புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: சந்தைப்பேட்டை
ஆலய முகவரி:
புனித அந்தோனியார் ஆலயம், சந்தைப்பேட்டை, காமராஜர் சாலை, மதுரை, 625009
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
அதிபர் மற்றும் பங்குதந்தை அருட்தந்தை. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்தந்தை. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்தந்தை. பெனிட்டோ, SJ
குடும்பங்கள்: 43
அன்பியம்: 1 (நீதி அன்பியம்)
வழிபாட்டு நேரங்கள்:
மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மாலை 07:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
திருவிழா:
ஜூலை மாதத்தில் 5 நாட்கள் நடைபெறும்.
வழித்தடம்:
மதுரை கீழவாசல் பகுதியில் இருந்து தெப்பக்குளம் செல்லும் வழியில், காமராஜர் சாலை இடைப்பட்ட பகுதியில் கீழ சந்தைப்பேட்டை அமைந்துள்ளது.
Church Map location: St. Anthony's Church Santhaipettai
https://maps.app.goo.gl/FCoWCBNCcWB3MXLZ7
ஆலய வரலாறு:
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையம்பதியிலே, நான்மாடக்கூடலிலே கீழ்த்திசையில், சந்தைப்பேட்டை பகுதியில், வியாகுல அன்னை திருத்தலப் பேராலயத்தின் கிளைப்பங்குக் கோவிலாய் இறைப் பிரசன்னம் நிறைந்து, எழில் தோற்றத்துடன் காட்சி தரும் புனித அந்தோணியார் ஆலய வரலாற்றைக் காண்போம்…
இப்பகுதியில் இந்து, இஸ்லாம் போன்ற பிற மதத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவிலும், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த குடும்பங்கள் மிகக் குறைந்த அளவில் இருந்த போதிலும், 1950 ஆம் ஆண்டின் இயேசு சபைக் குருக்கள் சிறிய அளவிலான புனித அந்தோணியார் ஆலயத்தை உருவாக்கி, கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைத்து, ஆன்மீக எழுச்சிக்கு வித்திட்டிருக்கின்றனர். பெரியவகளும் சிறுவர்களும் ஒன்றுகூடி தினமும் இரவு செபம் செய்திருக்கின்றனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், பிற்பகல் வேளையிலே அமலவை கன்னியர்கள் இங்கு வந்து, குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மறைக்கல்வி கற்றுத் தந்துள்ளனர். துதிகளும், செபங்களும் இருக்கும் இடத்தில் புதுமைகள் பெருகுமல்லவா! அதிலும் கோடி அற்புதராயிற்றே புனித அந்தோணியார்! சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாவலராய், தன்னை அண்டி வந்து கசிந்துருகி மன்றாடும் மாந்தருக்கு இறை ஆசீரைப் பெற்றுத் தருகின்ற புனிதராய் இவ்விடத்தில் கொலு வீற்றிருக்கின்றார்.
தொடர்ந்து வந்த காலகட்டங்களில் தொழில், கல்வி, வீடு போன்ற பல்வேறு காரணங்களால் கிறிஸ்தவக் குடும்பங்கள் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர, குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. எனவே அப்போது மறைமாவட்ட பொருளாளராக இருந்த அருட்தந்தை ஏசுதாசன் அடிகள் (1969-1985) மக்களைச் சந்தித்து, முனிச்சாலை பகுதியில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆதலால் அப்பகுதியில் ஒரு அந்தோணியார் ஆலயம் கட்டப்போகிறோம். இங்கே மக்களின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே இந்த ஆலயத்தை மூடி விடலாம் என்று கூறி, உள்ளே இருந்த சுரூபங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, ஒரு அடி உயரமுள்ள சிறு அந்தோணியார் சுரூபத்தை மட்டும் உள்ளே வைத்துக் ஆலயத்தை பூட்டிச் சென்றார். ஆனால் இந்த ஆலயத்தில் மெழுகுத்திரி ஏற்றிவைத்து, செவ்வாய்க் கிழமைகளில் மக்கள் செபித்தனர்.
சில மாதங்களுக்குப் பிறகு அருட்தந்தை. ஏசுதாசன் அடிகள் வந்து பூட்டிய கோவிலின் கதவுகளைத் திறந்தார். புனித அந்தோணியார் கோயில் இவ்விடத்தில் என்றென்றும் இருக்கும்படி அந்தோணியார் ஆசிப்பதாகக் கனவில் தூண்டப்பட்டதை எடுத்துரைத்தார். பின்னர் அருட்தந்தை கோவிலைச் சற்றே புதுப்பித்து பெரிய, எழில்மிகு அந்தோணியார் சுரூபத்தைக் கொண்டு வந்து வைத்தார். 'இறைப் பிரசன்னமும், அந்தோணியாரின் பரிந்துரையும் இவ்விடத்தில் நிரம்பியிருக்கின்றதை உணர்கிறேன். உங்கள் பாதுகாவலரிடமே உங்களை ஒப்படைக்கிறேன்' சந்தோசம் தானே!' என்று கூறி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திச் சென்றார். அன்றிலிருந்து இறை புகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை பக்தி முயற்சிகள், அன்னை மரியாளின் மே மாத வணக்க செபங்கள் தொடங்கின. திருமண வெள்ளி விழா திருப்பலி கொண்டாட்டங்களும் சிறப்பிக்கப்பட்டு, ஆண்டுதோறும் புனிதரின் திருவிழா கொண்டாடப்பட்டது. தெரு முழுவதும் பந்தல், மேடை அமைத்து திருப்பலி நிறைவேற்றி, முடிவில் அன்பின் விருந்தும் வழங்கப்பட்டது.
அருட்தந்தையர்கள் பேராயரின் அனுமதியுடன் அருகில் உள்ள காலி இடத்தையும் சேர்த்து கோவிலைச் சற்றே பெரியதாக்கினர்.
பல நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பால் புனிதரின் ஆலயம் 1996 ஆம் ஆண்டில் மெருகூட்டப்பட்டது. மாதந்தோறும் திருப்பலி, அன்பியக் கூட்டங்கள் இரவு செபம், புனிதரின் பக்தி முயற்சிகள் போன்ற ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டது.
"இதோ உலக முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" - மத் 28: 20 என்று மொழிந்த ஆண்டவர் இயேசுவின் திவ்விய நற்கருணைப் பேழையை கி.பி. 2000 யூபிலி ஆண்டின் பரிசாக புனிதரின் கோயிலில் நிறுவினார் பங்குதந்தை அருட்தந்தை. M. லாரன்சு, SJ அவர்கள். இறையருள் பொங்கி வழிந்தது. நாடி வந்த மக்கள் இறையாற்றல் பெற்றுச் சென்றனர். இக்கோவிலின் வரலாற்றில் அமலவைச் சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. திருப்பலித் தயாரிப்பு, பீட அலங்காரம், பாடல், வீடு சந்திப்பு, இன்னும் ஊக்கத்துடன் பயணித்து வருகின்றனர்.
தொடக்கம் முதல் இன்றுவரையிலும் இயேசு சபை அருட்தந்தையர்களின் அரவணைப்பிலும், அமலவை அருட்சகோதரிகளின் ஆதரவிலும் இந்த ஆலயம் இன்றளவும் சிறப்புற செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆலயத்தை புனரமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.
தகவல்கள்: உதவி பங்குதந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: வியாகுல அன்னை திருத்தலப் பேராலய பங்கு உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.




