச் சார்ந்த பெரியவர்கள் அனைவரும் செவிவழிச் செய்தியாகக் கூறுகின்றனர்.

இவ்விதமாக அரை நூற்றாண்டு காலமாக இவ்வூர் மக்கள் தங்களுக்குத் தெரிந்த முறையில் இக்கோயிலில் வழிபாடுகள் நடத்தி, கிறிஸ்து பிறப்பு பண்டிகைக் காலங்களில் புனிதர்களின் நாடங்களை நடித்து மகிழ்ச்சியுடன் சுதந்திர மக்களாக வாழ்ந்து வந்தனர்.

கோயில் நிர்வாகம் கைமாறியது:

காட்டில் கண்டெடுக்கப்பட்ட புதுமைப்பரலோக அன்னையின் கோயில் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. கோயில் உள்ள ஊர்களெல்லாம், நடந்தும், குதிரை போன்ற வாகனங்கள் மூலமும் சுற்றி அலைந்தும் வேதம் போதித்து வந்த ஐரோப்பிய குருக்களுக்கும் செய்தி எட்டியது. ஐரோப்பிய குரு வந்து கோயிலைப் பார்வையிட்டார். செட்டிவிளை மக்கள் இந்தக் கோயில் தங்களுக்கே சொந்தம் என்றும், உரிமையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்றும் வாதிட்டனர். ஆனால், கிறிஸ்தவ கோயில் நிர்வாகம் கிறிஸ்தவ மிசனுக்கே சொந்தம் என்று அரசு அதிகாரிகள் கூறியதால், ஊர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அதன் பின்னரே செட்டிவிளை ஊரின் மேற்குப்பகுதியில் ஓர் ஓலைக்கோயிலை அமைத்து, இதுகாறும் வழிபட்டு வந்த புதுமைப் பரலோக அன்னையின் சுரூபத்தை மட்டும் எடுத்து வந்து தங்களின் ஓலைக்கோவிலில் வைத்து வழிபட்டு வந்தனர்.

இப்படியாக வழிபட்டு வந்த நாட்களில் தேரியில் இருந்து வெளிப்பட்ட அன்னையின் கோயில் சரியான பராமரிப்பு இன்றியே பக்தர்களின் வழிபாட்டு தலமாக பல காலம் அமைதியாக இருந்து வந்தது. சொக்கன்குடியிருப்பில் சங்கைக்குரிய இஞ்ஞாசியார் சுவாமி பங்கு பொறுப்பேற்றபின், கோயிலுக்கு திருவிழா எடுப்பதிலும், கோயிலை பேணி பாதுகாப்பதிலும் அதிக அக்கறையும் முயற்சியும் எடுக்கப்பட்டது. அவர்களுக்குப்பின் பொறுப்பேற்ற சொக்கன்குடியிருப்பு பாருத்தந்தையர்களும், சொக்கன்குடியிருப்பு மக்களும், பரலோக அன்னைக்கு, மணல் மாதா என்ற புதியபெயர் வழங்கி, அன்னையின் கோயிலில் வெகு சிறப்பாக வளர்ச்சிப்பணி செய்துள்ளனர்.

கணக்கன் குடியிருப்பு அதாவது இப்போது இருக்கும் அதிசய மணல் மாதா கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட தூய பரலோக அன்னையின் சுரூபம், செட்டிவிளை குடிசைக் கோயிலில் நிலைநிறுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள், கூரைக்கோயில் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது. ஆனால் புதுமை பரலோக அன்னையின் சுரூபம் இறையருளாலும், மக்களின் பெரும்முயற்சியாலும் நெருப்பிலிருந்து மீட்கப்பட்டது.

பரலோக அன்னையின் கோயில் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், செட்டிவிளை மக்கள், சாத்தான்குளம், சொக்கன்குடியிருப்பு மிஷன் பங்குத்தந்தையர்களிடம் கோபம் கொண்டு, தங்களின் ஆன்மீக பராமரிப்புக்கு பெரியதாழை பங்குக் குருவின் உதவியை நாடினர். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பெரியதாழை பங்குத்தந்தையர்களும் மிகவும் மனமகிழ்வுடன், இவ்வூர் மக்களின் ஆன்மீகத்தேவைகளை கவனித்து வந்தனர். அதன் காரணமாக, கூரைக்கோயில் எரிந்த இடத்தில், பெரியதாழையின் பங்குத்தந்தையாக இருந்த இராயப்ப நாதர் என்ற ஐரோப்பிய குருவின் உதவியாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் ஒரு சிறிய, காரை கட்டிடக் கோயில் எழுப்பப்பட்டது. அதில் புதுமை பரலோக அன்னையின் சுரூபமும், பிணாங்கில் தொழில் செய்த இவ்வூர் மக்களின் பெருமுயற்சியால் ஐந்தடி உயரமுள்ள அழகிய தேவ அன்னையின் சுரூபமும் நிறுவப்பட்டன.

அதன்பின் 1947-ம் ஆண்டு பெரியதாழை பங்குத்தந்தை சங்கைக்குரிய லாரன்ஸ் சேவியர் சுவாமி அவர்களின் முயற்சியால், மூன்று ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டு, அதில் தற்போதைய கோயிலுக்கான அடித்தளம் இடப்பட்டது. இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப்பின், 1975 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் நாள், அப்போதைய பெரியதாழை பங்குத்தந்தை பி. எல். எப்ரேம் சுவாமி அவர்களின் பெரும் முயற்சியால் கோயில் அழகாக கட்டி முடிக்கப்பட்டு, மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அருள்பொழிவு செய்யப்பட்டது.

மேதகு ஆயர் அமலநாதர் அவர்களின் பேராதரவாலும், அப்போதைய சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக்குரு அருட்திரு. தேவசகாயம் அடிகளாரின் பெருமுயற்சியாலும், 15.09.1992 அன்று செட்டிவிளை தனிப்பங்காக உதயமானது.

முதல் பங்குத்தந்தை அருட்திரு. அமலதாஸ் அடிகளாரின் முயற்சியால் கோயிலுக்கு முன் மண்டபமும் அமைக்கப்பட்டது. கோயிலின் உள்தளமும் மொசைக் போடப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.

அழகிய இரட்டைக் கோபுரங்கள் கட்டப்பட்டு 28.09.2022 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆலயம் கட்டப்பட்டதன் பொன்விழா (1975-2025) 28.10.2025 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செட்டிவிளையின் சிற்பி:

அருட்தந்தை எப்ரேம் சுவாமி அவர்கள் பெரியதாழை பங்கில் 1974 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து, 1947 ஆம் ஆண்டு அருட்தந்தை லாரன்ஸ் சுவாமி அவர்களால் அஸ்திவாரமிடப்பட்டு, தரைமட்டம் வரை கட்டிவைக்கப்பட்ட ஆலயத்தை, மிகுந்த முயற்சி செய்து கட்டியெழுப்பி 28.10.1975 அன்று அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்தந்தை எப்ரேம் அவர்கள் ஓய்வெடுக்க விரும்பி, செட்டிவிளையில் குருக்கள் இல்லம் அமைத்து, இங்கு தங்கியிருந்தார். அனுதின திருப்பலி, ஆன்மீக கடமைகள் மட்டுமல்லாது, இலவச மருத்துவ பணிகளையும் செய்து வந்தார். 1992 இல் செட்டிவிளை தனிப்பங்கான பின்னர், சிலகாலம் கோட்டார் மறைமாவட்டம் வெள்ளமடத்தில் தங்கி முதியவர்களுக்கும், கருணை இல்ல பிள்ளைகளுக்கும் பணிபுரிந்தார். இறுதியில் தூத்துக்குடி குருக்கள் ஓய்வு இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது 18.04.1998 அன்று இறைவனடி சேர்ந்தார். செட்டிவிளை ஊர்மக்கள் அன்னாரின் உடலை தூத்துக்குடியிலிருந்து, செட்டிவிளைக்கு கொண்டு வந்து, ஆலயத்தின் அருகில் அடக்கம் செய்தனர். 

செல்வநகரின் தனிச் சிறப்பான முப்பெரும் நாடகங்கள்:

அக்காலத்தில் காலரா போன்ற கொடிய நோயினால் ஏராளமான மக்கள் மடிந்தனர். மருத்துவமனை வசதிகளும் இல்லை. ஆகவே நாடக இயக்குநரான “மிக்கேல் அன்னாவி” அவர்களிடம் போலையார்புரம், சொக்கன் குடியிருப்பு, தட்டார்மடம், பொத்தகாலன்விளை, கேட்டவிளை, கொம்மடிக்கோட்டை ஆகிய ஊர்களைக் சேர்ந்த பெரியவர்கள் சென்று இந்த நோய்தீர ஒரு வழி கேட்டனர். அவர் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருந்த புனிதர்களின் வரலாற்றை, ஒவ்வொரு ஊருக்கும் குலுக்கல் முறையில் ஒவ்வொரு புனிதரின் வாழ்க்கை வரலாற்றை கொடுத்தார். செட்டிவிளை ஊருக்கு புனித பார்பரம்மாள், புனித அந்தோனியார், புனித எவோலின் அம்மாள் ஆகிய நாடகங்கள் கிடைத்தது. 

அன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டிசம்பர் மாதம் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் புனித அந்தோனியார் நாடகமானது செட்டிவிளை ஊர் பெரியவர்களால் சிறப்புற நடித்து காண்பிக்கப்படுகிறது. மேலும் புனித எவோலின் நாடகமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை டிசம்பர் 25,26 தேதிகளிலும், புனித பார்பரம்மாள் நாடகமானது டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் நடித்துக் காண்பிக்கப்படுகிறது.

இம்மூன்று நாடகங்களின் போதும் மக்கள் இறைபக்தியுடன் வந்து நேர்ச்சை செய்வார்கள். நம்பிக்கையுடன் அவர்கள் வேண்டிக் கொள்கிறவை நிறைவேறும் புதுமைகள் ஏராளம்.. ஏராளம்..

சவரிமுத்து புண்ணியவாளர்:

செட்டிவிளை ஊர் தோன்றிய காலம் முதல், செட்டிவிளை ஊரில் துறவியாக, ஆண்டியாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் சவரிமுத்து புண்ணியவாளர் ஆவார். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குடி தண்ணீர் கிணற்றை பெருமுயற்சி எடுத்து அமைத்து தந்தவர் அவரே. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இவ்வூர் மக்கள் குருசடி எழுப்பி பொது கல்லறைத்தோட்டம் அமைத்துள்ளனர். கோயிலில் தினமும் அவரது ஆன்ம இளைப்பாற்றிற்காக வேண்டுதல் நடத்தப்படுகிறது. அவரது உதவி இன்றும் மக்களுக்கு கிடைத்து வருகிறது என்று நம்பப்படுகிறது.

ஆலயத்தின் சிறப்புகள்:

வரலாற்றுச் சிறப்புமிக்க அதிசய மணல்மாதா திருத்தலத்திற்கு மிக அருகில், ஏறத்தாழ 500 மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பரிசுத்த இவ்வாலயத்திலுள்ள மரத்தாலான பரலோகத்தாயின் சுரூபம், புதைந்திருந்த அதிசய மணல்மாதா புதுமைக் கோயிலிலிருந்து எடுக்கப்பட்ட புதுமைச் சுரூபம் ஆகும்.

அன்னைக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்க இயலாத அளவுக்கு பஞ்சம் நிலவிய சூழலில், சவரிமுத்து புண்ணியவாளன் அவர்களுக்கு பரிசுத்த பரலோகத்தாய் கனவில் தோன்றி, "தண்ணீரில் விளக்கெரி" என்று கூறி மறைந்தார். அன்னையில் சொற்படி, அவரும் ஊரின் புதுமைக் கிணற்றில் தண்ணீர் எடுத்து விளக்கேற்ற, விளக்கு இரவு பகலாய் சுடர்விட்டு எரிந்த அற்புதம் இவ்வாலயத்தில் நடைபெற்றது.

அன்றுமுதல் இன்றுவரை தண்ணீரில் ஒளியேற்றிய தங்கத்தாய், தம்மைத் தேடிவரும் பிள்ளைகளின் வாழ்விலும் ஒளி ஏற்றுவார் என்பது இவ்வாலயத்தைத் தேடிவரும் மக்களின் வாழ்வியல் அனுபவம்.

அருட்சகோதரிகளும் பணிகளும்:

வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள்:

பெரியதாழை பங்கின் கிளைப்பங்காக செட்டிவிளை செயல்பட்டு வந்த போது, பங்கிலிருந்து வந்த ஆன்மீகப் பணி செய்து வந்தனர். 1946 ஆம் ஆண்டு முதல் செட்டிவிளையில் செயல்பட்டு வந்த பள்ளிக் கூடத்திலும் கல்விப் பணி செய்து வந்தனர். 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1978 முதல் மீண்டும் கல்விப் பணி செய்தனர். 1984 இல் அருட்சகோதரிகள் இல்லம் அமைக்கப்பட்டது. அந்த இல்லத்தில் தங்கி 1993 வரை பணியாற்றினர்.

இயேசுவின் திருஇருதய சபை அருட்சகோதரிகள்:

21.01.1994 முதல் பணிபுரியத் தொடங்கினர். மணல் மாதா ஆலயத்திற்கு செல்லும் வழியில் 21.11.1994 இல் புதிய நிலம் வாங்கப்பட்டு, அதில் புதிய இல்லம் கட்டப்பட்டு 21.12.1996 இல் மேதகு ஆயர் அமலதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புனித வளன் மருத்துவமனை:

21.12.2005 முதல் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வேலூர் திருஇருதய சபை அருட்சகோதரிகள் சிறந்த முறையில் மருத்துவப்பணி செய்து வருகின்றனர்.

தூய வளன் நடுநிலைப் பள்ளி:

முதலில் திண்ணை பள்ளிக்கூடமாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே ஓலைக்கூரை பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு 26.11.1931 முதல் 29.11.1939 வரை ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வந்தது.

30.09.1940 இல் பள்ளிக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது. 07.06.2000 முதல் தூய வளன் நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

பங்கில் உள்ள கெபிகள்:

1. தூய லூர்து அன்னை கெபி

2. புனித சவேரியார் கெபி

3. தூய ஆரோக்கிய அன்னை கெபி

4. புனித அந்தோனியார் கெபி

5. தூய மிக்கேல் அதிதூதர் கெபி

6. தூய பரலோக அன்னை கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர் சபை

3. புனித மரிய கொரற்றி சபை

4. புனித தோமினிக் சாவியோ சபை

5. தூய அமலோற்பவ அன்னை சபை

6. தூய பரலோக அன்னை இளைஞர் சபை

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. பரிசுத்த திருக்குடும்ப சபை

9. செட்டிவிளை புனித அந்தோனியார் சபை

10. பீடப்பூக்கள்

11. ஆலய பணியாளர்கள்

12. பாடகர்குழு

13. பங்குப் பேரவை பணிக்குழு

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:

1. அருட்பணி. S. அமலதாஸ் (1992-1997)

2. அருட்பணி. J. R. வெனிசு குமார் (1997-2002)

3. அருட்பணி. N. S. பன்னீர் செல்வம் (2002-2006)

4. அருட்பணி. வெனான்சியூஸ் (2006-2007)

5. அருட்பணி. வெனோபர் (2007-2008)

6. அருட்பணி. செல்வ ஜார்ஜ் (2007-2013)

7. அருட்பணி. S. பீற்றர்பால் (2013-2018)

8. அருட்பணி. ததேயுஸ் ராஜன் (2018-2023)

9. அருட்பணி. S. ஜஸ்டின் (2023-2024)

10. அருட்பணி. R. அந்தோணிதாஸ் (2024......

ஆலய வரலாறு: ஆலய பொன்விழா மலர் 2025

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு: ஆலய உறுப்பினர் திரு. செல்வகுமார் அவர்கள்.