409 புனித அந்திரேயா ஆலயம், ஆற்றூர்


புனித அந்திரேயா ஆலயம்

இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். (மத்தேயு 4:18).

இடம் : ஆற்றூர்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : புத்தன்கடை

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி. J. செல்வராஜ்

குடும்பங்கள் : 112
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு

செவ்வாய் நண்பகல் 12.00 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள், திருப்பலி.

புதன், சனி திருப்பலி : காலை 06.30மணிக்கு

வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

திருவிழா : நவம்பர் 30 ம் தேதியை அடுத்த ஞாயிறு நிறைவடையும் வகையில் ஐந்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்சகோதரி மேரி ஜோஸ்பின்
2. அருட்சகோதரி பெல்சி பிரான்சிஸ்
3. அருட்சகோதரி ஜான்சி அல்போன்ஸ்.

வழித்தடம் : மார்த்தாண்டம் - குலசேகரம் சாலையில், மார்த்தாண்டத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் ஆற்றூரில் புனித அந்திரேயா ஆலயம் அமைந்துள்ளது.

பேருந்துகள்: மார்த்தாண்டத்திலிருந்து தடம் எண் 89 A, B, C, D, E, G, H, M.
நாகர்கோவிலிலிருந்து - 316, 16D. இறங்குமிடம் ஆற்றூர்.

Location map : https://g.co/kgs/SMKrdS

வரலாறு :

முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் தாமிரபரணி, பரளியாறு ஆற்றங்கரைகளின் பசும் மரச் சோலைகளுடன், சீனாய் மலை குன்று போல உயர்ந்த இடத்தில் இயற்கை எழில் நிறைந்த, தமிழும் மலையாளமும் கொஞ்சிக் குலவிடும் சிறப்பு வாய்ந்த அழகிய ஊர் தான் ஆற்றூர்.

இவற்றுடன் குமரி மாவட்டத்தின் அழகையெல்லாம் மொத்தமாக உள்ளடக்கி இதமான காலநிலை நிலவுகின்ற, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகிற கோதையாறு அணை, சிற்றார் அணை, பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டிப்பாலம், குமரி குற்றாலமாகிய திற்பரப்பு நீர்வீழ்ச்சி, சிதறால் மலைக்கோயில், ஆகிய இடங்களுக்கு செல்லும் முகத்துவாரமாக ஆற்றூர் விளங்குவது தனிச் சிறப்பு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆற்றூரில் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து மண் சுவராலான ஓலைக் கொட்டகை அமைத்து, புனித அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர்.
பல சமய, இன மக்களும் இவ்வாலயத்தை ஒரு புனித இடமாகக் கருதினர் என்றால் அது மிகையாகாது.

சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கல்லினால் சுவர் எழுப்பி, ஓட்டுக்கூரை ஆலயம் அமைத்து வழிபட்டு, புத்தன்கடை பங்கின் கிளைப்பங்காக ஆற்றூர் செயல்பட்டு வந்தது. இவ்வாலயம் கல்லறை தோட்டத்திற்கருகே தற்போதும் உள்ளது.

தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், சில காலத்திற்குப் பிறகு மாதத்திற்கு ஒருமுறையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

புனிதரின் பரிந்துரையில் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வந்ததால் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அப்போதைய புத்தன்கடை பங்குத்தந்தை அருட்பணி. மரியதாசன் அவர்களால் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி. சார்லஸ் பொரோமியோ அவர்களால் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.05.1979 அன்று மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அது முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

புத்தன்கடை பங்கில் பொறுப்பேற்றிருந்த அருட்பணியாளர்களின் அரவணைப்பில் ஆற்றூர் இறை சமூகம் சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்தது. குறிப்பாக அருட்பணி. சூசை, அருட்பணி. இயேசு ரெத்தினம் ஆகியோர் பணிக்காலத்தில் ஆற்றூரில் பல்வேறு ஆன்மீக வளர்ச்சிப் பணிகளை செய்தனர்.

அக்காலத்தில் 9 -ஆம் திருவிழா நடைபெறும் நாளில் மூன்று தேர்களில் புனித அந்திரேயா, புனித செபஸ்தியார், தூய மரியன்னை சுரூபங்கள் ஊரைச் சுற்றி வலம் வரும். அவ்வேளையில், நோயினால் (காலரா, வைசூரி போன்ற நோய்கள்) பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் தேர்கள் கடந்து செல்லும் போது புனித செபஸ்தியார் சுரூபத்திலிருந்து அம்புகள் தெறித்து விழுந்து கிடக்கும். மறுதினம் பிறசமய மக்களின் கண்களிலே தென்படுகின்ற இந்த அம்புகளை அம்மக்கள் பக்தியுடன் எடுத்து, கொண்டு வந்து ஆலயத்தில் ஒப்படைப்பார்கள். இவர்களது நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை; ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது. சாலமோனின் ஞானம் 16:12

பங்கு மக்கள் மற்றும் பங்குத்தந்தையின் முயற்சியின் காரணமாக 24.05.1991 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் கோட்டார் மறை மாவட்டத்தின் 100 வது பங்காக (தனிப் பங்காக) ஆற்றூர் உயர்த்தப் பட்டது.

மாத்தூர், ஏற்றகோடு, தச்சூர், மாத்தார் ஆகிய பங்குகளை ஆற்றூரின் கிளைப்பங்குகளாக கொண்டு, அருட்பணி. மைக்கேல் ஏஞ்சல் அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, ஆற்றூரின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, பல பக்த சபைகள் தோற்றுவிக்கப் பட்டதுடன், இளைஞர்களையும் பங்கு மக்களையும் ஒருங்கிணைத்து, சிறப்பாக வழி நடத்தினார்கள்.

1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையின் போது, சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிய போதும், இப் பகுதி உயரமான இடமாக அமைந்திருந்ததால், இது ஒரு தனித்தீவாக விடப்பட்டு இறைவனின் அருளால் மக்கள் அனைவரும் பாதுகாக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. பிரான்சிஸ் போர்ஜியா அவர்களின் பணிக்காலத்தில் பங்கின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு ஒன்றேகால் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணி. ஜெரால்டு ஜஸ்டின் அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகள் நடந்து வரும் வேளையில் பணிமாற்றம் பெற்று அருட்பணியாளர் சென்று விட, தொடர்ந்து வந்த அருட்பணி. லாரன்ஸ் அவர்களின் பணிக்காலத்தில் அழகிய புதிய ஆலயம் கட்டப்பட்டு 26.05.2012 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அருட்தந்தை அவர்கள் பங்கு மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. அஜன் சார்லஸ் அவர்கள் நல்ல பாடகராக இருந்ததுடன், திருவழிபாடுகளை சிறப்பாக அமைத்து ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி சென்றார்.

புதியதாக கட்டப்பட்ட குருசடியில், இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட பரிசுத்த திருச்சிலுவையை மையமாகவும், புனித அந்தோனியார் மற்றும் புனித ஆரோக்கிய அன்னையை இரண்டு பக்கங்களில் கொண்டும், நடுப்பகுதியில், கல்லறை தோட்டப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைமையான கற்சிலுவை வைக்கப்பட்டும், மக்களின் ஜெப தேவைகளை நிறைவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கற்சிலுவையில், மக்கள் எண்ணெய் மெழுகி விசுவாசத்துடன் தங்களது உடலில் தேய்த்து நலம் பெறுகின்றனர்.

"என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்" என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக! உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக! 1அரசர்கள் 8: 29,30

பலதரப்பட்ட மக்களும் விசுவாசத்துடன் இந்த ஆலயத்திலும், குருசடியிலும் வந்து ஜெபித்து செல்வதை காண முடிகிறது.

ஆற்றூர் பகுதியில் வாழும் பிறசமய மக்களால் அந்த காலத்தில் இருந்தே பள்ளிநாயன் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற புனித அந்திரேயா -வை, இன்றும் அதே பக்தியுடன் அம்மக்கள் வழிபடுவதை காணும் போது பல்சமய ஒற்றுமையை உணர முடியும்.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. J.செல்வராஜ் அவர்கள் பணிக்காலத்தில் புனித அந்தோனியார் குருசடி அழகுற புதுப்பிக்கப் பட்டது. ஆலயத்திற்கு நிலம் வாங்கப் பட்டது. மேலும் பல்வேறு வளர்ச்சி காரியங்கள் செய்யப்பட்டதுடன், பங்கு மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி, ஆற்றூர் இறை சமூகத்தை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. Fr. L. மைக்கேல் ஏஞ்சல் (24.05.1991 - 27.05.1993)
2. Fr. M. பிரான்சிஸ் போர்ஜியா (27.05.1993 - 08.06.1998)
3. Fr. A. சேவியர் ராஜா (08.06.1998 - 15.05.2000)
4. Fr. T. ஜாண் ரூபஸ் (15.05.2000 - 06.05.2002)
5. Fr. D. ஜெரால்டு ஜஸ்டின் (06.05.2002 - 19.05.2008)
6. Fr. R. லாரன்ஸ் (21.05.2008 - 30.06.2012)
7. Fr. P. அஜன் சார்லஸ் (30.06.2012 - 20.06.2015)
8. Fr. S. மரிய செல்வராஜ் (20.06.2015 - 27.08.2015)
9. Fr. J. செல்வராஜ் (27.08.2015 முதல் தற்போது வரை...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. J. செல்வராஜ்.